இந்த நிகழ்வுப் போக்குகளை ” டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல் ” என்ற தனது நூலில் ஜேன் றசல் பின்வருமாறு எழுதினார்;

“கிறிஸ்தவரான கொழும்பு வழக்கறிஞர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் பொன்னம்பலத்துக்கு அடுத்த தலைவராக வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதிகாரத்துக்கான தனது தனிப்பட்ட குறிக்கோள்களை திருப்திப்படுத்துவதில் பெருமளவுக்கு அக்கறை கொண்டவரான பொன்னம்பலத்தைப் போலன்றி, செல்வநாயகம் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலெழுகை இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் கருத்தூன்றிய அக்கறை கொண்டவராக விளங்கினார்.

” செல்வநாயகம் ஆழமாகச் சிந்திக்கின்ற ஒரு மனிதர். அரசியல்வாதி என்ற வகையில் அவர் நேர்மையை வெளிக்காட்டினார். அது பொன்னம்பலத்திடம் இருக்கவில்லை. செல்வநாயகத்தின் தமிழ்த் தேசியவாதம் ஒரு சந்தர்ப்பவாத குமிழி அல்ல. மாறாக, அது ஒரு ஆழமான இயல்புணர்ச்சியாக இருந்தது ; தீவிரமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்க் கலாசாரம் மீதான தடுமாற்றமற்ற விசுவாசத்துக்கு ஒப்பான ஒரு புரிதலாக இருந்தது.

” இலங்கை தமிழ்க் கலாசாரத்துடனான செல்வநாயகத்தின் பிணைப்பு உண்மையான தமிழ்த் தேசியவாதத்துக்கு பெருமளவுக்கு நெருக்கமானதாக வந்தது. அவரது துயரார்ந்த கருத்துக்களும் வாய்மைவாய்ந்த நிலைப்பாடுகளும் (தனது பிற்காலத்தில் ஐக்கிய இலங்கை என்ற இலட்சியத்தில் இருந்து தனித்தமிழ் நாடு என்ற கோட்பாட்டுக்கு திரும்பிய) பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வாரிசாக அவரை பிரகடனம் செய்தன.

” 1947 ஆம் ஆண்டில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கொள்கையில் இருந்து வேறுபட்ட ஒரு கொள்கையை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் முன்வைக்கவில்லை என்ற போதிலும், அவரது அணுகுமுறை சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் அரசியலின் தொனியிலும் நடத்தையிலும் ஒரு தீவிரமான மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதற்கு குறிசொல்லியது.”

வேறுபாடுகளுக்கு காரணம்

1947 பாராளுமன்ற போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் ஏழு ஆசனங்களில் வெற்றி பெற்றது. காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட செல்வநாயகம் 12,126 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். லங்கா சமசமாஜ கட்சியை சேர்ந்த நாகலிங்கத்தையும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நடேசபிள்ளையையும் அவர் தோற்கடித்தார். தமிழ் காங்கிரஸின் எதிர்காலப் போக்கு குறித்து விரைவாகவே செல்வநாயகத்துக்கும் பொனானம்பலத்துக்கும் அரசியல் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் தனது ” எஸ். ஜே.வி. செல்வநாயகமும் இலங்கை தமிழ்த் தேசியவாத நெருக்கடியும் 1947 — 1977 ” என்ற நூலில் அன்றைய நிலைவரத்தை பினவருமாறு எழுதியிருக்கிறார் ;

” 1947 தேர்தலில் தமிழ் காஙகிரஸுக்கு கிடைத்த வெற்றியை முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்களக் கட்சிகளுடன் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பதற்கு தமிழ் வாக்காளர்கள் தந்த ஆணையாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தமிழ்ப்பகுதிகளுக்கு பயனைப் பெறுவதற்கு அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவும் பொன்னம்பலம் வியாக்கியானம் செய்தார்.

” செல்வநாயகத்தைப் பொறுத்தவரை, தமிழர்களின் ஒத்துழைப்பை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை, சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து, புதிய அரசுக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தேசியக்கொடி, தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களை அரசாங்க உதவியுடன் குடியேற்றுவதை நிறுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதற்கான ஒரு நெம்புகோலாக தமிழர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினார். இந்த முன்னிபந்தனைகள் நிநைவேற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலமைப்பு கட்டமைப்பை தீர்மானிப்பதற்கு அரசியலமைப்புச்சபை ஒன்று கூட்டப்பட வேண்டும் என்றும் செல்வநாயகம் விரும்பினார். பொன்னம்பலம் இந்த உத்தரவாதங்களைப் பெறவில்லை.”

