மாற்றுத்திறனாள வழக்கறிஞரை, சொந்தச் சித்தப்பாவே கூலிப்படையைவைத்துக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருப்பூரை திகிலடையவைத்திருக்கிறது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முருகானந்தம் (41). இவரின் தந்தை லிங்கசாமிக்கும், அவரின் சகோதரரான தண்டபாணிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்திருக்கிறது.

இந்த நிலையில், 1999-ல் லிங்கசாமி மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், தண்டபாணி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

ஆனால், வழக்கு விசாரணையில் ‘போதிய ஆதாரங்கள் இல்லை’ என தண்டபாணியை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதன் பிறகும் தண்டபாணிக்கும், லிங்கசாமி குடும்பத்துக்கும் இடையே சொத்துப் பிரச்னை நீடித்துவந்திருக்கிறது.

சொத்து தொடர்பாக தண்டபாணி மீது முருகானந்தம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அது தொடர்பான நில அளவீடுப் பணிகளை 28-7-2025 அன்று பார்க்கச் சென்ற முருகானந்தம், நான்கு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்த தண்டபாணி, அவரின் உறவினர் நாட்டுத்துரை, கூலிப்படையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, நாகராஜன், சுந்தரன், ராம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

“போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கவில்லை..!

இது தொடர்பாக முருகானந்தத்தின் தாய் சுமித்ராதேவியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“தண்டபாணிக்குச் சொந்தமான பள்ளியிலுள்ள நான்கு மாடிக் கட்டடம்,

பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் என் மகன் முருகானந்தமே வாதாடி வந்தான்.

அந்த வழக்கில், கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தண்டபாணியால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நிலையில்தான், தண்டபாணி எங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பள்ளியின் சுற்றுச்சுவரைக் கட்டியிருந்தார்.

அது தொடர்பாகவும் முருகானந்தம் வழக்கு தொடர்ந்திருந்தான். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாகவே, ‘அம்மா, எது வேணாலும் நடக்கும். நாமதான் பாதுகாப்பா இருக்கணும்’ என்று என் மகன் சொல்லிக்கொண்டேயிருந்தான்.

அது மட்டுமல்லாமல், ‘என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’ என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி தாராபுரம் காவல் நிலையம் வரை அவன் மனுவும் கொடுத்திருந்தான்.

இந்த நிலையில், ‘நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நிலத்தை அளக்க வேண்டும்’ என 28-7-2025 அன்று பிற்பகல் நில அளவையர் ரவிக்குமார், முருகானந்தத்தை அழைத்தார்.

அப்போது அங்கு சென்றபோதுதான், நடக்கக்கூட முடியாத மாற்றுத் திறனாளியான என் மகனை, ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்திருக்கின்றனர் தண்டபாணியின் கூலிப்படையினர்.

தந்தை, மகன் ஒரே நாளில் கொலை

தமிழக காவல் துறைமீது நம்பிக்கை இல்லை

என் மகனுடன் சட்டரீதியாக தண்டபாணியால் மோத முடியவில்லை. அதனால், ‘எல்லாத்துக்கும் அவன் மூளைதான் காரணம். அதைப் பிளந்தா எல்லாம் சரியாகிடும்’ என்று பேசிவந்திருக்கிறான் தண்டபாணி.

அவன் சொன்னதுபோலவே என் மகனின் மண்டையில் மட்டும்தான் வெட்டிக் கொலைசெய்திருக்கின்றனர். இதே போன்றுதான் 28-7-1999 அன்று என் கணவர் லிங்கசாமி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார்.

26 ஆண்டுகள் கழித்து 28-7-2025 என அதே தேதியில் என் மகனையும் கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள்.

இந்தக் கொலையில் தண்டபாணியின் மகன் கார்த்திகேயன், நில அளவையர் ரவிக்குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறது.

அவர்களையும் கைதுசெய்ய வேண்டும். தமிழக காவல்துறைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்றார் கண்ணீர்மல்

“மூளை வெளியே வரும் வரை வெட்டினார்கள்.

