சர்வதேசத்தின் பார்வை பாலஸ்தீனத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த சர்வதேச திருப்பத்தால் நிலத்திலும், புலம்பெயரிடத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் வட்டாரங்களில் முணுமுணுப்பு கேட்கிறது.

ஆனால் இந்த முணுமுணுப்பு சுயவிமர்சனம் சார்ந்ததல்ல மாறாக வெறும் ஆற்றாமை பெருமூச்சு. எப்போதும் போன்று தம்பக்க தவறுகளை மறைத்து மற்றவர் தவறுகளை மட்டும் தேடும் தமிழ்த்தேசிய அரசியல் வரலாறு. இது அவர்களின் பார்வையில், வார்த்தைகளில் 75 ஆண்டுகால மூத்த அரசியல் பாரம்பரியம்.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரில் – மேற்குலகின் பார்வையில் ஹாமாஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கடந்த வார அறிவிப்பு பூமிப்பந்தை வழமைக்கு மாறாக மறுவளத்தில் சுற்றவைத்துள்ளதா?.

பாலஸ்தீன தனியரசை அங்கீகரிக்க தான் எடுத்துள்ள முடிவு வரலாற்றின் தார்மீக கட்டாயக் கடமை என்று அவர் அறிவித்தார்.

ஏற்கனவே நோர்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கரித்து விடுத்திருந்த அறிவிப்புக்கு மக்ரோனின் அறிவிப்பு பலம் சேர்ப்பதாக அமைந்தது.

கடந்த ஒக்டோபரில் இருந்து ஐ.நா.வின் கருத்துக்களையும், பாலஸ்தீன மக்களின் அழுகுரலையும் அசட்டை செய்து வந்த மேற்குலகத்திற்கு உணவுப்பொட்டலங்களை வான்வழியில் வீசவேண்டிய கட்டாயத்தை மக்ரோனின் முடிவு ஏற்படுத்தியது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மற்றொரு தீர்மானம் எடுக்கும் சக்தியாகவுள்ள ஜேர்மனி, பிரான்ஸை பின்பற்ற தயங்கினாலும், ஆகக்குறைந்தது உணவுப்பொதிகளை வீசுவதற்கு விமானங்களை வழங்க வேண்டிய நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த மாற்றங்களுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் KEIR STARMER 2025 யூலை 29 அன்று இஸ்ரேலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பாலஸ்தீன அங்கீகாரம் குறித்த அறிவிப்பை விடுத்தார்.

இஸ்ரேல் நீண்ட காலத்திற்கான, நிரந்தரமான, தீர்வை எட்டக்கூடிய யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாலஸ்தீன தேசத்தில் -மேற்குக்கரையில் இஸ்ரேலின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும், இல்லையேல் பிரித்தானியா பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவின் மறு கன்னத்தில் விழுந்த அடி.

பிரித்தானிய பிரதமரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள் இவை: “ வரலாற்றின் கரத்தை எங்கள் தோள்களில் ஏந்தி …” ( WITH THE HAND OF HISTORY ON OUR SHOULDER) பாலஸ்தீன தனியரசை அங்கீகரிப்போம்”. இது பிரித்தானியாவினால் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட தவறுக்கான குற்ற உணர்வின் பொறுப்புக்கூறல் வெளிப்பாடாகவும் இருக்கமுடியும். மக்ரோனின் கரங்களை பலப்படுத்தியுள்ளார் ஸ்ரார்மர்.

ஐரோப்பிய தலைவர்களின் இந்த அறிவிப்புக்கள் மட்டும் போதுமா? என்ற கேள்வி சர்வதேசத்தில் எழுந்துள்ளது.

இந்தக் கேள்விக்கு அமெரிக்காவுக்கு ஐ.நா.வில் இருக்கின்ற வீட்டோ அதிகாரம் தான் காரணம். ஐ.நா.வில் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள ஐந்து நாடுகளில் சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நான்கும் ஓரணியில் இணைவதற்கான வாய்ப்பை பிரான்ஸ், பிரித்தானிய அறிவிப்புக்கள் ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா மட்டுமே தனித்து பாலஸ்தீனத்திற்கு எதிராக வீட்டோவை பயன்படுத்த முடியும். இந்த சூழல் ஐ.நா.வில் அமெரிக்காவை தனிமைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அங்கரித்துள்ள 150 நாடுகளோடு மேலும் பல நாடுகள் இணைகின்ற நிலையில் பொதுச்சபையில் மிகப்பெரிய பெரும்பான்மையை பாலஸ்தீன தேசத்திற்கு திரட்ட முடியும்.

என்றாலும் உலக மக்களின் விருப்புக்கு மாறாக, உலக நாடுகளின் விருப்புக்கு மாறாக, ஐ.நா.வின் முடிவுக்கு மாறாக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை தனித்து பயன்படுத்தி பாலஸ்தீன தனியரசுக்கான அங்கீகாரத்தை தடுக்க முடியும்.

