தியாக தீபம் திலிபன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். அவர் எமது மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் தன் இன்னுயிரினைத் தியாகம் செய்தார். தியாக தீபத்தின் நினைவுகளை எமது மக்கள் வரலாற்று ரீதியில் என்றும் நினைவுகூர்கின்றனர் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார்.

பிரதேச சபையில் வியாழக்கிழமை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், எமது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் தன் உயிரை நீராகாரம் ஏனும் அருந்தாது ஆகுதியாக்கிய மகானுக்கு தமிழர் தேசம் அஞ்சலிக்கின்றது. இன்றும் தியாக தீபம் திலிபன் எதற்காகப் போராடினாரோ அவரது போராட்டத்திற்கான காரணங்கள் தீர்க்கப்படாது அவ்வாறே கானப்படுகின்றன. அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிரான அடிப்படைகளில் எவ்வித மாற்றத்தினையும் செய்யவில்லை.

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் அவ்வாறே காணப்படுகின்றது. அவ் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை திறன்பட முன்னெடுக்கத்தக்க சட்டங்கள் வலுவில் காணப்படுகின்றன. அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு குறைந்தபட்ச பொறுப்புக்கூறல் ஏனும் இடம்பெறவில்லை.

யதார்த்தம் இவ்வாறிருக்க நடைமுறையில் இப்போதைக்கு பிரச்சினையில்லை என அரசாங்கம் சமாளிப்புச் செய்கின்றது. இனப்பிரச்சினையினையினை, மனிதாபிமானப்பிரச்சினைக்குத் தீர்வின்றி நடைமுறையில் அரச நிர்வாகத்தில் சமாளிப்புக்களைச் செய்வதன் வாயிலாக எல்லோரையும் ஏமாற்ற அரசு நினைக்கின்றது.

இவ்விடத்தில் நாங்கள் ஓர் இனமாக இலட்சியத்தினால் ஒன்றுபட்டவர்களாக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட எமது சுயநிர்ணய உரிமைக்காக நாம் போராடவேண்டியுள்ளது. அதற்கு தியாகி திலிபன் அவர்களது தியாகங்கள் எமக்கு வழிகாட்டியாகவுள்ளன. இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   தெரிவித்தார்.

Share.
Leave A Reply