ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் இன்றைய நாட்களில் பெரிதும் பேசப்படுபவராக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு தலைவரான ‘பொட்டு அம்மான்’ என்ற சண்முகநாதன் சிவசங்கர் விளங்குகிறார்.
பெரிதும் அஞ்சப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவர் போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே மாதத்தில் இறந்துவிட்டார் என்ற போதிலும், ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களில் ஒரு குழுவினர் பொட்டு அம்மான் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் வெளியில் வந்து இயக்கத்துக்கு புத்துயிரளித்து இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் ‘பொய்ச்செய்தியை’ பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
“பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்” என்ற மாயைக்கு பின்னால் இருக்கும் குழுவே விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா உயிருடன் இருக்கிறார் என்ற பொய்ச்செய்திப் பிரசாரத்தில் ஏற்கெனவே ஈடுபட்டது என்று அறியவருகிறது.
பிரபாகரனும் அவரது மனைவி மதிவதனியும் கூட உயிருடன் இருக்கிறார்கள் என்ற மாயையையும் இந்த குழுவே பிரசாரம் செய்தது. ஐரோப்பாவில் இருக்கும் மதிவதனியின் சகோதரர்கள் உட்பட பல்வேறு நபர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் விடுதலை புலிகளின் முக்கியமான ஆதரவாளர்களான பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் போன்றவர்களும் இந்த ‘உயிருடன் இருக்கும்’ புரளிக்கு ஆதரவளித்தார்கள்.
போலி துவாரகா, பிரபாகரன் மற்றும் மதிவதனியை கொண்டுவருவதற்கான நடவடிக்கை ‘தலைவரின்’ குடும்பத்தின் எளிதில் ஏமாற்றப்படக்கூடிய ஆதரவாளர்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்கு ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் புலிகளினால் முன்னெடுக்கப்படும் ஏமாற்று வேலையின் ஓர் அங்கமாகும்.
இதைப் பற்றி நான் 2023 மார்ச்சில் ‘பிரபாவையும் குடும்பத்தையும் பயன்படுத்தி போலிச்செய்தி மோசடி’ என்ற தலைப்பில் விரிவாக எழுதினேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கிய அந்த மோசடி வேலை பரிதாபத்துக்குரிய சிணுங்கலாக இப்போது தணிந்துபோய்விட்டது. துவாரகாவாக பாசாங்கு செய்தவர் அஞ்சி நடுங்கி தற்போது வெளியில் தலைகாட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.
விடுதலை புலிகளின் பெருமளவு ஆதரவாளர்களை ஏமாற்றி அவர்களது யூரோக்களை, பிராங்குகளை, குரோனர்களை, ஸ்ரேர்லிங் பவுண்களை கறந்த மோசடிக்காரர்கள் பொன்முட்டையிடும் அந்த வாத்தை கைவிட்டுவிடத் தயாராக இல்லை.
இப்போது அவர்கள் பொட்டு அம்மானை பிடித்திருக்கிறார்கள். அவர் உக்ரெயின் நாட்டில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். பொட்டு அம்மானின் ‘மீள்வருகைக்கும்’ அதைத் தொடர்ந்து நிதி திரட்டலுக்குமான களம் அமைக்கப்படுகிறது.
ஆனால், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சில விவேகமுள்ள, அக்கறையுடைய உறுப்பினர்கள் இவ்வாரம் பொட்டு அம்மானின் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய ஒரு நூலை வெளியிடுவதன் மூலம் இந்த பாசாங்கை அம்பலப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதேவேளை, இந்த நிகழ்வுப் போக்குகளினால் குழப்பமடைந்த சில நபர்கள் உண்மை நிலையை எழுதுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இவ்வாறு வேண்டிக்கொண்டவர்களில் பலர் ஐரோப்பாவில் வளர்ந்த இளைஞர்களே. அவர்களில் சிலர் பொட்டு அம்மானை பற்றி அறியவும் விரும்புகிறார்கள். அதனால் இந்த பின்புலத்தில், இந்த கட்டுரை முன்னைய எனது எழுத்துக்கள் சிலவற்றின் உதவியுடன் பொட்டு அம்மான் மீது கவனம் செலுத்துகிறது.
