விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது?
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?
சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து சில தகவல்களை சென்னை கியூ பிரிவு போலீஸிடம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்கு மேரி ஃபிரான்சிஸ்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, இலங்கை பாஸ்போர்ட்டின் அசல் ஆவணம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குடியேற்ற பணியக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர், முறைகேடான வழியில் இந்திய அரசின் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த தகவலை சென்னை கியூ பிரிவு சிஐடி காவல் ஆய்வாளர் வேலவனிடம் குடியேற்ற அதிகாரி சதாசிவம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல், தமிழ்நாடு அரசின் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.
2021-ல் மேரி ஃபிரான்சிஸ்கா கைது
“இலங்கையைச் சேர்ந்த மேரி ஃபிரான்சிஸ்கா, இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணா நகரில் தங்கியுள்ளார். அவரின் சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவில் வசிப்பதற்கான ஆதாரங்களை முறைகேடாக பெற்றுள்ளார்” என்று கியூ பிரிவு சி.ஐ.டி குற்றம் சுமத்தியது.
இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேரி ஃபிரான்சிஸ்காவை கைது செய்து நீதிமன்றக் காவலில் கியூ பிரிவு சி.ஐ.டி போலீஸ் அடைத்துள்ளது.
காவல்துறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
’42 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுக்க திட்டம்’
காவல்துறை நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான பாலைய்யா, உமாகாந்தன் ஆகியோருடன் இணைந்து மேரி ஃபிரான்சிஸ்கா குற்றச்செயலில் ஈடுபட்டதாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.
இவர்கள் இந்தியா வந்ததற்கான பின்னணி குறித்தும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஹமீதா ஏ லால்ஜி, அர்ஷியா ஏ லால்ஜி மற்றும் இஸ்கந்தர் ஏ லால்ஜி (Iskander-A-Laljee) ஆகியோரின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Inoperative bank accounts) இருந்து 42 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 172 ரூபாயை மோசடியாக எடுக்க முயற்சித்ததாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கவும் அந்த அமைப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த பணத்தை எடுக்க முயன்றதாக கியூ பிரிவு சி.ஐ.டி கூறுகிறது.
புழல் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை
இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மறுவழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் புழல் பெண்கள் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களில் மேரி ஃபிரான்சிஸ்கா தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இதற்காக, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியைப் பெற்றனர்.
மேரி ஃபிரான்சிஸ்காவை ஜாமீனில் எடுக்க உறவினர்கள் வரவில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் பா புகழேந்தி
“வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் மேரி பிரான்சிஸ்கா ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புழல் பெண்கள் சிறையில் இருக்கிறார்” எனக் கூறுகிறார், மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர் பா.புகழேந்தி.
மேரி ஃபிரான்சிஸ்காவின் உறவினர்கள் கனடாவில் வசிப்பதாகக் கூறும் பா.புகழேந்தி, “தமிழ்நாட்டுக்குள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக அவர் வந்துள்ளார். அவருடன் கைதான நபர்கள் பலரும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். ஆனால், அவரை ஜாமீனில் எடுப்பதற்குக் கூட உறவினர்கள் முன்வரவில்லை” என்கிறார்.
அவரது மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பா.புகழேந்தி, “புழல் பெண்கள் சிறையில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது முன்னுக்குப்பின் முரணாகவே அவர் பேசினார்” எனத் தெரிவித்தார்.
‘எந்த ஆதாரமும் இல்லை’
போலி பாஸ்போர்ட் மற்றும் மோசடி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக மேரி ஃபிரான்சிஸ்கா உள்ளதை மேற்கோள் காட்டிப் பேசிய பா.புகழேந்தி, ” ஹவாலா பணம் கைமாறியுள்ளதாக காவல்துறை கூறினாலும் அதனை புலிகள் அமைப்புடன் தொடர்படுத்திப் பேசுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்கிறார்.
“வழக்கில் கைதானவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பணம் அனுப்பியதாக என்.ஐ.ஏ கூறுகிறது. பொதுவாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களின் உறவினர்களுக்குப் பல்வேறு வழிகளில் பணம் அனுப்புவது இயல்பு. அதை வைத்தே இந்த வழக்கைக் கையாள்வதாகவே பார்க்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.
மேரி ஃபிரான்சிஸ்கா தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை விசாரணை
‘பணத்தை எடுக்கவில்லை’
மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் அதே காலகட்டத்தில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
“அனைவரும் சேர்ந்து கூட்டம் போட்டதாகவும் சொத்துகளை வாங்குவதற்கு முயற்சி செய்ததாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. இவர்களை உமா காந்தன் என்ற நபர் இயக்கியதாகக் கூறுகின்றனர். ஆனால், மும்பை வங்கியில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை இவர்கள் எடுக்கவில்லை” எனக் கூறுகிறார், பாஸ்கரனின் வழக்கறிஞர் ஷர்புதீன்.
இந்த வழக்கில் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, கைதான நபர்கள் கூறுவதாகவும் சர்புதீன் தெரிவித்தார்.
மேரி ஃபிரான்சிஸ்கா மீதான வழக்கு குறித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.