மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம். சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம் என மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயக அம்சங்களுககு அப்பாற்பட்டது என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது.இந்த பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இருப்பினும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை தொடர்ந்து நிர்வகிக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை.பழைய தேர்தலிலும் தேர்தலை நடத்த முடியாது புதிய தேர்தல் முறையிலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் காணப்படுகிறது.சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம்.தேர்தலை பிற்போடும் நோக்கம் எமக்கு கிடையாது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதமளவில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம்.சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம்.பொதுவான கொள்கைக்கு அமைய தீர்மானமொன்றை எடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply