யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடி கட்டிடமொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

2006 ஆம் ஆண்டில் அரச பல்கலைக்கழகங்களில் இணைந்த சுகாதார விஞ்ஞானம் தொடர்பாக பட்டப்படிப்புக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியல் மற்றும் தாதியம் தொடர்பான துறைகளில் மூன்று விஞ்ஞானமானி பட்டப்படிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் அனைத்து இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு பாடத்துறைகளில் (மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியல், தாதியம் மற்றும் உடற்கல்வி) 952 மாணவர்கள் கற்கைகளில் ஈடுபடுகின்றனர்.

2017 ஆம் ஆண்டில் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பினும், நிலவிய நிதி நெருக்கடிகளால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

அதனடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூடம். ஆய்வுக்கட்டுரை அறை, ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடத்துடன் கூடிய புதிய ஐந்துமாடிக் கட்டிடமொன்றை 2,234 மில்லியன் மதிப்பீட்டுச் செலவில் நிர்மாணிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share.
Leave A Reply