முருகானந்தத்துடன் சென்ற அவரின் உறவினர் தங்கவேல், “நில அளவையர் அழைத்ததால் நான், முருகானந்தம், அவரின் நண்பர்களான வழக்கறிஞர்கள் ரகுராம், தினேஷ், குருசாமி ஐந்து பேரும் அங்கு சென்றோம்.

ஏற்கெனவே அங்கு தண்டபாணியும், நாட்டுத்துரையும் நின்றுகொண்டிருந்தார்கள். திடீரென தண்டபாணி, முருகானந்தத்தைக் கைகாட்டி, ‘இவன் அப்பனை வெட்டிக் கொன்னதுபோல இவனையும் வெட்டிக் கொல்லுங்கடா… இவன் உயிரோட போகக் கூடாது’ எனக் கத்தினார்.

நாட்டுத்துரை, ‘இவன் தொந்தரவே இனி இருக்கக் கூடாது’ எனக் கத்தினார்.

உடனே எங்களை நோக்கி கையில் கத்தியுடன் நான்கு பேர் ஓடிவந்தார்கள். உயிருக்கு பயந்து நாங்கள் அங்கிருந்து ஓடினோம். முருகானந்தத்தால் ஓட முடியவில்லை. அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

மூளை வெளியில் வரும்வரை அவரது தலையில் வெட்டிக்கொண்டேயிருந்தார்கள். இதைப் பார்த்த ரகுராம், முருகானந்தத்தைக் காப்பாற்ற முயன்றார்.

அவருக்கும் கையில் வெட்டுகள் விழுந்தன. ஒரு நிமிடத்தில் எங்கள் கண்முன்னே முருகானந்தத்தின் உயிர் போய்விட்டது” என்றார் கண்ணீருடன்.

இது தொடர்பாக தாராபுரம் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பேசுகையில், “திட்டமிட்டு, கூலிப்படையினரைவைத்து முருகானந்தத்தை தண்டபாணி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தக் கொலையில் தண்டபாணியின் மகன் கார்த்திகேயனுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், அவரும் கைதுசெய்யப்படுவார். முருகானந்தம் தொடர்ந்து கேட்டு வந்ததால்தான் நில அளவையர் அவரை நிலத்தை அளக்க அழைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்கெனவே, முருகானந்தத்துக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார். இதை தண்டபாணி தரப்பினர் பயன்படுத்திக்கொண்டனர்” என்றார்.

பேராசை, எவ்வளவு கொடூரத்துக்கும் மனிதர்களைத் தள்ளுகிறது!

மூன்று மாத ஸ்கெட்ச்.

சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், “தண்டபாணியால் சட்டரீதியாக முருகானந்தத்தை எதிர்க்க முடியவில்லை.

இப்படியே போனால், எதிர்காலத்தில் தனது சொத்துகள் தன் கையைவிட்டுப் போய் விடும் என பயந்த தண்டபாணி, ஒரேயடியாக முருகானந்தத்தைத் தீர்த்துக்கட்ட முடிவுசெய்திருக்கிறார்.

இந்த வழக்கில் தான் கைதுசெய்யப்பட்டாலும், தன் மகன் கார்த்திகேயனுக்கு இதில் தொடர்பில்லை என்று காட்டிக் கொள்வதற்காக, திட்டமிட்டு மூன்று மாதங்களுக்கு முன்பே அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பிவைத்துவிட்டார்.

பிரச்னைக்குரிய நிலத்தைச் சுற்றி, தண்டபாணி கடைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்தக் கடைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றச் சொல்லியிருக்கிறார்.

திருச்சியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, நாகராஜன் மூலம் கூலிப்படையை வைத்து மூன்று மாதங்களாகக் கண்காணித்து இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கிறார்கள். கூலிப்படையினருக்கு ரூ.60 லட்சம் வரை கைமாறியிருக்கிறது” என்றனர்.

Share.
Leave A Reply