பொட்டு அம்மான் என்ற சண்முகநாதன் சிவசங்கர் விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக 2009ஆம் ஆண்டில் மரணமடையும் வரை 21 வருடங்கள் செயற்பட்டார்.
விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பொட்டு அம்மான் நடப்பின்படி அந்த இயக்கத்தின் இரண்டாவது பெரிய தலைவராக இருந்தார்.
உரிமைப்படி மூப்பின் அடிப்படையில் பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் என்றால் அது பேபி சுப்பிரமணியமே.
ஆனால், இரண்டாவது தலைவராக நடைமுறையில் பொட்டு அம்மானே செயற்பட்டார். பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக சட்டப்படியாக அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவரது சடலமோ அல்லது எச்சங்களோ ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால்தான் அவர் இறக்கவில்லை என்று சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.
பொட்டுவும் குடும்பமும் உயிருடன் இல்லை
இந்த கட்டத்தில் நான் பொட்டு அம்மானின் மரணத்துடன் தொடர்புடைய விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்துக்கு நேர்ந்ததைப் போன்றே பொட்டு அம்மானும் அவரது குடும்பத்தினரும் கூட இறந்துவிட்டனர்.
பிரபாகரனும் மனைவி மதிவதனி, பிள்ளைகள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரனும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமடைந்தனர். அதேபோன்றே பொட்டு அம்மானும் அவரது மனைவி வத்சலா, மகன்களான பார்த்திபன், அருள்வேந்தன் மற்றும் கலைக்கண்ணன் ஆகியோரும் இன்று உயிருடன் இல்லை.
பொட்டுவின் மூத்தமகன் பார்த்திபனும் இரண்டாவது மகன் அருள்வேந்தனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து ஆயுதப் பயற்சிகளை பெற்றனர்.
போர்க்களத்தில் முன்னரங்கத்தில் நின்று போராடிய அவர்கள் இருவரும் வெவ்வேறு சண்டைகளில் கொல்லப்பட்டனர். இருவரும் 2009 ஜனவரிக்கும் மேயிற்கும் இடைப்பட்ட மாதங்களிலலேயே கொல்லப்பட்டனர். திகதிகளை அறியக்கூடியதாக இல்லை.
இளைய மகன் கலைக்கண்ணன் 2009 மே 13ஆம் திகதி கொல்லப்பட்டான். ஒன்பது வயதான அவன் தாயுடன் சேர்ந்து மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து வெளியேறி அருகாமைப் பதுங்குகுழியில் இருந்த நண்பர்களுக்காக தண்ணீர் எடுக்கச் சென்றான்.
அந்தவேளை ஹெலிகொப்டரில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவன் இரத்தம் சிந்திய நிலையில் தாயாரின் கரங்களிலேயே உயிர்விட்டான். பொட்டுவின் மனைவி வத்சலா 2009 மே 16ஆம் திகதி மரணமடைந்தார். ஆட்டிலறி ஷெல் வெடிப்பு ஒன்றிலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கணவர் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
பொட்டு 2009 மே 18ஆம் திகதி மரணமடைந்தார். வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட அங்கி அணிந்திருந்த அவர் அதை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தான் தூள்தூளாகப் போவதை உறுதிசெய்வதற்காக பொட்டு தனது அங்கியில் மிகையான அளவுக்கு வெடிபொருட்களை நிரப்பியதாகவும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உதவியாளர்களையும் மெய்க்காவலர்களையும் வேறிடத்துக்கு செல்லுமாறு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. பலத்த வெடிச்சத்தத்தை கேட்டு திரும்பிவந்து பார்த்த அவர்கள் சிதறிய பொட்டுவின் உடலில் எஞ்சிக்கிடந்தவற்றை அழித்தனர்.
முன்னர் குறிப்பிட்டதை போன்று பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் மூன்று பிள்ளைகள். தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் இருவரும் பெயர்களைச் சூட்டியதிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
பிரபாகரன் – மதிவதனி தம்பதியரின் மூத்த மகனுக்கு பிரபாகரனின் சிறந்த நண்பனும் மூத்த இராணுவ தளபதியுமான – சாவகச்சேரி மீசாலையில் இறந்த சார்ள்ஸ் அந்தனியின் பெயர் சூட்டப்பட்டது.
அவர்களின் மகளுக்கு துவாரகன் (மயூரன்) என்ற அவரின் மிகுந்த விருப்பத்துக்குரிய மெய்க்காவலரின் நினைவாக துவாரகா என்று பெயர் சூட்டப்பட்டது. இளையமகனுக்கு விடுதலை புலிகளில் இணைந்து சண்டையில் உயர்துறந்த மதிவதனியின் சொந்தச் சகோதரன் பாலச்சந்திரனின் பெயர் சூட்டப்பட்டது.
பொட்டு அம்மானும் வத்சலாவும் தங்களது மூத்த மகனுக்கு பாரத்திபன் என்று பெயர் சூட்டினார்கள்.
1987ஆம் ஆண்டில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் உண்மையான பெயர் பார்த்திபன்.
அவர் சிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு விற்பன்னர். அதேபோன்றே பொட்டுவின் மகன் பார்த்திபனும் சதுரங்கத்தில் திறமையுடையவர்.
இரண்டாவது மகனுக்கு அவர்கள் கொழும்பில் தன்னைத்தானே வெடிக்கவைத்து இறந்த ஒரு கரும்புலியின் நினைவாக அருள்வேந்தன் என்று அவர்கள் பெயர் வைத்தனர்.
பொட்டுவின் பிரதி கேணல் சார்ள்ஸும் கூட விடுதலை புலிகள் தூய தமிழ்ப் பெயர்களை வைக்கும் இயக்கத்தை ஆரம்பித்தபோது தனக்கு அருள்வேந்தன் என்று இயக்கப்பெயரை வைத்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
பொட்டு தம்பதியர் தங்களது இளையமகனுக்கு சண்டையில் இறந்த மேஜர் கண்ணனின் பெயரைச் சூட்டினர். கண்ணன் வத்சலாவின் தாய்மாமனும் கூட. 2000ஆம் ஆண்டில் பிறந்த கலைக்கண்ணனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் பார்த்திபன்,
அருள்வேந்தன் ஆகியோருக்கு இடையில் நீண்ட வயது வித்தியாசம். அதேபோன்றே பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுக்கும் அவரது மூத்த சகோதரர்கள் சார்ள்ஸ் அந்தனி, துவாரகா ஆகியோருக்கும் இடையில் நீண்ட வயது வித்தியாசம். பாலச்சந்திரன் 1997ஆம் ஆண்டில் பிறந்தவர்.
பொட்டுவின் சகோதரி கெப்டன் அருந்ததி
இரு மகன்களுக்கும் புறம்பாக பொட்டு குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து சண்டையில் இறந்தார்.
பொட்டுவின் இளைய சகோதரி காப்டன் அருந்ததி என்ற சிவரஞ்சனி சண்முகநாதனே அவராவார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தச்சன்காடு பகுதியில் 1990 நவம்பரில் நடைபெற்ற மோதல்களில் அவர் கொல்லப்பட்டார்.
சிவரஞ்சனியின் இயக்கப்பெயர் அருந்ததியாக இருந்தபோதிலும், பொட்டுவின் சகோதரி என்பதால் தோழர்கள் அவரை ‘பொட்டு’ என்றே அழைத்தார்கள். பல வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துவிட்ட பொட்டுவின் மூத்த சகோதரர் அண்மையில் காலமானார். அவரின் இளைய சகோதரரும் வத்சலாவின் ஒரு உடன்பிறப்பும் லண்டனில் வசிக்கிறார்கள்.
பொட்டு இரு தசாப்தங்களுக்கும் மேலாக விடுதலை புலிகளின் பலம் பொருந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மிகவும் முக்கிய பொறுப்பில் செயற்பட்டார்.
அவர் 1962ஆம் ஆண்டில் பிறந்தார். 1981ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பொட்டு சுமார் 30 வருடங்கள் இயக்கத்துக்காக தன்னை அர்ப்பணித்தார்.