இதுவே இன்று சர்வதேச பூகோள அரசியலில் எழுகின்ற கேள்வியாகும். என்றாலும் மேற்குலகில் பாலஸ்தீனத்திற்கான விடுதலை தீபத்தை பிரான்ஸ் ஏற்றி வைத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் இன்றைய சூழல் அன்றைய ஈழப்போராட்ட சூழலை நினைவூட்டுகிறது. சிறிலங்காவின் கூட்டுப்படையின் 4,000 பேர் கொண்ட அணி வடமராட்சியை புலிகளிடம் இருந்து மீட்க மேற்கொண்ட “ஒப்பரேசன் விடுதலை” இராணுவ நடவடிக்கையை இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான போர் நினைவூட்டுகிறது.

1987 மே 26 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர இராணுவ உபாயம் “ஒப்பரேசன் பூமாலை” என்ற பெயரில் 1987 யூன் 4 ம்திகதி உணவுப்பொதிகளை யாழ்ப்பாணத்தில் வீசியது.

ஆரம்பித்து ஒன்பது நாட்களில் “ஒப்பரேசன் விடுதலை” நடவடிக்கை நிறுத்தப்பட்டு, இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் பிறக்க வழியேற்பட்டது. அன்று இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இருந்த “பாக்கு வெட்டி” அழுத்தம் இன்று இஸ்ரேல் பிரதமர் நெத்தயான்குவுக்கு உள்ளது.

ஈழ, பாலஸ்தீன விடுதலைப்போராட்டங்களில் மேற்குலக ஆதரவுடன் இலங்கை, இஸ்ரேல் அரசுகளின் அரச பயங்கரவாதம் குறிப்பாக நோக்கத்தக்கது.

இரு நாடுகளும் தேசிய இனங்களின் சுயாட்சிக்கான போராட்டத்தை நசுக்குவதை, மக்கள் மீதான அடக்கு முறையை, சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும், ஹாமாஸ் அமைப்புக்கும் எதிரான பயங்கரவாத ஒழிப்பு இராணுவ நடவடிக்கையாகவே இந்த அரச பயங்கரவாதத்திற்கு பெயரிட்டுள்ளன.

பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை அறிவித்தபோது இஸ்ரேல், அமெரிக்க தரப்பு கருத்துக்கள் பாலஸ்தீனம் ஹாமாஸ் அமைப்புக்கானது என்றும், ஹாமாஸ் அரசுக்கான அங்கீகாரம் என்றுமே வெளிப்பட்டன.

பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் பிராந்தியத்தில் ஈரானுக்கு இன்னொரு நாட்டை உதவியாக அமைப்பதற்கு சமமானது என்று கூறப்பட்டது.

இது இலங்கையில் ஈழம் ஒன்று அமைவது, இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு பலமாக அமையும் என்றும் கூறப்பட்டது போன்றது.

இது இந்தியாவின் தேசிய நலனுக்கு முரணானது என்று இராஜதந்திர வட்டாரங்கள் பேசின. சுனாமி நிவாரண கட்டமைப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா புலிகளுக்கு பொறுப்பு கொடுக்க முன்வந்தபோது ஜே.வி.பி. சந்திரிகா அரசாங்கத்தில் இருந்த இன்றைய ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தார்கள்.

இதே நெருக்குவாரம் தீவிர யூதமத அடிப்படைவாத அமைச்சர்கள் இருவரால் நெத்தயான்குவுக்கு உள்ளது. அவர்கள் யுத்தத்தை தொடரக்கோருகிறார்கள் .

இந்த பின்னணிகளுக்குள் நேச சக்திகளை பகைத்துக் கொள்ளாமல் ஹாமாஸ் எவ்வாறு இன்னும் இராணுவ பலத்துடன் காய்களை நகர்த்துகிறது?

இது விடுதலைப்புலிகளுக்கு இயலாமல் போனது ஏன்? நேச சக்தியான இந்தியாவை பகைத்து அதை மேற்குலகின் பக்கம் தள்ளிவிட்டதா? நிலத்தில் மக்கள் போராட்டத்தை கட்டி எழுப்பாமல், மக்களை அரசியல் மயப்படுத்தாமல், புலத்தில் இருந்து கிடைக்கின்ற காசையும், ஆயுதங்களையும் நம்பி தாயக மக்களையும், சகோதர அமைப்புக்களையும் எதிரியின் பக்கம் தள்ளிவிட்டதா?

போராடும் ஒரு தேசிய இனம் தனது சொந்த மண்ணை விட்டு ஓட எதிரி மட்டும் தான் காரணமா? இவை அனைத்தும் இப்போதும் “வாய்திறந்து உண்மையை பேசமுடியாமல் முணுமுணுக்கின்ற புலிகளுக்கும், புலிகளை நியாயப்படுத்திய-வர்களுக்குமான கேள்விகள்”.

