முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் அதிகளவில் முயற்சிக்கிறது.
இலங்கையின் வரலாற்றில், நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி பதவியில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டது இதுதான் முதல் முறை.
அது மாத்திரமல்ல, ஆறு தடவைகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், ஆறு முறை பிரதமராகவும் பதவியேற்றவர் ரணில்.
அப்படிப்பட்டவரின் கைது நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து நியாயப்படுத்த முற்படுவது அதன் பலமான நிலையை காண்பிக்கவில்லை.
குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் விளக்கமளித்தால் போதும்.
அந்த காரணம் நியாயமானது என ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போது, அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்ப முடியாது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்துவதற்கு, அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டமை இரண்டு விதமான சந்தேகங்களை தோற்றுவித்தது.
அரசாங்கம் கூறுவது போல, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் சுயாதீனமானவையா என்பது ஒன்று.
ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்வதற்கு அரசாங்கத்தின் தூண்டுதல் இருந்ததா என்பது இன்னொன்று.
ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்க விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே, அவர் கைது செய்யப்படுவார், விளக்கமறியலில் வைக்கப்படுவார் என ஒரு ‘யூரியூபர்’ கூறியிருந்தார். அவர் பொலிஸ் பாதுகாப்புடன் இருந்தவர், அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க விசாரணைக்கு முன்னிலையாகி கைது செய்யப்படுவதற்கிடையில், பாராளுமன்றத்தில் அவர் மீது அமைச்சர்கள் குற்றம்சாட்டும் வகையிலும், கைது நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியிருந்தனர். இதனால் இந்த கைது நடவடிக்கை ஒரு திட்டமிட்ட செயற்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்தக் கைது வேறுபட்ட கருத்துக்களையும் உணர்வுகளையும் தோற்றுவித்திருந்தாலும், இது சரியானதா என்ற கேள்வி நீடிக்கிறது.
அந்த சந்தேக நிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பது, அரசாங்கத்தின் தோல்வி எனலாம்.
இதனால் தான், அரசாங்கம் அதிகளவில் தனது வளங்களை பயன்படுத்தி, தமக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முற்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டியவர் அல்லர் என்றோ, அவர் கைது செய்யப்பட்டது தவறு என்றோ யாரும் கூற வரவில்லை. மாறாக, அவர் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு பற்றியே அதிக விமர்சனங்கள் வருகின்றன.
ஏனென்றால், அவர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க.
• 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்கு பிறகு இடம்பெற்ற வன்முறைகளுக்கு ரணில் பொறுப்புக்கூற வேண்டியவர்,
• 1981இல் யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்பு மற்றும், 1983 ஜூலை கலவரத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்,
• 1988–89 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது 60,000 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்,
• பட்டலந்த வதை முகாம் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்,
• மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 ஆயிரம் கோடி ரூபா பிணைமுறி மோசடியில் தொடர்புபட்டவர் என வரிசையாக, குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் பிமல் ரத்நாயக்க.
இவை அனைத்தும் மிகப்பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள். 40 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிவர் என்றும், தங்களின் ஆட்சியில் தான் அது நடந்து இருக்கிறது என்றும், பிமல் ரத்நாயக்க கூறியிருப்பது முக்கியமான விடயம்.
40 ஆண்டுகளாக அவர் கைது செய்யப்படவில்லை என்றால், இவ்வளவு காலமும், நாட்டில் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை இருந்திருக்கிறது. அப்படியானால், இப்பொழுது அந்த நிலை இல்லையா? தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதா?
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை, இல்லாமல் போயிருக்கிறதே தவிர, அரசியலிலும் படைகளிலும் அந்த நிலை மாறவில்லை.
குற்றமிழைத்த பெரும் எண்ணிக்கையான அரச படையினரும் அதிகாரிகளும் இன்னமும் எந்த விசாரணைகளுமின்றி சுதந்திரமாக இருக்கிறார்கள்.
அவர்கள் யாரும், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாத நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல், அவரைக் கொண்டு வந்து சிறைச்சாலை வளவுக்குள் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறது. அவர் தனக்குத் தானே வெட்டிய குழியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே சரியானது.
அரசியலில் நரி என அழைக்கப்படும் அவரால் இந்த கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை.
சஜித் பிரேமதாசவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் மேற்கொண்டார்.
கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும், அவரை தோற்கடிப்பதற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் பல முயற்சிகளைச் செய்தார்.
கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளைப் பிளவுபடுத்தினார். அதன் விளைவாகத்தான் அநுரகுமார திசாநாயக்க இலகுவாக ஆட்சிக்கு வந்தார்.
அந்த ஆட்சி தான் ரணில் விக்கிரமசிங்கவை சிறைக்குள் தள்ளியது.
இது ரணில் தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட பொறி.
அவர் பொறியில் சிக்கிக் கொண்டாலும், இந்தப் பொறி மிக மிக சிறியது.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கின்ற குற்றச்சாட்டு அற்பத்தனமானது என்பதை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே ஒப்புக் கொண்டிருக்கிறார். நாட்டின் மிகப்பெரிய தலைவரை மிகச் சிறிய குற்றச்சாட்டை வைத்து சிறைக்குள் தள்ளுவது என்பது சாதாரண விடயம் அல்ல.
இது அவரது அரசியல் பாத்திரத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர் என்று பெருமைக்கு உரியவர். இதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக் ஷ சீரழித்து விட் டுப் போன பொருளாதாரத்தை, மீண்டும் மேல் நோக்கிய பாதைக்கு கொண்டு வருவதில் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய பணி குறைத்து மதிப்பிடத்தக்கது அல்ல.
அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு தான் இது.
ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்று பொருளாதாரத்தை சரியான திசைக்கு கொண்டு வர தவறி இருந்தால் நாடு சீரழிந்திருக்கும். சின்னாபின்னமாகி இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருந்தால் கூட அவர்களால், பூச்சிய நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால், ரணில் கடினமாக முயற்சித்து, பொருளாதார ரீதியாக நாட்டை ஓரளவுக்கு இயல்பு கொண்டு வந்த பின்னர், அவரைத் தட்டி விட்டிருக்கிறது அரசாங்கம்.
ரணில் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தும் அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை, ஏன் அந்த பாரிய குற்றங்கள் மீத அரசாங்கம் செயற்படவில்லை என்றும் தெரியவில்லை.
மிகச்சிறிய குற்றச்சாட்டை வைத்து அவரை கைது செய்ததன் மூலம், அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்ற கருத்தையே உருவாக்கியிருக்கிறது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பாரேயானால் அவர் மீது இந்தளவுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்காது.
அவசரப்பட்டு அவரை சிறியதொரு குற்றச்சாட்டில் கொண்டு போய் சிக்க வைத்தது, அரசாங்கத்துக்கே பாதகமாக மாறியிருக்கிறது.
அதேவேளை, ரணில் கைது செய்யப்பட்டமை, அவருக்கு நன்மையையே தந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக் ஷான் பெல்லன கூறியிருக்கிறார். ஏனென்றால் இந்தக் கைது தான், ரணில் ஆபத்தான மருத்துவ நிலையில் இருப்பதை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்கிறது.
அப்படியானால் அவரது கைதை நியாயப்படுத்தி வந்த அரசாங்கம், இனி, அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம் என்று பிரசாரம் செய்தாலும் ஆச்சரியமில்லை.
-சத்ரியன்-