• ஆயுதப் போராட்டத்தில் முதல் பெரும் தாக்குதல்
• அமுதரின் காரியாலயத்தில் தயாரான புலிகளின் செய்தி
• காட்டுக்குள் முற்றுகை
சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை தீவிரவாத இளைஞர்கள் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டி வைத்திருந்தார். சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொல்லப்பட்ட பின்னர் பஸ்தியாம்பிள்ளை தான் தீவிரவாத இளைஞர்களை கண்டறிவதில் முழு மூச்சாய் ஈடுபட்டார்
பொத்துவில் கனகர் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தனக்குத் தெரியும் என்று பஸ்தியாம்பிள்ளை கூறிக்கொண்டிருந்தார். தமிழ் அதிகாரி என்பதால் விபரங்களை திரட்டுவதற்கு வசதியாக இருந்தது.
இதேவேளை தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை கைதேர்ந்தவர் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களது ஆண் உறுப்புக்களை மேசைலாச்சியில் வைத்து நெரிப்பது, மோட்டார் சைக்கிள்க சைலன்ஸர் குழாய்க்குள் ஆண் உறுப்பை வைக்கச் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை ‘ஸ்ராட்’ பண்ணுதல் போன்ற பல்வேறு சித்திரவதைகளை சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை மேற்கொண்டதாக ‘சுதந்திரன்’பத்திரிகையில் செய்திகள் வெளிவந்தன.
முருங்கன் – மடு வீதிக்கு உட்புறமான காட்டுப் பகுதியில் தீவிரவாத இளைஞர்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக பஸ்தியாம்பிள்ளைக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
தனக்கு கிடைத்த தகவலை அவர் மிக இரகசியமாக வைத்துக் கொண்டார்.
தீவிரவாத குழுவை மடக்கிப் பிடிக்கும் புகழைத் தானே முழுதாக பெற்றுக்கொள்வதே அவரது நோக்கம்.
பிரபலம், மற்றும் பதவி உயர்வுக்கு தனது திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று நினைத்தார் பஸ்தியாம்பிள்ளை.
சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன் பாலசிங்கம், சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை அழைத்துக் கொண்டு அவர் யாழ்ப்பாணத்திலிருந்து முருங்களுக்குப் புறப்பட்டார்.
தாம் எங்கே போகிறோம் என்ற தகவலைக் கூட பஸ்தியாம்பிள்ளை தனது மேலதிகாரிகளுக்;குத் தெரிவிக்கவில்லை.
04.07.1978 அன்று முருங்கன் – மடு வீதிக்கு உட்புறம் இருந்த காட்டுப்பகுதி பஸ்தியாம்பிள்ளை குழுவினரால் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையை முகாமில் இருந்த இளைஞர்களும் எதிர்பார்க்கவில்லை.
புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் அந்த முகாமில் இருந்தனர்.
உமா மகேஸ்வரன், செல்லக்கிளி, நாகராசா, ரவி, ஐயர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் அங்கிருந்தனர். பிரபாகரன் அந்த நேரத்தில் அங்கிருக்கவில்லை.
இளைஞர்களிடம் “நீங்கள் யார் ?இங்கு என்ன செய்கிறீர்கள்?|| என்று கேட்டார் பஸ்தியாம்பிள்ளை.
“விவசாயம் செய்கிறோம். அது தான் பண்ணையில் இருக்கிறோம்|| என்றனர் இளைஞர்கள்.
ஆனால், பஸ்தியாம்பிள்ளை அவர்களில் சிலரை அடையாளம் கண்டு கொண்டார்.
அடையாளம் கண்டதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் சொன்னதை நம்புவது போல நடித்தார்.
“பொலிஸ் நிலையத்திற்கு வந்து ஒரு வாக்குமூலம் கொடுத்துவிட்டு நீங்கள் திரும்பி வந்துவிடலாம்.என்னோடு வாருங்கள். ஒரு பிரச்னையும் இருக்காது|’‘ என்றார் பஸ்தியாம்பிள்ளை.
