தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இவ்விடயத்தில் எனக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.

ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பி.யான எஸ்.சிறிதரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர் , விடுதலை புலிகள் அமைப்பின் 8 உறுப்பினர்கள், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் ,ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 2 கைதிகள், 2 மரண தண்டனை கைதிகள் 2 பேர் வெலிக்கடை , மெகசின், மஹர, தும்பர,பூஸா மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலையாவார்கள். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணையளிக்கப்படும் பட்சத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது மேன்முறையீடு செய்து பிணை பெற்றுக்கொள்ளலாம்.

சிறைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில் என்னை சிலர் சந்தித்தனர். இவ்விடயத்தில் எனக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது. ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும். சாதகமான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Share.
Leave A Reply