பொன்னம்பலம் ஒரு அமைச்சராக வந்து குடியுரிமைப் பிரச்சினையில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்த பின்னரும் கூட, செல்வநாயகம் உடனடியாகப் பிரிந்து செல்லவில்லை. பதிலாக, அவர் தமிழ் காங்கிரஸிலேயே தொடர்ந்து இருந்து பொன்னம்பலத்துடன் போராடுவதா அல்லது புதிய அரசியல் கட்சியொன்றை தொடக்குவதா என்று தடுமாறிக் கொண்டிருந்தார். இறுதியாக கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கத்துடனும் செனட்டர் ஈ.எம்.வி. நாகநாதனுடனும் சேர்ந்து செல்வநாயகம் பிரிந்து சென்றார். 1949 டிசம்பரில் இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

செல்வநாயகத்தினதும் அவரது கட்சியினதும் நடவடிக்கைகள் தமிழர் அரசியலில் கோட்பாட்டு ரீதியான நகர்வு ஒனறை ஏற்படுத்தின. மொழி அடிப்படையில் தமிழ்த் தேசியவாதத்தை வகுத்து அவர் அதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட பிராந்திய அடிப்படையில் ஒரு பரிமாணத்தைக் கொடுத்தார். வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்கள். இரு மாகாணங்களும் சுயாட்சிகொண்ட ஒரு தமிழ் அரசாக அமையும். இந்த அரசு சிங்கள அரசுடன் சமஷ்டி ஏற்பாடு ஒன்றுக்கு வந்து இலங்கை ஒன்றியத்திற்குள் இருக்கும்.

தமிழரசு கட்சி சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்தைக் கோரியது. இது இலங்கை தமிழர்களுக்கான கோரிக்கையாக மாத்திரம் இல்லாமல் முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் உள்ளடக்கியதாக தமிழ்பேசும் மக்கள் சகலருக்குமான கோரிக்கையாக இருந்தது. சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தமிழ் பாரம்பரியத் தாயகத்தின் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதையும் தமிழரசு கட்சி எதிர்த்தது.

புதிய கட்சியினால் 1952 பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. கோப்பாயில் வன்னியசிங்கமும் திருகோணமலையில் மாத்திமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் அடுத்த நாளே ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவிவிட்டார். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று செல்வவநாயகம் காங்கேசன்துறையில் தோல்விகண்டார்.

தமிழர்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் குறித்து செல்வநாயகத்தின் கருத்துக்களுக்கு தமிழ்ச்சமூகம் அந்த நேரத்தில் கவனம் கொடுக்கவில்லை. ஆனால், தெற்கில் சிங்கள பௌத்த தேசாயவாதிகள் செல்வாக்கைப் பெறத்தொடங்கியபோது அதற்கு சமாந்தரமாக தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியவாதமும் உத்வேகம் பெறத் தொடங்கியது. விரைவாகவே தமிழ் மக்கள் அதிகரிக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த ஒரு தீர்க்கதரிசியாக செல்வநாயகத்தை நோக்கிய அவர்கள் அந்த முக்கியமான காலகட்டத்தில் தங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்தக்கூடியவர் அவரே என்று புரிந்துகொண்டார்கள். கண்ணியமும் கனிவும் நிறைந்த செல்வநாயகம் தமிழர் அரசியலில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக மாறினார்.

பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றி

1956 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது. சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியை சிங்கள மககளுக்கு வழங்கி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தெற்கில் தேர்தலில் பெருவெற்றி பெற்ற அதேவேளை, தமிழரசு கட்சி வடக்கில் ஆறு ஆசனங்களையும் கிழக்கில் நான்கு ஆசனங்களையும் வென்றெடுத்தது.

தமிழரசு கட்சி செல்வநாயகத்தின் தலைமையில் புதியதொரு அரசியல் போராட்டக் கலாசாரத்தை தொடங்கியது. அது காந்திய கோட்பாட்டின் வழியில் அமைந்த ‘ அகிம்சைப்’ போராட்டமாகும். அரசகரும மொழிகள் சட்டத்தை பாராளுமன்றம் விவாதித்துக் கொண்டிருந்தபோது கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகமே முதன்முதலான பெரிய போராட்டமாகும். அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடனான குண்டர்கள் சத்தியாக்கிரகிகள் மீது ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்திய அதேவேளை, ” கைகள் கட்டப்பட்ட ” பொலிசார் பாரத்துக்கொண்டு நின்றனர். செல்வநாயகத்தின் மகனும் அவரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். மகன் தாக்குதலுக்குள்ளான வேளையில் தந்தை பின்வாங்காமல் தரையில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடர்ந்தார். அந்த காட்சியை தமிழ்க்கவிஞர் காசி ஆனந்தன் கிளர்ச்சியைத் தூண்டும் வகையிலான கவிதையில் வடித்து காவியமாக்கினார்.

அரசியல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மகாநாடுகளுக்கு புறம்பாக , ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள், ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், கடிதம் எழுதும் இயக்கம், நிருவாக ஒழுங்குவிதிகளுக்கு கீழ்ப்படியாமை,தார்பூசும் இயக்கம் என்று வேறுபல அகிம்சைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களை பெருமளவுக்கு அரசியல்மயப்பட்ட ஒரு சமூகமாக மாற்றின.

செல்வநாயகம் அவரது ஆதரவாளர்களினால் ” தந்தை செல்வா”, ஈழத்துக்காந்தி ” என்று இப்போது அழைக்கப்பட்டார். தந்தை என்பது திராவிட இயக்கத்தில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தந்தையான ஈ.வெ. இராமசாமி நாயக்கர் ” தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்டார். ஈழத்துக்காந்தி என்பது இந்திய காங்கிரஸ் கலாசாரத்தில் இருந்து வந்தது. செல்வநாயகத்தின் எதிரிகள் அவரை ” காற்சட்டைக்காந்தி ” என்று கேலி செய்தனர். தமிழரசு கட்சியின் பெருப்பாலான ஆதரவாளர்கள் அவரை ” பெரியவர் ” என்று அழைத்தனர். செல்வநாயகம் இப்போது ஒரு வழிபாட்டுக்குரிய தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார்.

தமிழரசு கட்சியினால் நடத்தப்பட்ட போராட்டங்களில் தார்பூசும் ஸ்ரீ எதிர்ப்பு இயக்கமும் 1961 வெகுஜன சத்தியாக்கிரகமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. தார்பூசும் இயக்கம் தொடர்பாக 1958 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் அரசாங்க செயலகங்களுக்கு முன்பாக தமிழர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகம் முடக்கியது. தனியான தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டு முத்திரையும் வெளியிடப்பட்டபோது சத்தியாக்கிரக இயக்கம் அதன் உச்சத்தை எட்டியது. இறுதியில் அதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. செல்வநாயகம் உட்பட தமிழ்த் தலைவர்கள் தடுப்புக்காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர். 1958 ஆம் ஆண்டிலும் தமிழரசு தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தை கையாளும் விடயத்தில் செல்வநாயகத்தின் தந்திரோபாயம் அதற்கு எதிராகப் போராடுவதும் பேச்சுவார்த்தை நடத்துவதுமாகவே இருந்தது. அகிம்சைப் போராட்டங்கள் மற்றும் ஆவேசப் பேச்சுக்களுக்கு மத்தியிலும் தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை எட்டுவதிலேயே பெருமளவுக்கு நாட்டம் காட்டியது என்பதை நேர்மையுடன் குறிப்பிட வேண்டும்.

அரசியல் விட்டுக்கொடுப்பைச் செய்யுமுகமாக செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தங்களது மூலமுதல் நிலைப்பாடுகளில் பெருமளவுக்கு தளர்வுகளைச் செய்தனர். உதாரணமாக, சமஷ்டிக் கட்டமைப்புக்கு பதிலாக பிராந்திய சபைகளையும் மாவட்ட சபைகளையும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இணங்கிவரக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்து என்ற கெட்டியான நிலைப்பாட்டுக்கு பதிலாக தமிழ்மொழியின் பயன்பாடு தொடர்பில் விசேட ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருந்தனர்.