இளைஞர்களும் உடன்படுவது போல் நடித்து தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர்.
“தேநீர் குடித்துவிட்டுச் செல்லலாம்|’ என்றார் ஒரு இளைஞர்.தேநீர் தயாரானது. பஸ்தியாம்பிள்ளை பண்ணைக்குள் இருந்தார்.
சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலமும் ஏனைய இரு பொலிசாரும் வெளியே சென்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
லெப்டின் கேர்னல் செல்லகிளி
முந்திக் கொண்ட இளைஞர்கள்
இது தான் சமயம் என்று இளைஞர்கள் உஷாரானார்கள். செல்லக்கிளி பஸ்தியாம்பிள்ளை மீது பாய்ந்தார். பஸ்தியாம்பிள்ளையிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்தது. செல்லக்கிளியால் அது பறிக்கப்பட்டது.
பஸ்தியாம்பிள்ளை சூழ்நிலையின் தீவிரத்தைக் கணக்கெடுக்கத் தவறிவிட்டார். தனது புத்திசாலித்தனம் மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.
எதிர்தரப்பின் பலத்தை குறைவாக எடை போட்டிருந்தார்.
தனது தவறுகளை பஸ்தியாம்பிள்ளை உணர்ந்து கொள்ள அவகாசமே கொடுக்கப்படவில்லை.
அவரது இயந்திரத் துப்பாக்கியே அவருக்கு எமனாய் மாறியது.
இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை மீது இயந்திரத் துப்பாக்கி ரவைகளைப் பொழிய சப்- இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன் பாலசிங்கம், பொலிஸ் சாரதி சிறிவர்த்தனா ஆகியோர் ‘என்ன சத்தம்?’ உன்று ஓடி வந்தனர்.
அவர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. முற்றுகையிட்ட பொலிஸ் குழு முற்றாக அழிக்கப் பட்டது.
அருகில் இருந்த கிணற்றில் உடல்களைப் போட்டுவிட்டு பொலிஸ் குழு வந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு இளைஞர்கள் குழு தப்பிச் சென்றது.
“சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையும் அவரோடு மூன்று பொலிஸ் அதிகாரிகளும் முருங்கன் காட்டுப் பகுதியில் கோரக் கொலை!||
பத்திரிகைகளுக்கு ஒரு வாரகாலமாக செய்திகளுக்கு பஞ்சமேயில்லை. கொலையாளிகள் யார்? கொலை எப்படி நடந்திருக்கலாம்? பொலிஸ் வட்டார ஊகங்கள் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தன.
Left செல்லகிளி
கொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் தவிர பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலடைக்கப்பட்டார்கள். சித்திரவதைக்கு உள்ளானார்கள்.
கொலையாளிகளில் ஒருவர் சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையை சந்தித்து தந்திரமாகப் பேசி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அங்கு தயாராய் காத்திருந்த கொலையாளிகள் வேட்டையை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பு ஊகம் ஒன்று வெளியாகியது.
சில நாட்களின் பின் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகள் விரைவில் வலையில் மாட்டிவிடுவார்கள் என்றது பொலிஸ்.
அபாய அறிவிப்பு
ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நடைபெற்ற பாரிய தாக்குதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினருக்கு எதிரான நடவடிக்கை தான்.
அந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு அபாய அறிவிப்பாக விளங்கியது.
அமைதிக்குப் பெயர் பெற்ற வடபகுதியில் தீப்பொறிகள் பரவத் தொடங்கிவிட்டன.தீ பரவி காட்டுத் தீயாக முன்னர் அணைத்து விடவேண்டும் என்று அரசு நினைத்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் போல் அல்ல, நாம் கடுமையாக நடந்து கொள்வோம் என்று காட்டிக்கொள்ள ஜே.ஆர்.தலைமையிலான ஐ.தே.கட்சி அரசாங்கம் திட்டமிட்டது.
