நித்திய இளைப்பாற்றியடைந்த பரிசுத்த பாப்பரசருக்கு சிவப்பு நிற குருத்துவ உடை மற்றும் தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் செபமாலையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் பரிசுத்த பாப்பரசர் நித்திய இளைப்பாற்றுதல் அடைந்த வத்திக்கானில் உள்ள அவரது இல்லமான காஸா சாண்டா மார்ட்டாவின் தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் 23 ஆம் திகதி புதன்கிழமை வத்திக்கான் நேரப்படி காலை 9 மணிக்கு சென் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் வரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இறுதிச் சடங்கில் கார்தினால்மார்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருட்தந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள்.
கார்தினால்கள் குழுவின் தலைமை கர்தினால் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமையில் இறுதிச் சடங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என ஹோலி சீ பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.