ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது. ஒப்பீட்டளவில் கடந்த கால அரசாங்கங்களுக்கு இருந்த அழுத்தத்தை விடவும் இது அதிகமானது.

இதற்கு காரணம் இதுவரை புதை குழிக்குள் போட்டு மூடப்பட்டு, பூசிமெழுகப்பட்ட மனிதப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள், அதற்கு பொறுப்பான இலங்கை படைத்தரப்பின் உயர் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் பெயர் விபரங்கள் எல்லாம் செம்மணியோடு சேர்த்து தோண்டப்படுவதுதான்.

அநுர அரசாங்கம் மட்டும் அல்ல அனைத்து அரசாங்கங்களும் குற்றம் செய்த இராணுவ கட்டமைப்பை தண்டிக்க -காட்டிக்கொடுக்க தயாராயில்லை.

அவர்களை தேசத்தின் பாதுகாவலர்கள், தேசபக்தர்கள், தேசிய மாவீரர்கள் என்றே அரசாங்கம் காட்ட முனைகிறது.

கிரிஷாந்தி கொலைவழக்கில் இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பு அரசாங்கம் திட்டமிட்டு, நீதித்துறையை அச்சுறுத்தி சர்வதேச அழுத்தத்தில் இருந்து தப்பிக்கொள்ள சந்திரிகா அரசாங்கம் மேற்கொண்ட அநீதி என்று பாதிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் ஒருவரின் மனைவி ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எழுதியுள்ள கடிதம் கடந்த கால கைதுகள், காணாமல் ஆக்கப்பட்ட கொலைகளுக்கு வெளிச்சம் போடுகிறது.

கிரிஷாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனைக்காக 29 வருடங்களாக சிறையில் காத்திருக்கும் (இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை) கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி. விஜயவிக்ரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைக்கிறது.

“சர்வதேச விசாரணை ஒன்றில் செம்மணி குறித்து சாட்சியமளிக்க தனது கணவர் தயாராக இருக்கிறார்….” என்று ஜனாதிபதிக்கான அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இதுவரை இருந்த தென்னிலங்கை நிலைப்பாட்டை பலவீனமடையச்செய்துள்ளது. இனியும் ஜனாதிபதி “அரசாங்கம், அரசாங்கத்தை விசாரணை செய்கிறது” என்று சொல்லிக்கொள்ள முடியாது. இது தமிழ்ச்சமூகம் இதுவரை கூறிவந்த “கொலையாளி எவ்வாறு நீதிபதியாக முடியும்” என்ற கேள்விக்கு தக்க பதிலாக உள்ளது.

“கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் எனது கணவருக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை.”

“மாறாக ஏழாவது படைத்தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கப்டன் லலித் ஹேவாகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைது செய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஏழாவது படையணி தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டு வரப்படும்.”

“அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த உடல்களைப் புதைக்குமாறு கப்டன் லலித் ஹேவாகேயினால் ஆணையிடப்படும். அதன் பிரகாரம் எனது கணவர் உள்ளடங்கலாக ஐவரால் சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்படும்…..”

என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தான் “சுறாக்கள் வெளியில் நெத்தலிகள் வலையில்” என்பது. சந்திரிகா அரசாங்கம் குற்றம் செய்த இராணுவத்தினரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி, நீதியை நிலைநாட்டியுள்ளோம் என்று சர்வதேசத்திற்கு காதில் பூ வைத்துள்ளது.

கட்டளையிடும் தரத்திலான மேலதிகாரிகள் காப்பாற்றப்பட்டு, வேலையற்ற சிங்கள இளைஞர்கள் வேறுவழியின்றி வேலைவாய்ப்புக்காக இராணுவத்தில் இணைந்த தவறுக்காக பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனர்.

சமாதான தேவதை (?) சந்திரிகா குமாரதுங்கவின் சகோதரி சுனேத்திராவின் கணவர் குமார் ரூபசிங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்பதாலும், கிரிஷாந்தி குடும்பத்தின் உறவினர் என்பதாலும் இந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தது என்பதையும் அந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது.

இங்கு எழுகின்ற மற்றொரு கேள்வி சர்வதேசத்தால் அறியப்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குமார் ரூபசிங்க குறித்த நேர்மையாகும். மேலதிகாரிகள் தப்பிக்கொள்ள குமார் ரூபசிங்கவும் காரணமாக இருந்துள்ளாரா?. மனித உரிமைகள் செயற்பாட்டாளரான இவர் மனித உரிமையையும், நீதியையும் சேர்த்து செம்மணியில் புதைத்திருக்கிறாரா?

அத்தோடு குமார் பொன்னம்பலம் இந்த விபரங்களை சாட்சியமாக ஜெனிவாவுக்கு கொண்டு வரவிருந்த நிலையில் தான் கொல்லப்பட்டார் என்பதையும் அந்த கடிதம் வெளிப்படுத்தியுள்ளது. குமார் பொன்னம்பலத்தை அரசாங்கத்தரப்பே கொலை செய்தனர் என்ற சந்தேகத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு சாட்சியம் இது.

