ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது, கத்தோலிக்க திருச்சபையின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக, இது தொடர்பான முக்கியமான பல விபரங்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? யாருடைய பின்னணியில் இடம் பெற்றது? அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் யார் ? என்பன போன்ற கேள்விகளுக்கு இறுதியான விடைகளைத் தேடுவதுதான் முக்கியமானது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் இது பற்றிய விசாரணைகளை தொடங்கியிருப்பதாக அறிவித்தது.
ஆனால், புதிதாக எந்த விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
ஏற்கெனவே, விசாரணைகளை முன்னெடுத்து வந்த, குற்றப்புலனாய்வுத் துறை தான், விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.
முன்னர் இந்த விசாரணைகளை மேற்கொண்ட, ஷானி அபயசேகரவின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அண்மையில் இந்த விசாரணைகளை சார்ந்து இரண்டு முக்கியமான விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன.
ஒன்று, – தேசிய புலனாய்வுப் பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இன்னொன்று – பிள்ளையான் எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த இரண்டு பேரும் அடுத்தடுத்த நாட்களில் கைதாகியிருக்கின்றனர்.
இந்த இரண்டு பேரும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
ஆனால், இந்த வழக்கிற்கும் இவர்களின் கைதுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
மட்டக்களப்பு வவுணதீவு பாலத்தில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மீது திசை திருப்பினார் என்ற குற்றச்சாட்டிலேயே, பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
saharan-hasim
அவர், அந்தச் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளான, சஹ்ரான் ஹாசிம் குழுவினரின் பக்கம், அந்த விசாரணைகள் செல்ல விடாமல், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பக்கம் அதனை திசை திருப்ப திரும்ப, மீண்டும் மீண்டும் தவறான தகவல்களைக் கொடுத்து புலனாய்வு அதிகாரிகளை ஏமாற்றினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் ஏன் அவ்வாறு செயற்பட்டார், அவரை அவ்வாறு செயற்பட தூண்டியது யார், என்பன போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிவது கடினமில்லை.
ஏனென்றால், அவர்களுக்கும், புலனாய்வு அதிகாரியினால். திசை திருப்பப்பட்ட விவகாரத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பல தகவல்கள் பெறப்பட்டு இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருக்கிறார்.
இதனால், இந்த இரண்டு கைதுகளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும், தொடர்புகள் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏற்கெனவே, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுடன், தொடர்பில் இருந்தார் என்றும், குண்டுத் தாக்குதலுக்கு அவர் உள்ளே இருந்து உதவிகளை வழங்கி இருந்தார் என்றும் சனல்4 குற்றம்சாட்டியிருந்தது. சனல் 4 குற்றச்சாட்டின் படி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவருமான, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நாட்டிலேயே இருக்கவில்லை என்றும், மலேஷியாவில் பணியாற்றிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ராஜபக் ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கத்துடனே இந்த தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, சனல்4 சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, குற்றப் புலனாய்வுத்துறை இப்போது விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், அதற்கமைய பிள்ளையான் கைது செய்யப்படவில்லை என்றும் அவரிடம் அதுபற்றி விசாரிக்கப்படவில்லை என்றும், பிள்ளையானை சந்தித்துப் பேசிய உதய கம்மன்பில தகவல் வெளியிட்டிருக்கிறார்.
அதேவேளை, பிள்ளையான் கைது செய்யப்பட்ட மறுநாள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவதற்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்ற தகவலை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர், குற்றப் புலனாய்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதற்கு அனுமதி கேட்டார் என்றும், ஆனால், தடுப்புக்காவலில் உள்ள ஒருவரை தொலைபேசியில் பேச அனுமதிக்க முடியாது என்பதால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதேபோல பிள்ளையானின் சட்ட ஆலோசகர் என்ற அடிப்படையில் அவரை சந்திப்பதற்கு உதய கம்மன்பில அனுமதி கோரினார் என்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் முன்னிலையில் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருந்தார்
இந்த இடத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
பிள்ளையான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தார்.
அத்துடன் அவரது அரசாங்கத்தில் அவர் இராஜாங்க அமைச்சராகவும் இணைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிளவுபட்ட கருணாவையும் பிள்ளையானையும் பாதுகாத்தவர் ரணில் விக்கிரமசிங்க.