அவ்வாறு இருந்தாலும் கூட, செல்வநாயகம் இரு பிரதமர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் சிங்களத் தீவிரவாதிகளின் நெருக்குதல்களை அடுத்து கிழித்தெறியப்பட்டன. 1957 பண்டாரநாயக்க — செல்வநாயகம் உடன்படிக்கையும் 1965 டட்லி சேனநாயக்க — செல்வநாயகம் உடன்படிக்கையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழர் பிரச்சினை வன்முறைப் பரிமாணங்களை எடுப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரேயே தீர்க்கப்பட்டிருக்கும். அதே போன்றே செல்வநாயகம் போன்ற தலைவர்கள் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை தோன்றியிருக்காது.

தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்து வைப்பதற்கு செல்வநாயகம் தவறிய போதிலும், அதை அவரது தவறு என்று தமிழ் மக்கள் கருதவில்லை. செல்வநாயகத்துக்கு துரோகம் செய்ததன் மூலமாக சிங்களத் தலைவர்களே தவறிழைத்ததாக தமிழ் மக்கள் கருதினர். செல்வநாயகத்தை ஏமாற்றியது என்பது தங்களை ஏமாற்றியதாகவே தமிழ் மக்கள் நம்பினர். அதனால் செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தமிழ் பாராளுமன்ற ஆசனங்களால் பருமளவானவற்றை தொடர்ச்சியாகக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு 1956 ஆம் ஆண்டில் பத்து ஆசனங்கள், 1960 மார்ச்சில் பதினைந்து ஆசனங்கள், 1960 ஜூலையில் 16 ஆசனங்கள், 1965 ஆம் ஆண்டில் 14 ஆசனங்கள் , 1970 ஆம் ஆண்டில் 13 ஆசனங்கள் கிடைத்தன.

தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான உயர்ந்த சபை பாராளுமன்றமே என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதை தமிழரசு கட்சி எப்போதுமே நியாயப்படுத்தியது. எதிரியினால் பிரித்தாளப்படுவதை தடுப்பதற்கு தமிழர்களின் ஐக்கியம் அவசியமானது என்றும் தமிழரசு கட்சி உறுதியாக நம்பியது. பாராளுமன்ற தேர்தல்களில் நெருக்கமான போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வலிமையான கூட்டணியாக திரண்டு நிற்பதன் மூலமாக அதிகாரச்சமநிலையைப் பேணக்கூடியதாக இருக்கும் என்றும் அதன் மூலமாக பலம்பொருந்திய ஒரு நிலையில் இருந்து கொண்டு பேரம்பேச முடியும் என்றும் தமிழரசு கட்சி கூறியது என்பது முக்கியமானதாகும்.

தமிழரசு கட்சியின் தந்திரோபாயங்கள்

இந்த தந்திரோபாயங்கள் 1960 மார்ச் மற்றும் 1965 தேர்தல்களில் ஓரளவுக்கு வெற்றியளித்தது. அந்த தேர்தல்களில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற செல்வாக்கு அரசாங்கங்களை அமைப்பதிலும் கவிழ்ப்பதிரும் முக்கியமான ஒரு காரணியாக விளங்கியது. ஆனால், அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்கள் உறுதியான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தபோது தமிழரசு கட்சி அரசியல் ரீதியில் பலவீனமாகிப் போனது.தமிழரசு கட்சி அமைதிவழிப் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த அதன் தந்திரோபாயத்தை பொறுத்தவரை, 1961 ஆம் ஆண்டிலும் 1965 — 68 காலப்பகுதியிரும் உச்சநிலையில் இருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகத்தை முடங்க வைத்த 1961 சத்தியாக்கிரகம் தங்களது நியாயபூர்வமான மனக்குறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வுகளின் ஆழத்தையும் தமிழரசு கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவையும் தெளிவாக வெளிக்காட்டியது. ஆனால், அரசாங்கத்தின் பிரதிபலிப்பு அரசியல் விட்டுக்கொடுப்பாக அன்றி, ஜனநாயக ரீதியான அகிம்சைப் போராட்ட இயக்கம் ஒன்றை படைபலம் கொண்டு நசுக்குவதாகவே இருந்தது.

தமிழரசு கட்சியின் போராட்ட தந்திரோபாயத்தை பொறுத்தவரை 1961 ஆம் ஆண்டு அதன் உயர்ந்த நிலையாக இருந்தது என்றால், பேச்சுவார்த்தை தந்திரோபாயம் 1965 ஆம் ஆண்டில் உச்ச நிலையில் இருந்தது. 1965 ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி ஒரு பங்காளியாகியது. அந்த கட்சியின் செனட்டராக நியமிக்கப்பட்ட எம். திருச்செல்வம் அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சரானார். மாவட்ட சபைகளின் ஊடாக ஓரளவு அதிகார பன்முகப்படுத்தலை நடைமுறைப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அந்த முயற்சியும் கூட தோல்வியில் முடிந்தது.

அந்த வகையில் நோக்கும்போது 1970 ஆம் ஆண்டளவில் தமிழரசு கட்சிக்கு இருந்த தந்திரோபாயத் தெரிவுகள் எல்லாமே தீர்ந்துபோய்விட்டன என்றுதான் கூறவேண்டும். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு மகத்தான ஆதரவை வழங்கியதை அடுத்து பாராளுமன்றத்திற்குள் பேரம்பேசுவதற்கு தமிழரசு கட்சிக்கு இருந்துவந்த சாத்தியப்பாடும் கூட இல்லாமல்போனது. ” இனிமேல் தமிழர்களை கடவுளால்தான் காப்பற்ற முடியும்” என்று கூறி செல்வநாயகம் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

தனித்தமிழ் நாடும் ஆயுதப் போராட்டமும்

பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், புதிய அரசியலமைப்பு போன்ற நடவடிக்கைகள் தாங்கள் அன்னியப்படுத்தப்படுவதாக தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வை மேலும் ஆழமாக்கின. செலவநாயகம் முன்னெடுத்த அரசியல் பாதை இனிமேலும் பொருத்தமானதாகவோ அல்லது பின்பற்றுவதற்கான தகுதியைக் கொண்டதாகவோ இல்லாமல் போனது. செல்வநாயகத்தின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. ( அவர் பார்க்கின்சன் நோயானால் பீடிக்கப்பட்டிருந்தார்). எனாறாலும் அவர் தொடர்ந்தும் தமிழர்களின் அதியுயர் தலைவராக விளங்கினார். ஆனால், தமிழர்களின் அரசியல் சிந்தனை வேறுபட்ட ஒரு திசையில் விரைவாக நகரத்தொடங்கியது. தனித்தமிழ் ஈழமும் ஆயுதப் போராட்டமும் புதிய ” மந்திரங்களாகின.” வேறு வழியின்றி செல்வநாயகமும் எழுந்துவந்த அந்த அலைக்குள் அகப்பட வேண்டியதாயிற்று.

செல்வநாயகம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தொடர்ந்து செல்லவிடாமல் பொலிசார் தடை செய்தனர். வீதியில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடங்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். பலர் அவரின் உத்தரவுக்கு அடிபணிந்தனர். ஆனால், பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் அதை மறுத்து பொலிசாரை எதிர்கொண்டு ஊர்வலத்தை தொடர விரும்பினர். இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை இணங்கவைப்பதற்கு அமிர்தலிங்கம் பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இறுதியில் இளைஞர்களும் வீதியில் அமர்ந்தனர். ஆனால், விரைவாகவே பல இளைஞர்கள் சத்தியாக்கிரகத்தில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் அனுமதி பெறாத ஊர்வலத்தை நடத்தத் தொடங்கினர். அவர்கள் பொலிசாரை எதிர்கொள்ளத் தயாராயிருந்தனர். ஆனால், பொலிசார் அவர்களை அலட்சியம் செய்தனர். அந்த சம்பவம் வளர்ந்துகொண்டிருந்த இளைஞர் கிளர்ச்சியினதும் பழைய தலைவர்கள் பொருத்தமில்லாதவர்களாக மாறிக்கொண்டுவந்த போக்கினதும் ஒரு அடையாளமாக விளங்கியது.