செம்மணி அரச பயங்கரவாத “மர்ம நாவல்” இப்படி எழுதப்பட, திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் “கன்சைட்” அன்டகிறவுண்ட் சித்திரவதைமுகாம் சட்டவிரோதமானது என்று முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த உள்நாட்டு சூழ்நிலை திருப்பங்களுக்கு மத்தியில், சர்வதேசத்தின் கவனம் இலங்கை பக்கம் மேலும் திரும்பி உள்ளது.

செப்டம்பர் மாத மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடருக்காக கனடா, பிரித்தானியா, மாலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மசிடோனியா என்பன 46/1, 51/1 என்பனவற்றின் தொடர்ச்சியாக மற்றொரு பிரேரணை மூலம் இலங்கைக்கு நெருக்கடியை கொடுக்கவுள்ளன.

ஐ..நா.மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது அரசாங்கம் “குதிரையோடி” வோல்கர் டேர்க் இடமிருந்து பெற்றுக் கொண்ட “சர்டிபிக்கட் ” மாத்திரமே அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே ஆவணம். அதை நம்பியே அமைச்சர் விஜய ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா வருகிறது.

இதற்கிடையில் பிரான்ஸ் இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் கையொப்பமிட்டு செம்மணி உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள், யுத்த குற்றங்களை குறிப்பிட்டு பிரான்ஸ் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச விசாரணையை பிரான்ஸ் அரசாங்கம் கோரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். செப்டம்பர் ஜெனிவாக் கூட்டத்தில் பிரான்ஸ் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு முன் அறிவித்தலாகவே இதைக் கொள்ளவேண்டியுள்ளது.

“Justice et re’paration pour le Peuple Tamoul” என்ற தலைப்பில் 17.07.2025 அன்று திகதியிடப்பட்ட அந்த ஆவணம் இவ்வாறு கூறுகிறது.

” The 220,000 people of Tamil Origin Residency in France, most of Whom arrived to flee the war in the 1980’s, like the rest of the Tamil Community Worldwide, Urgently need truth, Justice, and reparation ….”

இந்த நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சர்வதேச விசாரணை கோரிக்கை வலுப்பெற்று, எம்.ஏ. சுமந்திரனின் “ஆதாரங்கள் இல்லை” என்ற எதிர்வாதம் வலுவிழந்துள்ளது. குமார் ரூபசிங்காவின் அரசியலைத்தான் சுமந்திரனும் செய்கிறாரா? என்ற கேள்வி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய ஆய்வாளர் ரூவன் பத்திரணா “இறுதிவரை தோண்டி எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு கூட இன்னும் இல்லை. புதைகுழியில் காணப்படும் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்ணியமான அடக்கத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும். இந்த வகையில் சர்வதேச மேற்பார்வைக்கான அழைப்புகள் முற்றிலும் நியாயமானவை…” என்று கூறுகிறார்.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை வழங்க இலங்கைக்கு சர்வதேச பொறுப்பும், கடமையும் உள்ளது என்பதையும் ரூவன் பத்திரணா உரத்துச் சொல்லியுள்ளார்.

நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது நீதியின் அடிப்படை. மறுபக்கத்தில் குற்றவாளிகள் தப்பிக்க கூடிய நீதித்துறை சார்ந்த சட்ட ஓட்டைகள் நிறையவே உள்ளன.

இதற்கு கோப்ரலின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதவிபரங்கள் சான்றாகின்றன. இது ஒரு நிவாரணம் கோரும் வெறும் கடிதம் அல்ல, இலங்கையின் நீதித்துறையில் அரசியல், ஆயுதப் படைகளின் தலையீட்டை வெளிப்படுத்தும் ஒரு ஆவணம்.

குற்றத்தில் இருந்து எவரும் சட்ட ஓட்டைகளுக்கூடாக வெளியே தப்பிக்கலாம். ஆனால் குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கவே முடியாது.

குற்றவாளிகள் மரணிக்கும் வரை மனட்சாட்சி அவர்களை துரத்திக்கொண்டே இருக்கும். செம்மணியில் புதைக்கப்பட்ட மானிடமும், ஆன்மாவும் இவர்களை துரத்துகிறது, உறுத்துகிறது என்பதற்கு இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் 29 ஆண்டுகளையும் தாண்டிய கருத்தும், கடிதமும் சான்றாகிறது. கௌதம புத்தரின் போதனைகளை குழிதோண்டி புதைத்த இந்த ஆயுத அரசியலுக்கு இனியும் உள்ளகப்பொறிமுறையால் நீதி கிடைக்கும் என்பது வெறும் கானல் நீராக கரைகிறது.

புத்தரின் போதனைகள் அவர் பிறந்த நாட்டிலும், இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளிலும் மறுதலிக்கப்பட்டு இருந்தாலும் மீதி உலகில் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது – பின்பற்றப்படுகிறது. பௌத்தபீடத்திற்கே பௌத்த தத்துவங்களை போதிக்கின்ற அளவுக்கு வந்துள்ள இடதுசாரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பஞ்சசீலத்தின் அடிப்படையிலான நீதிக்கு வழிவகுப்பாரா…..?

அல்லது,

“உனக்கல்லடி ஊருக்கு” என்ற கதைதானா……?

 

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply