சவூதி அரேபியாவில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஒரு தங்கம் உட்பட மொத்தம் 8 பதக்கங்களுடன் 9 ஆவது இடத்தை பெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை (18) பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தரூஷி அபிசேக்கா தங்கப் பதக்கம் வென்றார்.

அவர் 2.14.86 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தை பெற்றதன் மூலம் இளையோர் ஆசிய மெய்வல்லுனர் போட்டி வரலாற்றில் இலங்கை சார்பில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை அவரால் வெல்ல முடிந்தது.

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் அம்பகமுவ மத்திய கல்லூரி வீராங்கனை யாமனி துலாஞ்சலி இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இலங்கை இந்தப் போட்டியில் மொத்தம் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் 8 பதக்கங்களை வென்றது. 18 வயதுக்கு உட்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி ஒன்றில் இலங்கை வென்ற அதிக பதக்கங்கள் இதுவாகும்.

2023 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையே வென்றது.

இந்தப் போட்டியில் 19 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 36 பதக்கங்களை வென்ற சீனா முதலிடம் பெற்றதோடு இரண்டாவது இடத்தை உஸ்பகிஸ்தானும், 3ஆவது இடத்தை ஜப்பானும் வென்றன.

இந்தியா இந்தப் போட்டியில் ஒரு தங்கத்துடன் மொத்தம் 11 பதக்கங்களை பெற்று 8 ஆவது இடத்தை வென்றது.

Share.
Leave A Reply