1983 ஜூலை 23ஆம் திகதி விடுதலை புலிகள் திருநெல்வேலியில் இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் 23 முழுநேர உறுப்பினர்களும் ஏழு பகுதிநேர உதவியாளர்களும் மாத்திரமே இருந்தனர். பொட்டு இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் 30 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியாலை – நாயன்மார்கட்டு
அவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டில் வசித்தபோதிலும், அவர்கள் அயல் அரியாலையைச் சேர்ந்தவர்கள். சிறுவர் பராயத்தில் இருந்தே அரியாலையில் இருந்த தனது வயதையொத்த சிறுவர்களுடன் பொட்டு நெருங்கிப் பழகி நாயன்மார்கட்டையும் விட கூடுதலான நேரத்தை அரியாலையிலேயே கழித்தார்.
சிவசங்கரின் தந்தையார் சண்முகநாதன், சண்முகலிங்கம் என்றும் அறியப்பட்டிருந்தார். கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டியில் பல வருடங்களாக ஒரு எழுதுவினைஞராக அவர் பணியாற்றினார். பிள்ளைகளின் கல்விக்காக குடும்பம் யாழ்ப்பாணத்திலேயே வசித்தது.1990 களின் பிற்பகுதி வரை பொட்டுவின் தந்தையார் மலையகத்திலேயே தொடர்ந்து வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொட்டுவைப் பற்றி இலங்கை அதிகாரிகளுக்கு பெரிதாக எதுவும் தெரியாத காரணத்தால் தந்தையாருக்கு ஆபத்து எதுவும் நேராது என்பதில் மகன் மிகுந்த நம்பிக்கை உடையவராக இருந்தார்.
பொட்டு மகேஸ்வரி வித்தியாலயம், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் (ஸ்ரான்லி கல்லூரி) மன்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியைப் பெற்றார். மிகவும் உயரமான, அழகான தோற்றமுடைய பொட்டு அவரது நண்பர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்கினார்.
கல்வியிலோ அல்லது விளையாட்டுகளிலோ அவர் சிறந்து விளங்கவில்லை. ஆனால், பெருமளவு கட்டுரைப் போட்டிகளில் அவர் பரிசுகளை வென்றார். விடுதலை புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியான பஷீர் காக்காவினாலும் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தளபதியான சந்தோசம் மாஸ்டரினாலுமே சிவசங்கர் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார். இது 1981ஆம் ஆண்டில் நடந்தது.
முதலில் அவர் பகுதிநேர உதவியாளராகவே செயற்பட்டார். முழுநேர உறுப்பினராக மாறியதும் சிவசங்கருக்கு குமணண் என்ற இயக்கப்பெயரே கொடுக்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அவர் பொட்டு என்ற அறியப்படலானார். பாடசாலை நாட்களில் இருந்து அவரை நண்பர்கள் பொட்டு என்றே அழைத்தார்கள்.
பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய்
பொட்டு என்ற பெயரின் தோற்றுவாய் மிகவும் சுவாரஸ்யமானது. பொட்டு என்பது நெற்றியில் வைத்துக் கொள்வது. கோவில்களில் அல்லது சுப வைபவங்களில் பொட்டு வைப்பதற்கு சந்தனம் அல்லது குங்குமமே பயன்படுத்தப்படும்.
தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியவாதக் கொள்கையுடைய இலங்கை தமிழ் அரசு கட்சியினதும் பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் எழுச்சி போராட்டம் மற்றும் தியாகம் என்ற கோட்பாடுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது.
இதன் ஒரு தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இரத்தத் திலகமிடும் பழக்கம் வந்தது. தமிழ் அரசியல் தலைவர்களினால் உணர்ச்சிவசப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மேடைகளில் ஏறி தங்களது விரல்களை குத்தி அதில் இருந்து வெளிவரும் இரத்தத்தால் தலைவர்களின் நெற்றியில் பொட்டு வைத்து தங்களது இரத்தத்தையும் உயிரையும் தமிழ் இலட்சியத்துக்காக அர்ப்பணிப்பதாக சூளுரைப்பார்கள்.
இளம் சிவசங்கரும் ஒரு சந்தர்ப்பத்தில் உணர்சிவசப்பட்டவராக மேடையில் ஏறி பிளேட்டினால் தனது கையைக் கிழித்து தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்தலங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோரின் நெற்றிகளில் பொட்டு வைத்தார்.
