யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது தாமதித்து வந்திருக்கும் ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு. இலங்கையில் கிரிக்கெட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு வடக்குப் பக்கமும் அது விரிவுபடுத்தப்பட வேண்டி இருக்கிறது.

யாழ்ப்பாணம், மண்டை தீவில் 138 ஏக்கர் காணியில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த மைதான வேலைகளுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் அடிக்கல் நட்டுவைத்தபோது உண்மையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்க்கலாம் போல் தெரிகிறது.

இந்த நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வாவிடம் எப்போது மைதானம் தயாராகும் என்று வெளிப்படையாக கேட்டார்.

அப்போது, இங்கு எதிர்வரும் டிசம்பரிலேயே உள்ளூர் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச போட்டி நடைபெறும் என்றும் ஷம்மி சில்வா கூறிய பதில் வெறுமனே அரசியல் பேச்சாக இருக்கக் கூடாது என்பது எதிர்பார்ப்பு.

கட்டப்படும் மைதானம் இலங்கையின் ஏழாவது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக அமையப்போகிறது. அதிலும் மின்னொளி பொருத்தப்பட்ட ஐந்தாவது அரங்காக இருக்கும். அத்தோடு நிற்கவில்லை இது ஒரு பிரமாண்ட திட்டம், இறுதியில் யாழ்ப்பாணத்தில் விளையாட்டு நகர் ஒன்றை அமைப்பதே நோக்கம்.

நீச்சல் தடாக தொகுதி, பல விளையாட்டுகளுக்கான உள்ளக அரங்கு, நட்சத்தர தரத்திலான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள், வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று இலங்கை கிரிக்கெட் சபை வகுத்திருக்கும் திட்டமோ பிரம்மாண்டமானது.

இதிலே 48 ஏக்கர் நிலத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், ஆடுகளத்தின் நடுவே 10 விக்கெட்டுகள் அதாவது துடுப்பெடுத்தாடும் பகுதி அமைக்கப்படும். பௌண்டரி தூரம் சர்வதேச தரத்துக்கு அமைய 80 மீற்றர்கள் இருக்கும். 40,000 பேருக்கு பார்க்கக் கூடியதான அரங்கு அமைக்கப்படும். கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்திலேயே 35,000 ரசிகர்களுக்குத் தான் இடம் உண்டு என்றால் இதன் அளவை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பிராந்தியத்தில் இந்த மைதானம் கிரிக்கெட்டை வளர்க்கும் என்று சொல்வது எந்த அளவுக்கு நம்பக் கூடியது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்,

ஆனால் மைதானம் கொழும்பு, காலி, கண்டி, பல்லேகல என்ற இலங்கை கிரிக்கெட்டின் குறுகிய வட்டத்தை சற்று பெரிதாக்கி இருக்கிறது என்பது மாத்திரம் உண்மையே. இங்கே சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கும்போது அது இலங்கையின் மற்றொரு பக்கத்தை உலகுக்கு காண்பிப்பதாக இருக்கும்.

போர் முடிந்து பதினாறு ஆண்டுகள் கடந்த பின்னர் இலங்கை மக்களின் வாழ்வுடன் கலந்துவிட்ட கிரிக்கெட் என்பது யாழ்ப்பாணம் அல்லது இலங்கையில் வட முனை பக்கம் சென்றடைந்திருப்பதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட இந்த மைதானத்தை அடையாளப்படுத்தலாம்.

என்றாலும் கடந்த கால வரலாற்றை வைத்துத் தான் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சூரியவௌ ஹம்பாந்தோட்ட சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் எதிர்பார்ப்புகள் பிரமாண்டமாக இருந்தன.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இந்த மைதானம் காட்டுக்கு நடுவே கட்டப்பட்டது. ஆனால் ஹம்பாந்தோட்டையையே நாட்டின் இரண்டாவது தலைநகராக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த மைதானம் இருந்தது.

அந்தத் திட்டத்திற்கான செலவு மதிப்பீடு 852 மில்லியன் ரூபாவாக இருந்தாலும் கட்டி முடித்தபோது 4.2 பில்லியன் ரூபா செலவாகி இருந்தது.

அந்த விலைப் பட்டியலை பேசப்போனால் அரசியல் கலந்துவிடக்கூடும்! இன்று அந்த பிரம்மாண்ட கட்டுமானம் என்பது கவனிப்பாரற்றுப் போய்விட்டது.