அந்திமக் காலத்தில் தேர்தல் சாதனை

செல்வநாயகத்தின் மிகப்பெரிய தேர்தல் சாதனை அவரது அந்திமக் காலத்திலேயே இடம்பெற்றது. 1972 அக்டோபரில் காங்கேசன்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த அவர் புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்கு இடைத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். ஒரு கணிசமான கால தாமதத்துக்கு பிறகு காங்கேசன்துறை தொகுதியில் 1975 பெப்ரவரி 3 ஆம் திகதி இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தியது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி. பொன்னம்பலத்தை தோற்கடித்து செல்வநாயகம் முன்னென்றும் இல்லாத வகையில் 25, 927 வாக்குகளை கைப்பற்றினார். 16, 470 பெரும்பான்மை வாக்குகளுடனான வெற்றியை செல்வநாயகம் பெற்றார்.

தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம்

1972 ஆம் ஆண்டில் தமிழ் கட்சிகளின் ஒரு தளர்வான கூட்டணி. அமைக்கப்பட்டது. அது தமிழர் ஐக்கிய கூட்டணி என்று அழைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் அந்த கூட்டணியின் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என்று மாற்றப்பட்டது. செர்வநாயகம், ஜீ.ஜீ பொன்னம்பலம், தொண்டமான– மும்மூர்த்திகள் கூட்டணியின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். தனித்தமிழ்நாட்டு கோரிக்கை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம் தொடங்கியது.

செல்வநாயகமும்்தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரித்தார். தமிழ் ஈழத்தை அமைப்பது என்பது வில்லங்கமான ஒரு காரியம், ஆனால் ஒரு தேசிய இனமாக தமிழர்கள் வாழவிரும்பினால் வேறு தெரிவு அவர்களுக்கு இல்லை என்று அவர் கூறினார். தமிழ் இளைஞர்கள் தங்களது துணிச்சல், தியாகம் மூலமாக மாத்திரமே ஈழத்தை அடைய முடியும் என்றும் செல்வநாயகம் கூறினார்.

தமிழ் ஈழத்தினதும் ஆயுதப் போராட்டத்தினதும் ஆதரவாளர்கள் செல்வநாயகத்தின் அந்த கூற்றை அவரின் இறுதி விருப்பமாகவும் புதிய ஏற்பாடாகவும் (Last will and testament ) கருதினர். தமிழ்க்காந்தியும் கூட ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கிறார் என்பதினதும் தமிழ் ஈழமே சமரசத்துக்கு இடமில்லாத அவரது நிலைப்பாடு என்பதினதும் சான்றாக அவர்கள் அதை வியாக்கியானப்படுத்தினர். தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக தாங்கள் செல்வநாயகத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றுவதாக விடுதலை புலிகளின் பேச்சாளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பின்னரான காலப்பகுதியில் கூறினார்கள். தங்களது கூற்றுக்கு ஆதரவாக அவர்கள் செல்வநாயகத்தை மேற்கோள் காட்டவும் செய்தார்கள்.

வெவ்வேறு வியாக்கியானங்கள்

தமிழ் ஈழம் மற்றும் ஆயுதப்போராட்டம் தொடர்பில் செல்வநாயகத்தின் நிலைப்பாடு விவாதத்துக்குரியதும் விளங்காப்போக்குடைய வியாக்கியானங்களுக்கும் உட்பட்டதுமாகும். தற்போது செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்பது பல வருடங்கள் கழிந்த நிலையில் இன்று பெருளவுக்கு ஊகங்களுக்கு உரியதாகவே இருக்கிறது. ஈழக் கோரிக்கையை அவர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் காண்பதற்கான தந்திரோபாயமாகவே பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் ஆயுதப் போராட்டத்துக்கு அவர் ஒருபோதும் ஆதரவு அளத்திருக்க மாட்டார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் உணருகிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் உண்மை எது என்பது தொடர்பில் திட்டவட்டமான ஏகபோகத் தனியுரிமை எவருக்கும் இல்லை. இது தொடர்பிலான சர்ச்சை ஆய்வாளர்கள் மத்தியில் தீர்வுகாணமுடியாத விவாதத்துக்கான ஒரு தொனிப்பொருளாகவே தொடர்ந்து இருக்கும்.

அரசியல் மரபு

செல்வநாயகம் 1977 ஏப்ரில் 26 ஆம் திகதி காலமானார்.வீடாடில் தவறி வீழ்ந்த அவர் மரணமடையும் வரை முழுமையான மயக்க நிலையிலேயே இருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செல்வநாயகத்தின் இறுதிச்சடங்கு தமிழர்கள் மத்தியில் முன்னென்றும் கண்டிராத கூட்டுச் சோகமாரியின் உண்மையான காட்சியாக அமைந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு கிடைத்த பிரமாண்டமான வெற்றி செல்வநாயகத்தின் நினைவுக்கான ஒரு மகத்தான அஞ்சலியாக இருந்தது. அந்த தேர்தல் பிரசாரங்களின்போது செல்வநாயகத்தின் பெயரும் அவரது அரசியல் மரபும் மிகவும் பெரியளவில் வரவழைக்கப்பட்டன.

சகல அரசியல் கட்சிகளும் செல்வநாயகத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தின. ஜெயவர்தனவும் அத்துலத்முதலியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியின் சில குறிகாட்டிகள் மாத்திரமே. ஆனால், முன்னர் சில சிங்களத் தலைலர்கள் செல்வநாயகத்தைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் இவற்றுக்கு முற்றிலும் முரணானவையாகவும் இரக்கமற்றவையாகவும் அமைந்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

” மெலிந்த உருவமும் பசியால் வாடியவரைப் போன்ற தோற்மும் கொண்ட அந்த மனிதர் மீது என்னால் நம்பிக்கை வைக்கமுடியாது” என்று டி. எஸ். சேனநாயக்க செல்வநாயகத்தைப் பற்றி கூறினார். எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, ” உலகில் உள்ள மனிதப் பிறவிகளில் மிகவும் ஆபத்தான வகையைச் சேர்ந்த ஒருவர் என்பது நிச்சயமானது. தனது சொந்த வழியில் அவர் இலட்சியத்தில் நேர்மையான உறுதிப்பாடு கொண்டவர். அவர் ஒரு இலட்சியவாதி. ஆனால், நடைமுறை யதார்த்தத்தைப் பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லாதவர். விவகாரங்களின் நடைமுறைச் சாத்தியமான பக்கத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர். அத்தகைய ஆட்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்று செல்வநாயகத்தை வரணித்தார்.

அந்த நேரத்தில் நிலவிய மிகவும் கவலைக்குரிய நிலைவரம் இது. அகிம்சையில் நம்பிக்கை கொண்டவரும் அடிப்படைக் கோராக்கைகளுக்கு குறைவான எதையாவது ஏற்றுக்கொண்டு பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டும் பண்பை வெளிப்படுத்தியவருமான அந்த மனிதர் நம்பிக்கை வைக்க முடியாதவராகவும் ஆபத்தானவராகவும் காண்பிக்கப்ட்டார். அன்று செல்வநாயகத்துடன் அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அர்த்தபுஷ்டியான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று செல்வநாயகத்தின் நினைவு நடைமுறையில் அருகிப்போய் விட்டது. பிரபாகரன்தான் போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நினைக்கும் இன்றைய இளந்தலைமுறை சுமார் மூன்று தசாப்தகாலமாக தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்திய செல்வநாயகம் என்ற அந்த மனிதரை அறிந்திருப்பதாகவும்கூட இல்லை. ஊழலற்ற, தமிழர்களை ஏமாற்றாத நேர்மையானவர் தலைவர் என்று போற்றி வணங்கப்பட்ட அந்த மனிதரை இவர்களுக்கு தெரியாது.

செல்வநாயகம் தனக்கே உரித்தான வழியில் போராட்டத்துக்கு தலைமைதாக்கி வழிநடத்தியிருக்காவிட்டால் எதிர்காலத்தில் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான தமிழ்த்தேசியவாத தளம் ஒன்றே இருந்திருக்காது என்பதை இன்றைய இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளவில்லை. வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினதும் அவரது அகிம்சை ஆயுதத்தினதும் நாட்கள் போய்விட்டன. எஞ்சியிருப்பது எல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் அவரது ஆயுதங்களினதும் நாட்கள் பற்றிய நினைவுகளே.

எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ‘ காந்தியவாத’ தமிழ் அரசியல் தலைவர் (பகுதி – 1)

ஜேன் றசல் கூறியது

Share.
Leave A Reply