பின்னர் அவர்களை ராஜபக் ஷவினர் தமது பக்கம் கொண்டு வந்திருந்தார்கள்.
பின்னர், பிள்ளையானை தனது பக்கம் வைத்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் நாமல் ராஜபக் ஷவை ஆதரிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தார்.
இந்த சூழலில், ரணில் விக்கிரமசிங்க ஏன் பிள்ளையானை தொடர்பு கொள்ள முயற்சித்தார், ஏன் அவருடன் தொலைபேசியில் உரையாட விரும்பினார் என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.
அதற்கான பதிலை ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே வழங்க முடியும்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலமாக பிள்ளையானுடன் எந்த இரகசியத்தையும் பேச முடியும் என்ற நம்பியிருக்கமாட்டார்.
அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.
அதனால், பிள்ளையானுடன் இரகசியம் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டிருந்தார் என நம்புவது கடினமானது.
அப்படியிருந்தும் ரணில் விக்கிரமசிங்கவை இந்த விவகாரத்துக்குள் கோர்த்து விடுவதற்கு அரசாங்க தரப்பு முயற்சிக்கிறது என்பதை ஆனந்த விஜேபாலாவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இன்னொரு பக்கத்தில், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்திருப்பது ஆச்சரியமான விடயம்.
அவர் ஒரு சட்டத்தரணி. பிள்ளையானின் சட்ட ஆலோசகர் என்ற அடிப்படையில் அவர் சந்திப்புக்கு நேரம் கேட்டிருக்கிறார். அது வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, உதய கம்மன்பில அவரது சட்ட ஆலோசகராக செயற்பட்டிருக்கவில்லை.
இப்போது திடீரென ஏன் அவர் பிள்ளையானின் சட்ட ஆலோசகராக நுழைந்திருக்கிறார் என்பது கேள்விக்குரிய விடயம்.
பிள்ளையானைச் சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்களும் குடும்ப உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டதால் தான், இலவசமாக சட்ட உதவி வழங்க முன்வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் கம்மன்பில.
சனல் 4 குற்றச்சாட்டுகளை உதய கம்மன்பில நிராகரித்து வந்தவர்.
இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான், கோட்டாபய ராஜபக் ஷ ஆகியோரைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வந்தவர் அவர்.
அதைவிட ராஜபக் ஷவினருடன் நீண்ட காலம் நெருக்கமான உறவில் இருந்த உதய கம்மன்பில, கோட்டாபய ராஜபக் ஷ வினால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரே, அவர்களுடனான அரசியலில் இருந்த வெளியேறியவர்.
ஆனாலும், ஆழ்மனதில் அவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் உறவுகளும் நீடிக்கின்றன.
ராஜபக் ஷவினருடன் இருக்கின்ற நட்பு, அவர்களைப் பாதுகாப்பதில் இருக்கின்ற அக்கறை, சிங்கள பௌத்த தேசியவாதம் மீதான பற்றுணர்வு போன்ற காரணங்களினால் உதய கம்மன்பில இந்த விவகாரத்தில் நுழைந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் ராஜபக் ஷவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து, அவர்களை பாதுகாக்க வேண்டுமானால், பிள்ளையானையும் பாதுகாக்க வேண்டும் என்பதை உதய கம்மன்பில உணர்ந்து இருக்கிறார்.
அந்த அடிப்படையில் தான் அவர் பிள்ளையானைச் சந்தித்திருக்கிறார்.
சட்டத்தரணியாக பிள்ளையானை தனிமையில் சந்திக்க முடியும் என்று அவர் நம்பியிருக்கிறார். ஆனால், 4 பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் தான் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் அதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் தனித்துப் பேச அனுமதிக்கப்படவில்லை. இது அவரை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.
பிள்ளையானை தனியாக சந்தித்து இரகசியமாக எதையோ பேசுகின்ற வாய்ப்பை கம்மன்பில எதிர்பார்த்திருக்கிறார் என்று தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல மர்மமான முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
தேர்தலும் வரப் போவதால் அதற்குப் பஞ்சம் இருக்காது.
அப்படி புதிய தகவல்கள் அவிழ்க்கப்படாமல் போனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்ற அவப்பெயருடன் தான், உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
-சுபத்ரா-