அவ்வப்போது தான் சர்வதேச போட்டி ஒன்று நடக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கே ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றை பார்த்ததில்லை

என்பதோடு 2013 இற்கு பின் டி20 சர்வதேச போட்டி ஒன்றே நடந்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் அங்கே எட்டிப் பார்க்கக்கூட இல்லை. அதற்கு அப்பால் மகளிர் சர்வதேச போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் சில நடக்கின்றன.

‘இடம், பொருள், ஏவல்’ என்பது கிரிக்கெட் மைதானங்களுக்கும் பொருந்தும் என்பது சூரியவௌ மைதானம் நல்ல உதாரணம். ஒரு பிராந்தியத்தில் விளையாட்டை வளர்க்க வேண்டும் என்றால் கீழிருந்து மேலே செல்ல வேண்டுமே ஒழிய மேலிருந்து கீழே வர முடியாது.

இதற்காக யாழ்ப்பாணத்திற்கு கிரிக்கெட் மைதானம் தேவை இல்லை என்று அர்த்தமில்லை, ஆனால் அங்கே தேசிய அணிக்கு சரிசமமான வீரர்களை உருவாக்கும் அளவுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பது பற்றியும் இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் யோசிக்க வேண்டும்.

வடக்கு பக்கம் இருந்து இப்போது அதிக கிரிக்கெட் வீரர்கள் வர ஆரம்பித்து விட்டார். அதற்கு அங்கிருக்கும் பாடசாலை மட்ட கிரிக்கெட் தான் காரணம்.

சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த வியாஸ்காந்த் தேசிய அணியில் ஏற்கனவே அறிமுகம் பெற்றுவிட்டார் என்பதோடு ஐ.பி.எல். கிரிக்கெட் வரை சென்றுவிட்டார்.

லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் யாழ். பரி யோவான் கல்லூரியின் குகதாஸ் மதுலன் இப்போது இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெற்று மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முக்கிய வீரர் ஒருவராக இருக்கும் விக்ணேஷ்வரன் ஆகாஷ் கூட யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்தவர்.

மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஏழு போட்டிகளைக் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக ஆகாஷ் உள்ளார். இந்தத் தொடரில் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் அவர் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதானமாகக் கூறியது, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சிங்களம், தமிழ், முஸ்லிம் வீரர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பன்முகத்தன்மையை பார்க்க விரும்புவது என்பதாகும்;.

இன்று வரை இலங்கை தேசிய அணியில் இருக்கும் முக்கிய குறையாக பார்க்கப்படுவதும் இந்த பன்முகத் தன்மை தான். முத்தையா முரளிதன் போன்ற அதீத திறமை கொண்டவர்கள் தவிர்த்து சாதாரணமாக இலங்கை அணியில் சிறுபான்மையினரை பார்க்க முடிவதில்லையே என்பது அவ்வப்போது எழுப்பப்படும் ஒரு குறை.

ஆனால் இந்தக் குறைக்கான பொத்தாம்போது நியாயங்களை பேசுவதை விட இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பை புரிந்த கொள்வது முக்கியம்.

இங்கே சிறுவான்மையினருக்கு மாத்திரம் அல்லது குறிப்பிட்ட வட்டத்துக்கு அப்பால் தேசிய அணியில் இடம்பெறுதென்றாலேயே அதீத திறமை தேவை. ஒருசில குறிப்பிட்ட பாடசாலைகள் மற்றும் கொழும்பை மாத்திரம் மையப்படுத்திய கிரிக்கெட் கழகங்களை தாண்டி கிரிக்கெட்டில் பிழைப்பு நடத்துவது மிகக் கடினம்.

குறிப்பிட்ட அந்த பாடசாலைகளாகட்டும், தமிழ் யூனியன், சோனகர் கழகம் என்று பெயர்களை வைத்திருக்கும் கிரிக்கெட் கழகங்கள் உட்பட கழக மட்ட கிரிக்கெட் ஆகட்டும், கொழும்புக்கு அப்பால் பிராந்திய அளவிலாகட்டும் ஏன் நாட்டின் சனத்தொகை அடிப்படையிலாகட்டும் சிறுபான்மை வீரர் ஒருவர் தேசிய அணி வரை முன்னேறுவது சற்று அரிதான நிகழ்வாகத்தான் இருக்கிறது.

சிறுபான்மையினர் ஒரு பக்கம் இருக்க இந்த கிரிக்கெட் வட்டத்திற்கு, வெளியே இருந்து உள்ளே நுழைவது என்பது எல்லோருக்கும் சவாலான ஒன்று.

எனவே, யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று அமைவது என்பது இந்த கிரிக்கெட் ஏகபோகத்தை உடைப்பதற்கு உதவினால் ஆரோக்கியமானதாக இருக்கும்.

Share.
Leave A Reply