ஹமாஸ் அமைப்புக்கும், மஹ்முட் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன நிர்வாகத்திற்கும் இடையே எண்ணற்ற முரண்பாடுகள் உண்டு. என்றாலும் மேற்கு கரையை அப்பாஸ் தலைமை நிர்வகிக்க, காசாவை ஹாமாஸ் நிர்வகிக்கிறது.

இதன் மூலம் பாலஸ்தீன சுயாட்சி பிரதேசம் ஒன்றும், அதன் நிர்வாக கட்டமைப்பும் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் மேற்கு கரையில் இயக்கத்தில் உள்ளது.

விடுதலைப்புலிகளால் மாகாணசபை நிர்வாக கட்டமைப்பு அடிப்படையை வரதராஜப்பெருமாள் தலைமையில் அங்கீகரித்து,

ஈழ விடுதலைக்கான போராட்டத்தை ஹாமாஸ் போன்று பொது எதிரிக்கு எதிராக நடாத்தமுடியாமல் போனது துரதிஷ்டவசமானது.

அதுவும் எதிரியுடன் பிரேமதாச அரசாங்கம், ஜே.வி.பி என்பனவற்றுடன் இணைந்து மாகாணசபை நிர்வாக கட்டமைப்பை சிதைத்ததை புலிகள் எவ்வாறு நியாயப்படுத்த முடியும். அன்று புலிகள் தங்களை ஆயுதங்களை மட்டும் கொண்டு மிகை மதிப்பீடு செய்ததன் விளைவை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்.

பிராந்தியத்தில் ஹாமாஸ்க்கு உள்ள மிகப்பெரிய பலம் ஈரான். மற்றும் லெபனான் ஹிஷ்புல்லா, ஏமன் ஹுர்தி அமைப்புக்கள். ஈழப்போராட்டத்திற்கு பிராந்தியத்தில் இருந்த பலம் இந்தியா- தமிழ்நாடு. அதையும் பகைத்து,

இறுதியில் புலிகள் தனித்து நின்றபோது இந்தியா மட்டுமல்ல, புலிகளால் தடைசெய்யப்பட்ட ஈழப்போராட்ட அமைப்புக்களும் உதவக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

தேசிய விடுதலைப்போராட்டம் ஒன்று பிராந்தியத்தையும், சர்வதேசத்தையும் சரியாக இனம்கண்டு முன்னெடுக்கப்பட வேண்டும். முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் பிராந்திய, சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து தமிழர்கள் கற்கவேண்டிய பாடங்கள் அதிகம் இருக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள், இஸ்ரேலும் ஈரானும் எதிரிகள், உக்ரைனும் ரஷ்யாவும் எதிரிகள், அமெரிக்காவும் ரஷ்யாவும், சீனாவும் எதிரிகள் இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து சிறிலங்கா அரசுக்கு புலிகளை அழிக்க அனைத்து ஆதரவையும் வழங்கக்கூடியதாக இருந்தது?

புலிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் வழங்கிய இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்தே இதை செய்தார்கள் என்றால் அதற்கான காரணங்கள் யாருக்கு தெரியாவிட்டாலும் புலிகளுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தி ஈரான் உள்ளிட்ட முஸ்லீம் உலகை பகைத்துக்கொண்டோம்.

பௌத்த கோயில்களில் தாக்குதல் நடாத்தி ஆசியாவின் பௌத்த நாடுகளை இலங்கை அரசின் பக்கம் நகர்த்தினோம்..

எதிரியுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து, ராஜீவ்காந்தியை கொன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் ஆதரவை இழந்தோம்.

ஈழத்திற்கு எதிரிகளையும், சிறிலங்காவுக்கு நேச சக்திகளையும் புலிகளே உருவாக்கினர்.

உலகமயமாக்கல் வியாபார அரசியல் அன்றைய அனைத்து இராணுவ, வல்லரசு நிலைப்பாடுகளையும் தளர்த்தி பல பத்து ஆண்டுகளாகிறது. பூகோள அரசியல் என்பது இன்று முழுக்க முழுக்க சந்தை பொருளாதார அரசியல். இதை புரிந்து கொள்ளாமல் கலாவதியாகிப்போன குளிர்யுத்த கால வல்லரசு பூகோள அரசியலை “கலாநிதிகளும்” விளங்கிக்கொள்ளாததால், விளங்கியும் விடுதலையின் பேரில் கூலிக்கு மாரடித்ததால் வந்த வினை.

இனியும் ஈழத்தமிழர்கள் பாலஸ்தீன நகர்வை பார்த்து பெருமூச்சு விடுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்.

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply