கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ், துசித ஹல்லொலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் சட்டத்தரணிக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சட்டத்தரணி துசித ஹல்லொலுவவுக்கு எதிராக எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த சட்டத்தரணியை கைதுசெய்வதற்கு கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்த இடைக்கால தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.