தமிழர் அரசியலில் மிகவும் உணர்ச்சிவசமான பிரசாரங்களைக் கண்ட 1977 பொதுத்தேர்தலின் போதே இது நடந்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தனித்தமிழ்நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டது. யோகேஸ்வரன் அந்த தேர்தலில் கூட்டணியின் யாழ்ப்பாணம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
சிவசங்கரின் இந்த உணர்ச்சிவசமான சைகை அவரது நண்பர்களினால் பெரும் வேடிக்கையாக நோக்கப்பட்டது. அதற்கு பிறகு அவர்கள் அவரை சீண்டிக் குறும்பு செய்து பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டது. விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்த பிறகு புதிய தோழர்களும் அவரை பொட்டு என்று அழைக்கத் தொடங்கினர்.
இயக்கத்தில் அவரின் மூப்புநிலை அதிகரிக்கவே பொட்டுவுடன் ‘அம்மான்’ என்ற விகுதியும் சேர்ந்து கொண்டது.
விடுதலை புலிகள் மத்தியில் மூப்புநிலையில் இருந்தவர்களை ‘அண்ணன்’, ‘மாஸ்டர்’ அல்லது ‘அம்மான்’ என்று அழைப்பது ஒரு வழக்கமாக இருந்தது.
பொட்டுவின் சர்வதேச வானொலி சமிக்ஞை ‘பாபா ஒஸ்கார் ‘ (Papa Oscar) என்பதாகும். விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக குண்டுகளை வெடிக்கவைக்கத் தொடங்கிய பின்னரான வருடங்களில் விடுதலை புலிகளின் முன்னாள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் போன்ற இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் பொட்டு அம்மானை கிண்டலாக ‘வெடியரசன்’ என்று அழைத்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல் பயிற்சி அணி
1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நாடுபூராவும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அட்டூழியமும் அதன் விளைவுகளும் தமிழர் அரசியலில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
அன்று ‘பொடியன்கள்’ என்று அறியப்பட்ட தமிழ்ப் போராளிகளுக்கான ஆயுதப்பயிற்சியை வழங்கியதன் மூலம் இந்தியா துடிப்பான பாத்திரம் ஒன்றை வகித்தது.
விடுதலை புலிகளின் முதலாவது அணியின் ஒரு உறுப்பினராக ஆயுதப் பயிற்சிக்காக வட இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சிவசங்கர் சென்றார். முதலாவது அணி பயிற்சி பெறுனர்களில் இயக்கத்தின் பழைய உறுப்பினர்களும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களும் கலந்திருந்தனர்.
இந்தியாவில் பயிற்சியைப் பெற்ற பிறகு குறுகிய காலம் பொட்டு பிரபாகரனின் மெய்க்காவலராக பணியாற்றினார்.
அந்த காலப்பகுதியில்தான் பொட்டு தனது தலைவரின் வெறிபிடித்த ஒரு சீடராக மாறினார். அடிமைத்தனமான அர்ப்பணிப்புடன தனது தலைவருக்கு பொட்டு சேவை செய்தார்.
பிரபாகரன் மீதான பொட்டுவின் விசுவாசம் தடுமாற்றம் இல்லாததும் கேள்விக்கு இடமின்றியதுமாகும். என்றாலும் பொட்டுவின் புலனாய்வு ஆற்றலே அவரை மேல்நிலைக்கு கொண்டுவந்தது. முன்னாள் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினுக்கு லவ்னெனிற்றி பேரியா போன்று பிரபாகரனுக்கு பொட்டு இருந்தார்.
சீட்டாட்டம்
சீட்டாட்டத்தில் பொட்டுவின் நிபுணத்துவம் அவரது ஆற்றலுக்கும் திறமைக்குமான அடையாளமாக இருந்தது. சீட்டாட்டத்தில் அவர் மிகுந்த பிரியம் கொண்டவர்.
சீட்டாட்டத்துக்காக பொட்டுவை இரவில் நித்திரையில் இருந்துகூட எழுப்ப முடியும் என்று அவரின் முன்னாள் இயக்கச் சகா ஒருவர் என்னிடம் கூறினார். எந்த நேரத்திலும் சீட்டாடுவதற்கு பொட்டு தயாராயிருந்தார்.