அரசும், அதன் பொலிஸ் படையினரும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரை அழித்த இளைஞர்களை வடபகுதியில் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது,
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் பாராளுமன்றக் காரியாலயத்தில் இருந்த தட்டச்சு இயந்திரம் ஒரு பெண்ணால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
‘தமிழீழ விடுதலைப் புலிகள்’என்னும் கடிதத் தலைப்பில் அந்தப் பெண் எழுத்துக்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
அவர் தான் ஊர்மிளாதேவி!.தமிழர்விடுதலைக் கூட்டணியின் மகளிர் பேரவை தீவிரமாக இயங்கிய காலகட்டம் இது
மகளிர் பேரவைக்கு தலைவியாக இருந்தவர் அன்னலட்சுமி பொன்னுத்துரை.
இவர் ஆயுதப் போரில் ஈடுபட்டு முதல் களப் பலியான பொன்.சிவகுமாரனின் அம்மா.!
மகளிர் பேரவைக்கு செயலாளராக இருந்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம். இவர் தலைவர் அமுதரின் பாரியார்.
“வாழ்க ஈழத்தமிழகம் வாழ்க வாழ்க வாழ்கவே|| உணர்ச்சி ததும்ப பாடுவார் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம்.
தமிழ் ஈழ தேசியக்கொடி உதயசூரியன் கொடி! அதனை ஏற்றி வைப்பார் அமுதர். கொடி வணக்கப் பாடலை பாடுவார் மங்கையற்கரசி.
பெண்களுக்கு அழைப்பு
“பெண்களும் தமிழ் ஈழ மீட்புப் போரில் அணி திரளவேண்டும்|| அறைகூவல் விடுப்பார் மங்கையற்கரசி.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்ணாவிரதங்கள், சத்தியாக்கிரகங்கள்,சட்டமறுப்பு போராட்டங்கள் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஊர்மிளாதேவி, திலகவதி போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
1978ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு யாழ்ப்பாணம் ஆவரங்காலில் நடைபெற்றது.
மாநாட்டு மேடையில் ஒரு பெண் பாடினார். “ துவக்கு போரை துவக்கு, துவக்கும் போரை துவக்கு||
அமுதர் உட்பட மேடையில் அமர்ந்திருந்த மு.சிவசிதம்பரம் வரை அனைவருமே இரசித்துக் கேட்டனர்.
பாடலில் இரு பொருள் இருந்தது. அகிம்சைப் போரை ஆரம்பியுங்கள் என்றும் அர்த்தப்படுத்தலாம். ஆயுதப் போரை (துவக்குப் போர்) ஆரம்பியுங்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
அகிம்சைவாதிகள் பாடலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பொருள் தெரியும். ஆயுதம் ஏந்தியவர்களின் முகங்களும் தெரியும்.
இப்போது எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்திற்கு மீண்டும் செல்வோம்.
ஊர்மிளாதேவி தயாரித்துக் கொண்டிருந்தது புலிகள் இயக்கத்தின் உரிமை கோரும் கடிதம்.
அரசின் விழிப்பு
1978 ஏப்ரல் மாதம் 25ம் திகதி சகல பத்திரிகை காரியாலயங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு உரிமை கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆங்கில தட்டச்சு செய்யப்பட்ட அந்தக் கடிதத்தில் புலிகளது மத்திய குழு சார்பாக உமா மகேஸ்வரன் கையொப்பமிட்டிருந்தார்.
அல்பிரட் துரையப்பா கொலை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் என்.நடராசா கொலை, சி.ஐ.டி.பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கருணாநிதி, சண்முகநாதன் மற்றும் சண்முகநாதன் கொலை, பொத்துவில் பா.உ.கனகரத்தினம் கொலை முயற்சி, பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை போன்றவை உரிமை கோரப்பட்டிருந்தன.
கடிதத்தின் பிரதி ஒன்று இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அரசாங்கம் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மூளையில் ஒரு திட்டம் உருவானது.
(தொடரும்)