வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 10ம் வகுப்பு முடித்து விட்டு, அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
லதா ஒரு இளைஞனை காதலித்துள்ளார். ஆனால் பெற்றோர் அந்த பையன் மீது பல வழக்குகள் உள்ளது என்று திருமணத்திற்கு மறுத்து, உறவினர் பையனை கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், மணமேடையில் மணமகனிடம் இருந்து தாலியை பிடுங்கி வீசி எறிந்தார்.
காதல் கண்ணை மட்டுமல்ல, போகும் பாதையையும் சேர்த்தே மறைக்கிறது. முரடனாக சுற்றும் இளைஞர்களை காதலிப்பது போல் சினிமாவில வரும் காட்சிகளை நம்பி வாழ்க்கையில் இளம் பெண்கள் முட்டாள்தனமாக முடிவெடுக்கிறார்கள்.. பைக்கில் பின் தொடர்ந்து வரும் நபர்கள், கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது, ஹீரோயிசம் செய்யும் இளைஞர்கள், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் இளைஞர்கள் மீது சினிமாவில் வரும் காட்சிகளால் ஈர்ப்பு ஏற்பட்டு காதலித்து வீணாகும் பெண்கள் அதிகமாகி வருகிறார்கள்.
ஏனெனில் காதலிக்கும் போது, இளைஞன் சம்பாதிப்பானா, குடும்பம் நடத்தும் அளவிற்கு வாழ்க்கையை பக்குவமாக கையாளுவானா, விட்டுக்கொடுத்து செல்வானா, நன்கு படித்து, உயர்ந்த நிலைக்கு செல்வானா என எதையும் பார்க்காமல் காதலிக்கிறார்கள். குழந்தை ஆன பின்னரே முட்டாள்தனமான முடிவெடுத்து விட்டதாக புலம்புகிறார்கள்.
மறுபக்கம் நல்ல படிப்பு, நல்ல சம்பளம், மகளுக்கு பிடித்த துணை என எல்லாமே இருந்தாலும் காதலை சாதியை காட்டி ஏற்க மறுக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். மேலும் தங்கள் வரட்டு பிடிவாதத்திற்காக வேறு ஒரு இளைஞருக்கு மகளை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் அதிகமாகவும் இருக்கிறார்கள்.
வேலூரை பொறுத்தவரை பெற்றோர் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர். அதை தடுத்து நிறுத்தி உள்ளார் இளம் பெண்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் குதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கடந்த 2 வருடமாக குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம், இவர்களது காதல் இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்து, அவரை கண்டித்து வந்தனர். இந்த நிலையில் உறவினர் மகனுடன் அவருக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்திருக்கிறார்கள். இந்தநிலையில், நேற்று காலை அவருக்கும், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியை சேர்ந்த உறவினர் மகனுக்கும் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தது. மணமகள் லதாவின் கழுத்தில் கட்டுவதற்காக மணமகனிடம் தாலி எடுத்து கொடுக்கப்பட்டது. மணமகன், மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயற்சித்தார்.
அப்போது இளம்பெண் திடீரென மணமகனின் கையில் இருந்த தாலியை பிடுங்கி வீசி எறிந்தார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் இருவீட்டார் மற்றும் உறவினர்கள் இளம்பெண் லதாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிகொண்டா போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் சிக்கியிருந்த இளம்பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையில், பள்ளியில் படிக்கும் போதிலிருத்தே சுமார் 6 வருடமாக செம்பேடு இளைஞரை காதலித்து வந்ததாகவும், காதல் விவகாரம் தெரிந்ததால் தன்னை கட்டாயப்படுத்தி உறவினர் மகனுக்கு திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்ததாகவும் போலீசாரிடம் லதா தெரிவித்தார். இதனால் தான் தனக்கு பிடிக்காத திருமணம் நடைபெறுவதை தடுக்கவே தாலியை பிடுங்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்களிடத்தில் நடத்திய விசாரணையில், இளம்பெண் காதலிக்கும் வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் ஏகப்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது என்றும், அதனால்தான் உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தோம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் வேலூர் மாவட்ட பெண்கள் பாதுகாப்பு நலத்துறையிலிருந்து அதிகாரிகளை வரவழைத்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் இளம்பெண் அவரது தந்தையின் தங்கை வீட்டிற்கு செல்வதாகவும் சிறிது காலம் கழித்து வாழ்க்கை துணை முடிவை தானே தீர்மானித்து கொள்வதாகவும் எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றார். இந்த சம்பவத்தால் வேலூர் பள்ளிக்கொண்டா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.