ஒரு சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் ரோந்து அணியொன்று நெருங்கி வந்துகொண்டிருந்த காரணத்தால் மறைவிடம் ஒன்றில் இருந்து விடுதலை புலிகள் தப்பியோட வேண்டியிருந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரனேட்டுகள் அடங்கிய பையொன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்த பொட்டு சீடடுப்பக்கெட்டை எடுத்துச் செல்ல மறக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.
பொட்டு ‘திறீ நோட் ஃபோர்’ விளையாட்டில் வியத்தகு திறமைசாலி. ஒரு குறுகிய நேரத்திற்குள் தன்னுடன் சீட்டாடிக் கொண்டிருப்பவர்களிடம் எந்த வகையான சீட்டுக்கள் இருக்கின்றன என்பதை அவர் கண்டு பிடித்துவிடுவார். அதன் பிரகாரம் விளையாட்டில் அவர் தனது சீட்டுக்களை பயன்படுத்துவார். ஏமாற்றி வீம்பு பேசுவதிலும் எதிராளிகளை அம்பலப்படுத்துவதிலும் பொட்டு இயற்கைமீறிய திறமையைக் கொண்டிருந்தார். அவரது இந்த குணாதிசயம் புலனாய்வு தலைவராக திறமையுடன் செயற்படுவதற்கு உதவியது.
1985ஆம் ஆண்டில் பொட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். வெவ்வேறு காலப் பகுதிகளில் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பாக பஷீர் காக்கா, அருணா, குமரப்பா ஆகியோர் இருந்தபோது அவர்களின் முக்கியமான ஒரு தோழராக பொட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்டார்.
பொட்டு கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதி நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. மட்டக்களப்பில்தான் பொட்டு வத்சலாவை சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
வத்சலா மட்டக்களப்பு மாவட்டத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரில் ஒருவர் மகழடித்தீவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திச்சபை தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் உறவினர்கள்.முன்னாள் கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர், சம்பந்தமூர்த்தியின் மனைவியின் தந்தையார்.
மட்டக்களப்பில் செயற்பட்ட காலத்தில் பொட்டு அம்மான் தனது திறமையை நிரூபித்தார். மாங்கேணி முகாம், கறுத்தப்பாலம் சோதனை நிலை மற்றும் பொலன்னறுவை வீதியில் இராணுவ ரோந்துப் பிரிவு மீதான தாக்குதல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளுக்கு பொட்டு தலைமை தாங்கினார்.
ஒரு தடவை காரைதீவில் இராணுவத்தினரின் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின்போது பொட்டு அகப்பட்டுக்கொண்டார். ஆனால், சாரம் அணிந்திருந்த அவர் படையினரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பொட்டு அம்மான் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் புவியியலை தனது பிறங்கையைப் போன்று அறிந்திருந்தார்.
படுவான்கரை என்று அறியப்பட்ட மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியில் நடமாடித் திரிந்தபோது அவர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டியையே பயன்படுத்தினார்.
பணத்தைப் பெறுவதற்காக தனவந்த நிலச்சுவாந்தார்களையும் வர்த்தகர்களையும் கடத்துவதில் பொட்டு ஈவிரக்கமற்றவராக நடந்துகொண்டார். அது விடயத்தில் அவர் பன்குடாவெளியில் அரிசி ஆலை மற்றும் நகைக்கடை உரிமையாளரான சின்னத்தம்பி (சம்பந்தமூர்த்தியின் தந்தையார்) உட்பட வத்சலாவின் உறவினர்களைக் கூட விட்டுவைக்கவில்லை.
1987 அக்டோபரில் இந்திய இராணுவத்துடன் போர் மூண்டபோது பொட்டு அம்மான் மட்டக்களப்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து விநியோகங்கள் இடையூறின்றி வந்து சேருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்வதற்காக தென்னிந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
பதில் யாழ்ப்பாண தளபதி
பிறகு யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்ததும் பொட்டு இந்திய இராணுவத்துக்கு எதிரான கெரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
யாழ்ப்பாணத்தில் இம்ரான், பாண்டியன் மற்றும் மதி ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததை அடுத்து அவர் ஒரு குறுகிய காலத்துக்கு பதில் யாழ்ப்பாணத் தளபதியாக செயற்பட்டார். இந்திய இராணுவத்தினருடனான சண்டையொன்றில் பொட்டு வயிற்றில் ஏற்பட்ட காயத்துக்கு வன்னியில் சிகிச்சை பெற்றார். பிரபாகரனும் அப்போது வன்னிக்கு நகர்ந்திருந்தார் .
