பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக,< திறந்தவெளி சிறைச்சாலைபோலக் காட்சியளிக்கிறது காஸா நகரம். எங்கு பார்த்தாலும் இடிபாடுகள், எப்போதும் வெடிகுண்டுச் சத்தம், உண்ண உணவின்றித் தவிக்கும் மக்கள் என பூமியின் நரகமாக மாறியிருக்கிறது காஸா பகுதி.
`ஹமாஸ் படையைத் தீர்த்துக்கட்டவே இந்தப் போர்’ என்று சொன்ன இஸ்ரேல், தற்போது, ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் ஒழித்துக்கட்ட முயன்றுகொண்டிருக்கிறது.
காஸாவில் மட்டுமன்றி, தனது அண்டை நாடுகள்மீதும் அவ்வப்போது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், கடும் எதிர்ப்புகளையும் மீறி காஸாவின் வடக்குப் பகுதியை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம்!
விரட்டியடிப்பும்… ஆக்கிரமிப்பும்!
இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே கண்ணீரோடு காலம் தள்ளிவந்த காஸா மக்களை, இரக்கமேயின்றி அங்கிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் எல்லையை ஒட்டியுள்ள காஸாவின் வடக்குப் பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கத் திட்டமிட்டிருக்கிறார்
அந்த நாட்டின் பிரதமர் நெதன்யாகு. இதனால், கடந்த சில நாள்களாகவே அங்கு அதிதீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக வடக்குப் பகுதியை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது. வான்வழித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலும், தரைவழியாக இஸ்ரேல் படை முன்னேறி வருவதாலும், பாலஸ்தீன மக்கள் காஸாவின் தெற்குப் பகுதியை நோக்கிக் கால்நடையாகச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர்.
`போரால் ஏற்பட்ட வலியைவிட, ஆயிரம் மடங்கு வலியோடு எங்கள் மண்ணைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் வாழ்ந்த, எங்களை வளர்த்தெடுத்த இந்த நகரம் இனி எங்களுக்குச் சொந்தமானதில்லை என்கிறது இஸ்ரேல்.
இனி எங்கள் வாழ்க்கை என்னவாகுமோ?!’ என்ற புலம்பலோடு, பாலஸ்தீனர்கள் காஸாவின் தெற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளையும், கையில் கிடைத்த சில உடைமைகளையும் தூக்கிச் சுமந்துகொண்டு, காஸாவின் கடற்கரையோரமாகச் சாரை சாரையாக மக்கள் வெளியேறும் காட்சிகள், நம் நெஞ்சை உலுக்குகின்றன.
அக்டோபரில் இந்தப் போர் தொடங்கியபோது, `காஸா நகரை ஆளும் ஹமாஸ் படை கடத்திச் சென்ற இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்பதற்காகவே தாக்குதல் நடத்துகிறோம்’ என்றார் நெதன்யாகு.
ஆனால் தற்போது, `இனி காஸாவின் வடக்குப் பகுதி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும்’ என்றிருக்கிறார்.
அதாவது, காஸாவை ஆக்கிரமித்து, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக அதை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இஸ்ரேல்.
நெதன்யாகுவின் இந்தத் திட்டத்தை, துருக்கி, எகிப்து, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன.
ஐ.நா சபையும், `இரு தரப்பு ஒப்பந்தத்தையும், சர்வதேசச் சட்ட விதிகளையும் மீறி, காஸாவை ஆக்கிரமிக்க நினைக்கும் இஸ்ரேலின் திட்டம், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. இதை உடனடியாகக் கைவிட வேண்டும்’ என்று எச்சரித்தது.
அந்த எச்சரிக்கையைத் துளியும் கண்டுகொள்ளாத நெதன்யாகு, ஆக்கிரமிப்புப் பணியை வேகப்படுத்தியிருக்கிறார்.
`வடக்கு காஸாவை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, தெற்கிலிருந்தும் மக்களை விரட்டியடிக்க நெதன்யாகு நிச்சயம் திட்டம் தீட்டுவார்’ என்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.
