‘பரிகார பூஜை செய்ய வேண்டும்’ எனக் கூறி, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோயில் பூசாரியைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, இளம்பெண்ணின் கணவர் குறித்து பூசாரி கூறிய தகவல், வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அந்தப் பகுதியிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

அப்போது, கோயில் பூசாரி அசோக் பாரதி என்பவருடன் கவிதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு வந்த கவிதாவை, அசோக் பாரதி பாலியல் வன்கொடுமை செய்ததாக 7-7-2025 அன்று வடபழனி மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

தொடர்ந்த விசாரணையில், ‘கவிதாவின் கணவர் தன்னிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக’ அசோக் பாரதி கூறியதையடுத்து, இளம்பெண்ணின் கணவர்மீது சி.எஸ்.ஆர் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

மயக்க மருந்து கலந்த ‘தீர்த்தம்’

இது குறித்துப் பேசுகிற விசாரணை போலீஸார், “கவிதாவுக்குத் தன் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

தன் வீட்டின் அருகிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் பூசாரி அசோக் பாரதியிடம், தன் குடும்பப் பிரச்னை குறித்துப் பேசிய கவிதா, ‘பிரச்னையைச் சரிசெய்ய ஏதாவது பரிகாரம் இருக்கிறதா சாமி?’ எனக் கேட்டிருக்கிறார்.

‘தீய சக்திகளை அழிக்கும் ருத்ராட்ச மாலையைக்கொண்டு, வடபழனி முருகன் கோயிலில் பரிகாரம் செய்தால் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்’ என்று கூறியிருக்கிறார் பூசாரி அசோக் பாரதி.

இதையடுத்து 28.6.25 அன்று கவிதாவும், பூசாரி அசோக் பாரதியும் பரிகார பூஜை செய்வதற்காக, பள்ளிக்கரணையிலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்.

அங்கே கோயில் நடை சாத்தியிருந்ததால், பரிகார பூஜை நடத்த முடியவில்லை. உடனே அசோக் பாரதி, ‘கோயிலின் நடை திறந்ததும் பூஜைகள் செய்யலாம். அதுவரை வடபழனியிலுள்ள என்னுடைய உறவினர் வீட்டில் ஓய்வெடுக்கலாம்’ எனக் கூறி கவிதாவை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆளில்லாத அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, ‘தீர்த்தம்’ என்று கூறி மயக்க மருந்து கலந்த தண்ணீரை கவிதாவிடம் கொடுத்திருக்கிறார் அசோக் பாரதி.

அதை வாங்கிக் குடித்த கவிதா, அப்படியே மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் கவிதாவைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அசோக் பாரதி.

வீடியோ எடுத்த கணவன்!

இதற்கிடையே, கோயில் பூசாரி அசோக் பாரதியுடன் கவிதா செல்வதை ரகசியமாகக் கண்காணித்து பின்தொடர்ந்து வந்திருக்கிறார்

கவிதாவின் கணவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வடபழனி வீட்டுக்குள் சென்ற அசோக் பாரதியும் கவிதாவும் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததையடுத்து, கதவைத் தட்டியிருக்கிறார் ரமேஷ்.

அப்போது, அரைநிர்வாணக் கோலத்தில் வந்து அசோக் பாரதி கதவைத் திறக்க, வீட்டின் படுக்கை அறையில், ஆடைகள் கலைந்து மயக்க நிலையில் கிடந்திருக்கிறார் கவிதா.

இதையெல்லாம் தன்னுடைய செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்ட ரமேஷ், கவிதாவை அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

“ரூ.10 லட்சம் பணம் கேட்டார்..!”

.25-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் புகாரளிக்கவில்லை கவிதா. மாறாக, 10 நாள்கள் கழித்து 7-7-2025 அன்றுதான் இணை கமிஷனர் செபாஸ் கல்யாணைச் சந்தித்து, தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறிப் புகாரளித்திருக்கிறார்.

அதன் பேரில், அசோக் பாரதி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணையில், ‘கவிதாவின் கணவர் ரமேஷ், என்னிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டார். கொடுக்கவில்லை என்றால், வடபழனியில் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார்’ என அசோக் பாரதி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அசோக் பாரதி கொடுத்த புகாரின் அடிப்படையில், ரமேஷ் மீதும் சி.எஸ்.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உண்மையிலேயே கவிதா பாதிக்கப்பட்டிருக் கிறாரா… அல்லது கவிதாவும் ரமேஷும் பணத்துக் காகத் திட்டமிட்டு இப்படியொரு சம்பவத்தை அரங்கேற்றினார்களா என்பது குறித்தெல்லாம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றனர்.

“அதிர்ச்சித் தகவல்களும் கிடைத்திருக்கின்றன!”இந்த வழக்கு குறித்துப் பேசுகிற உதவி கமிஷனர் கௌதமன், “கவிதாவை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்திருக்கிறோம்.

அவரின் செல்போன் விவரங்களையும் சேகரித்திருக்கிறோம். அதனடிப்படையில்தான் கோயில் பூசாரிமீது நடவடிக்கை எடுக்க முடியும். கோயில் பூசாரி அசோக் பாரதியிடம் நடத்திய விசாரணையில், சில அதிர்ச்சித் தகவல்களும் கிடைத்திருக்கின்றன. அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Share.
Leave A Reply