அதற்கு பிறகு மேலதிக மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக பொட்டு இரகசியமாக தமிழ்நாட்டுக்கு சென்றார். இலங்கை மண்ணில் இந்திய இராணுவத்துடனான மோதல்களில் காயமடைந்த விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் இரகசியமாகச் சிகிச்சை பெறக்கூடியதாக இருந்தது உண்மையில் ஒரு விசித்திரமாகும். வத்சலாவும் தமிழ்நாட்டுக்கு சென்றார். அங்குள்ள இந்துக்கோவில் ஒன்றில் இருவரும் வைபவரீதியாக தாலிகட்டித் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் மட்டக்களப்பில் பதிவுத் திருமணமே செய்திருந்தனர்.
புலனாய்வு தலைவர்
முழுமையாக குணமடைந்து பொட்டு இலங்கை திரும்பிய பிறகு விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிருவகிக்கும் பொறுப்பு 1988 பிற்பகுதியில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த பிரிவு புலிகளின் பாதுகாப்பு புலனாய்வுச் சேவை (Tiger Organization Security Intelligence Service or TOSIS) என்று அழைக்கப்பட்டது. அந்த பிரிவின் தலைவராக இருந்த வசந்தன் 1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
புலனாய்வுப் பிரிவை பொறுப்பேற்ற பிறகு பொட்டு அம்மான் அதை முற்றாக மாற்றியமைத்து 21 வருடங்களாக தலைவராக இருந்தார்.
வருடங்கள் கடந்தோட அவர் மிகவும் அஞ்சப்படுகிற ஒருவர் என்ற ‘புகழைப்’ பெற்றார். இயக்கத்திற்குள்ளும் அவரின் அந்தஸ்து வளர்ந்தது.
அதற்கு பிறகுதான் அவர் பொட்டு அம்மான் என்று அழைக்கப்படலானார். விடுதலை புலிகளின் தலைவரை சென்றடைய வேண்டிய விடயங்கள் பொட்டுவின் ஊடாகவே தெரியப்படுத்தப்படுகின்ற அளவுக்கு அவரது நிலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு வாரத்தில் பொட்டு பிரபாகரனை குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து தடவைகள் சந்திப்பார்.
விடுதலை புலிகளின் மூத்த தலைவர்களினால் சந்திக்க முடியாதவராக பிரபாகரன் மாறிய ஒரு காலகட்டம் வந்தது.
ஆனால், எந்த நேரத்திலும் பொட்டுவினால் பிரபாகரனைச் சந்திக்க முடியும். ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்கக்கூடிய ஒரேயொரு இயக்கத் தலைவராகவும் பொட்டு விளங்கினார். மற்றவர்கள் எல்லோரும் தங்களின் ஆயுதங்களை கையளித்த பின்னரே பிரபாகரனைச் சந்திப்பதற்கு அரிதாக அனுமதிக்கப்பட்டனர்.
சகல வல்லமையும் கொண்ட பொட்டு
பிரபாகரனுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்பட்டதால் அந்த நிலைமை ஏற்பட்டது. ‘உள்ளேயிருக்கக்கூடிய எதிரிகள்’ பற்றிய அச்சம் விடுதலை புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து பிரபாகரன் பெருமளவுக்கு அன்னியப்பட்டவராக மாறும் நிலையை தோற்றுவித்தது.
பொட்டு அம்மான் சசகல வல்லமையும் பொருந்தியவராக மாறினார். ஒரு கட்டத்தில் தலைவரின் அன்றாட நடவடிக்கைகளை ‘கட்டுப்படுத்துபவராக’ அவர் விளங்கினார்.
கட்டுரை மூலம்: டி.பி.எஸ். ஜெயராஜ்- வீரகேசரி