நெதன்யாகுவின் கூட்டாளியான அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “காஸாவை அமெரிக்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைக்கிறோம். உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் வசிக்கும் ஒரு சொகுசு நகரமாக அதை மாற்ற விரும்புகிறோம்’’ என்று சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.
எனவே, முழுமையாக ஆக்கிரமித்த பின்னர், காஸாவின் கட்டுப்பாட்டை அமெரிக்கா வசம் நெதன்யாகு ஒப்படைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஐந்து நாடுகளில் அட்டூழியம்?
காஸாவிலுள்ள ஹமாஸ் படைக்கு எதிராகப் போர் தொடுத்த இஸ்ரேல், இதுவரை ஐந்து நாடுகள்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஏமன், லெபனான், சிரியா, ஈரான், கத்தார் என மத்திய கிழக்கிலுள்ள நாடுகளைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறது.
இதில், `ஈரான், ஹமாஸை ஆதரிக்கிறது என்பதால் அவர்களைத் தாக்கினோம்’ என்றது இஸ்ரேல்.
லெபனான், ஏமன், சிரியா நாடுகளிலுள்ள ஆயுதப்படைக் குழுக்களும் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேலைத் தாக்க, பதிலுக்கு அந்த நாடுகள்மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
ஆனால், பாலஸ்தீனத்தில் அமைதி உண்டாகப் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவந்த கத்தார் நாட்டின் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல்.
பல மோதல்களைத் தனது தலையீட்டால் நிறுத்திக் காட்டிய கத்தார் நாடு, இஸ்ரேல் – ஹமாஸ் மோதலையும் நிறுத்த, தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தது.
தனது கூட்டாளியான அமெரிக்காவின் ஆதரவைப் பெற்று இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்த கத்தாரை, இஸ்ரேல் தாக்கியது பெரும் சர்ச்சையானது.
ஹமாஸ் தலைவர்கள் சிலர் கத்தார் தலைநகர் தோஹாவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு தாக்குதல் நடத்தியதாகச் சொன்னது இஸ்ரேல்.
`பல நாடுகளின் இறையாண்மையை மீறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் இஸ்ரேல், அடுத்து எங்களையும் தாக்க வாய்ப்பிருக்கிறது’ என்றது துருக்கி.
இதையடுத்து, அவசர அவசரமாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கத்தாரில் ஒரு உச்சி மாநாட்டை நடத்தின.
இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட எகிப்து நாட்டின் அதிபர் அஃப்தெல், “நேட்டோ போன்று இஸ்லாமிய நாடுகளுக்கென ஒரு தனி ராணுவத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.
இந்த ராணுவத்துக்குச் சுழற்சி முறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாடு தலைமை தாங்க வேண்டும்.
இஸ்ரேலின் அட்டூழியங்களை ஒடுக்க, நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்’’ என்று முன்மொழிந்தார்.
எகிப்து அதிபரின் இந்தத் திட்டத்தைப் பெரும்பாலான நாடுகள் ஆதரித்திருக்கின்றன. இருந்தும், `அரபு நாடுகளுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இதைச் சாத்தியப்படுத்துவது கடினம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
`இனப்படுகொலைதான்’ – அடித்துச் சொன்ன ஐ.நா!
இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படை சுமார் 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே, `இனப்படுகொலை’ என்ற வார்த்தை பிறந்தது. நாஜி வதை முகாமிலிருந்து தப்பித்த யூதர்கள் பலரும், இன்று இஸ்ரேலாக இருக்கும் அப்போதைய பாலஸ்தீனப் பகுதியில் தஞ்சமடைந்தனர்.
பின்னர், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி, `இஸ்ரேல்’ என்ற பெயரில் யூதர்களின் நாடானது. இன்று அந்த இஸ்ரேல் நாட்டை ஆட்சிசெய்யும் நெதன்யாகு, பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் காஸா பகுதியில் வசிக்கும் மக்களை ரத்தவெறியோடு இனப்படுகொலை செய்துகொண்டிருக்கிறார்.</
இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை’ என்று சில நாடுகளும், பல பத்திரிகையாளர்களும் சொல்லிவந்த நிலையில், ஐ.நா-வும் `இது இனப்படுகொலைதான்’ என்பதை ஆதாரங்களுடன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அமைத்த விசாரணைக்குழு ஒன்று, இது தொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளைக் குறிவைத்துக் கொலை செய்திருக்கிறது
இஸ்ரேல் ராணுவம். காஸாவில் குழந்தை பிறப்பைத் தடுக்கும் நோக்குடன், அங்கிருக்கும் மிகப்பெரிய கருத்தரிப்பு மையத்தில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
மக்கள் வசிக்கும் இடங்கள், மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியது இன அழிப்புக்கான ஆதாரங்களாக இருக்கின்றன.
காஸா மக்களுக்கு உணவு கிடைக்கவிடாமல் செய்து, பட்டினியில் தள்ளி, அவர்கள் உயிரைப் பறிக்கும் நோக்கில் செயல்பட்டிருக்கிறது இஸ்ரேல்.
ராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி, இஸ்ரேல் அரசின் முக்கியப் புள்ளிகள் இனப்படுகொலையைத் தூண்டும் நோக்கில் பேசியிருக்கிறார்கள்.
குறிப்பாக நெதன்யாகு, யூதர்களுக்கான பைபிளில் வரும் அமலேக் (Amalek) கதையைச் சொல்லி, அதை காஸாவுக்கு எதிரான போருடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
யூதர்களின் பைபிளில், அமலேக் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அவர்களது உடைமைகள், விலங்குகள் என அனைத்தையும் அழித்துவிடுமாறு யூத மக்களுக்குக் கடவுள் சொன்னதாக எழுதப்பட்டிருக்கிறது.
அதேபோல, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், `இஸ்ரேலிய மக்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்ற ஹமாஸுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் நிற்கவில்லை. எனவே, அனைத்து பாலஸ்தீனர்களுமே இதற்குப் பொறுப்பு’ என்று பேசியிருந்தார்.
ஹமாஸை மட்டுமல்ல, பாலஸ்தீனர்கள் அனைவரையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற தொனியில் அவர் பேச்சு இருந்தது’’ என இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அடங்குவாரா நெதன்யாகு?
`இஸ்ரேல் செய்வது இனப்படுகொலைதான்’ என்று தெரிந்தும், இந்தப் போரைத் தொடர்ந்து ஆதரித்துவருகிறது அமெரிக்கா.
உக்ரைனில் போர்புரியும் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்க்கும் ட்ரம்ப், இஸ்ரேல் செய்யும் கொடூரங்களைக் கண்டுகொள்வதில்லை.
பெயரளவுக்குக் கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு, இந்தப் போரை ஆதரித்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்திருக்கின்றன. சில பொருளாதாரத் தடைகளையும் இஸ்ரேல்மீது விதித்திருக்கின்றன. “கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பல நாடுகளும் இஸ்ரேல் மீது விதிக்க வேண்டும்.
அமெரிக்காவும் கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிப்பதைக் கைவிட வேண்டும். இது இரண்டும் நடந்தால் மட்டுமே நெதன்யாகுவின் ரத்தவெறியை அடக்க முடியும்’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
நெதன்யாகுவுக்கு எதிராக அவரது வீட்டின் முன்பாக இஸ்ரேல் மக்கள் பலரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். “பிணைக்கைதிகளை மீட்டுவர வழி செய்யாமல், காஸாவை ஆக்கிரமிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் நெதன்யாகு.
அவர் பதவி விலக வேண்டும். போரை நிறுத்திவிட்டு, பிணைக்கைதிகளை மீட்டு வருவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்’’ என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் இறங்காத நெதன்யாகு… வெளிநாட்டிலிருந்து வரும் அழுத்தங்களைக் கண்டுகொள்ளாத நெதன்யாகு, உள்நாட்டிலிருந்து கிளம்பியிருக்கும் சொந்த மக்களின் குரலுக்காவது மதிப்பளிப்பாரா..?!