“இரு மனம் இணையும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் இருப்பார்கள்.

இந்த திருமணத்தில் அடியெடுத்து வைத்த ஒரு இளம்பெண், முதல் நாளிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவருக்கும் திருமண வீட்டார் விருந்து அளித்து அசத்தினர்.

மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.இதனையடுத்து சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார்.

நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர்.

ஆனால் திறக்கப்படவில்லை. அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை மீட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருமண வீடு துக்க வீடானது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.”,

Share.
Leave A Reply