நாமக்கல் மாவட்டத்தில் பூதாகரமாகி யிருக்கும் கிட்னி திருட்டு விவகாரம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியிருக்கிறது.

ஏழை எளியவர்களின் இக்கட்டான நிலைமைகளைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கில் கிட்னி திருட்டு நடந்திருப்பது, தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இந்த விவகாரத்தை மேற்கொண்டு விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. அதுதான், இந்த கிட்னி திருட்டு விவகாரத்தை மேலும் சூடாக்கியிருக்கிறது!

“கிட்னி திருட்டு நடந்திருப்பதை வினீத் ஐ.ஏ.எஸ் குழு உறுதிசெய்திருக்கும் நிலையில், மேற்கொண்டு கடும் நடவடிக்கையைத் தமிழக அரசுதான் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், உண்மையை வெளிக்கொண்டுவர நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே, யாரையோ அவர்கள் காப்பாற்றத் துடிக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இந்த விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகங்களைக் கிளப்புகின்றன…” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

“இந்த கிட்னி திருட்டு விவகாரத்தில், என்னதான் நடக்கிறது..?’’ விரிவாகவே விசாரித்தோம்.

திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கிட்னிகள்… கோடிகளில் புரளும் கிட்னி மாஃபியா!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எனது கிட்னிக்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லிவிட்டு, 5 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்…’ என்று பேசிய வீடியோ வைரலானது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதே போன்ற குற்றச்சாட்டுகள் வெடித்தன.

விவகாரம் பெரிதாகவே, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜ்மோகன், விசாரணையில் இறங்கினார்.

அவரின் விசாரணைக்கு ஆஜரான பெண்கள் பலரும், “குடும்பத் தேவைக்காக மகளிர் குழுக்களில் கடன் வாங்கினோம். கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதால், புரோக்கர் ஆனந்தன் என்பவர் மூலமாக கிட்னிகளை விற்றோம்.

அதற்காக, 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். எங்களில் சிலருடைய கணவன்மார்களும் கிட்னியை விற்றிருக்கிறார்கள்…” என்று சொல்லவும், அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிய அதேநேரத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், புரோக்கர் மூலமாகத் தன் கிட்னியை விற்பதற்காக சென்னைக்குச் சென்றதாகவும், தனது கிட்னி பொருந்தாத நிலையில், 8 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி, கல்லீரலை எடுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், “பேசியபடி கல்லீரலுக்கு 8 லட்சம் ரூபாய் தராமல், வெறும் 4.3 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள்.

இப்போது என்னால் எந்த வேலையும் பார்க்க முடியவில்லை…” என்று அந்தப் பெண் பேசிய வீடியோ, கிட்னி திருட்டின் பின்னால் பெரிய மாஃபியாவே செயல்படுவதை வெளிச்சப்படுத்தியது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் களமிறங்கி விசாரித்ததில், ஆலம்பாளையம், அன்னை சத்யா நகர், காவிரி ஆர்.எஸ்., குமாரபாளையம், வெப்படை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், தங்களுடைய கிட்னியை சட்டவிரோதமாக விற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதன் பின்னால், பல நூறு கோடி ரூபாய் புரள்வதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கிட்னி விற்பனை செய்யும் கூலித் தொழிலாளர்களின் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்யப்பட்டு, சென்னை, பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, கொச்சின், பெங்களூர் போன்ற நகரங்களிலுள்ள பிரபல மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதையும், விசாரணையில் கண்டுபிடித்தனர் அதிகாரிகள்.

அதோடு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன், தி.மு.க பேச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள ஏழை கூலித் தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னி விற்பனையில் ஈடுபட்டிருப்பதையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

ஆனந்தனைப்போல, பல புரோக்கர்களும் சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள்,

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 17-ம் தேதி புகாரளித்தனர். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வீரமணிதான் அந்தப் புகாரை அளித்திருக்கிறார்.

புகாரளிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும்கூட, இதுவரை போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவில்லை என்பதும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும்தான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கின்றன.

எப்படி நடக்கிறது கிட்னி திருட்டு?

நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், “கொரோனாவுக்குப் பின்னர், விசைத்தறி தொழில் நலிவடைந்துவிட்டது.

அதை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்கள், தங்களுடைய குடும்ப வறுமையைச் சமாளிப்பதற்காக கந்துவட்டி, மீட்டர் வட்டி, மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெற்றிருக்கின்றனர்.

எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. அவர்கள்தான்,

இந்த கிட்னி திருட்டு மாஃபியாவின் முதல் டார்கெட். கடனில் தத்தளிப்பவர்களை அணுகும் கிட்னி திருட்டு புரோக்கர்கள், ‘கிட்னியை விற்றால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்… உன்னுடைய கடனையெல்லாம் அடைத்துவிடலாம்’ என்று ஆசைகாட்டி அவர்களை மூளைச்சலவை செய்கிறார்கள்.

மற்றொரு வகையிலும் கிட்னி திருட்டு நடக்கிறது.

அதாவது, அரசு காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் சில தனியார் மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சை பெற வரும் எளிய மக்களிடம், ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை செய்து முழு விவரங்களையும் சேகரிக்கின்றன.

இலவச மருத்துவ முகாம் மூலமாகவும் விவரங்களை சேகரித்துக் கொள்கின்றன. அந்த விவரங்களை, கிட்னிக்காகக் காத்திருக்கும் தங்களின் வசதிபடைத்த வாடிக்கையாளர்களின் ரிப்போர்ட்டுடன் பொருத்திப் பார்க்கிறார்கள்.

வாடிக்கையாளர்களின் ரிப்போர்ட்டுடன் எல்லாமே ஒத்துப்போனால், அந்த ஏழை மக்களை அணுகி, கிட்னியைத் திருடுவதற்கு புரோக்கர்களை இறக்கிவிடுகிறார்கள்.

‘ஒரு கிட்னியைக் கொடுத்தால் ஒன்றும் ஆகிவிடாது. மற்றொரு கிட்னியை வைத்து உயிர் வாழலாம்.

உங்களுடைய கிட்னி ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றும். இதுவும் ஒரு சேவை மாதிரிதான். அதற்காக, உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் தருகிறோம்…’ என்று ஆசை வார்த்தையோடு அனுதாபம் எழும் வகையிலும் பேசுகிறார்கள் புரோக்கர்கள்.

கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கும்பல்களும் கிட்னி திருட்டு மாஃபியோவோடு நேரடித் தொடர்பு வைத்திருக்கின்றன.

கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத நபர்களிடம், ‘உன் கிட்னியை வித்து காசு கொடு… நானே ஏற்பாடு செய்யிறேன்..’ என்று நிர்பந்தித்து, வலுக்கட்டாயமாக கிட்னியை விற்க வைக்கின்றனர்.

கோவை, ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நடப்பது, தற்போது வெளிவந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் இது போன்ற கிட்னி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம்.

ரிப்போர்ட் அளித்த சுகாதாரத்துறை… தடைபோட்ட அரசாங்கம்!

முதலில், கிட்னி கொடுப்பவர்களின் ரத்த வகை, வயது, உடல்நலனை வைத்து ‘ரேட்’ பேசப்படுகிறது.

AB நெகட்டிவ் போன்ற அரிய வகை கிட்னிகளுக்கு, ஒன்றரைக் கோடி ரூபாய் வரையில் பணம் கைமாறுகிறது. மற்றபடி, ஒரு கிட்னிக்கு 25 முதல் 70 லட்சம் வரையில், வயதைப் பொறுத்து ‘ரேட்’ முடிவாகிறது.

அந்தப் பணம் முழுவதுமாக கிட்னி கொடுப்பவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், மருத்துவமனையிலுள்ள புரோக்கர்கள், மருத்துவமனைக்கும் கிட்னி கொடுப்பவருக்கும் இடையே தொடர்பில் இருக்கும் புரோக்கர்கள், ஆட்களை அழைத்துவரும் புரோக்கர் என்று அனைவராலும் பிரித்துக்கொள்ளப்பட்டு, கடைசியாக 3 முதல் 5 லட்சம் ரூபாய்தான் கிட்னி கொடுப்பவர்களுக்குப் போய்ச் சேர்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் இருக்கும் சிலரிடமிருந்துகூட கிட்னி திருடப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன

கிட்னி தானம் செய்வதற்கு, Transplantation of Human Organs and Tissues Act, 1994 (THOTA Act) மற்றும் அதன் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன.

அதன்படி, தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி ஆகிய நெருங்கிய உறவினருக்கு கிட்னி தானமளிக்க உடனடி அனுமதி வழங்கப்படுகிறது.

நெருங்கிய உறவினர் அல்லாதவர்களிடமிருந்து தானம் பெற, அரசு ஆணையக் குழுவின் (Authorization Committee) சிறப்பு அனுமதி தேவை.

அந்த கமிட்டியின் முன்பாக நேரில் ஆஜராகி, கிட்னி அளிப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.

அதன் பின்னர், அரசு அங்கீகரித்த மருத்துவ மனையில் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

அதற்குப் பிறகே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இந்த விதிமுறையிலும் பல்வேறு வகையில் முறைகேடு செய்து, போலியான சான்றுகளை அளித்து கிட்னியை விற்றிருக்கிறது மாஃபியா கும்பல்.

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, தற்போது ரத்த உறவுகளுக்குமே சிறப்பு அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய மோசடி வெடித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22-ம் தேதி, தமிழக அரசின் சுகாதார திட்ட இயக்குநர் வினீத் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் விசாரணை முடிவில், ‘திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின்மீது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்த மருத்துவமனைகள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்யப் பரிந்துரைத்தது.

அரசாங்கமும் அதை ஏற்றுக்கொண்டு, அந்த மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தடை போட்டிருக்கிறது.

அந்த நடவடிக்கையோடு சரி… அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இந்த விவகாரத்தில் இல்லை. `குற்றச்சாட்டுக்கு உள்ளான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, மண்ணச்சநல்லூர் தி.மு.க எம்.எல்.ஏ கதிரவனின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதால், விசாரணை மந்தகதியிலேயே இருக்கிறது’ என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

கிட்னி திருட்டு முறைகேட்டில் சிக்கிய புரோக்கர் ஆனந்தன், இன்றும்கூட பள்ளிபாளையத்தில் சுதந்திரமாகச் சுற்றிவருகிறார். அவரைக்கூட யாரும் நெருங்கவில்லை…” என்றனர்விரிவாகவே.

“இன்னும் எஃப்.ஐ.ஆர்-கூடப் போடவில்லையா..?” SIT அமைத்த நீதிமன்றம்!

கிட்னி திருட்டு முறைகேட்டில், புரோக்கர் ஆனந்தனைக்கூட காவல்துறை நெருங்காததற்குக் காரணம், இன்னும் எஃப்.ஐ.ஆர்-கூடப் பதிவுசெய்யப்படாததுதான்.

அதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே கண்டித்தும் இருக்கிறது.

கிட்னி திருட்டு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, பரமக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “நாமக்கல் மருத்துவ அலுவலர் அளித்த புகாரில், இதுவரையில் எஃப்.ஐ.ஆர்-கூடப் போடவில்லை. இப்படிப்பட்ட அணுகுமுறைக்கு எங்களுடைய அதிருப்தியைப் பதிவுசெய்கிறோம்” என்று கண்டித்தது.

கிட்னி திருட்டு குறித்து விசாரிப்பதற்காக, தென்மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டது.

அந்தக் குழுவில், நீலகிரி எஸ்.பி நிஷா, திருநெல்வேலி எஸ்.பி சிலம்பரசன், கோவை எஸ்.பி கார்த்திகேயன், மதுரை எஸ்.பி அரவிந்த் ஆகிய ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது நீதிமன்றம்.

அந்த விசாரணைக்குழு, தங்களுடைய முதற்கட்ட அறிக்கையை செப்டம்பர் 24-ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்தான், குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. அதுதான் இந்த விவகாரத்தில், அரசியல் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக, பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிறுநீரகத் திருட்டு நிகழ்வுகள் நடந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்குச் சொந்தமானது என்றும், சிறுநீரகத் திருட்டில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தரகரும் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் சிக்கிக்கொண்டால் சிறுநீரகத் திருட்டின் பின்னணியில் புதைந்துகிடக்கும் மர்மங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான், இந்த விசாரணையைத் தடுக்க தி.மு.க அரசு முயல்கிறது.

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா… பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறை யீட்டைத் திரும்பப் பெற வேண்டும்” என்றிருக்கிறார்.

யார் யாரைக் காப்பாற்றுகிறது அரசு?

நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒப்புதல் வழங்குவதில் தொடங்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு உருவாகும் சிக்கல்களைக் களைவது வரையில், அனைத்தையும் பார்ப்பது முதன்மையானவர் அலுவலகத்திலுள்ள ஒரு உயரதிகாரிதான்.

கிட்னி திருட்டு விவகாரம் வெடித்தவுடனேயே, மருத்துவமனை வட்டாரங்களுக்குச் சாதகமாக விசாரணையை விரைந்து முடிக்கச் சொல்லி, சுகாதாரத்துறை விசாரணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் அந்த உயரதிகாரி.

ஆனால், அவரது அழுத்தத்தையும் மீறி, இதில் நடந்திருக்கும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தால், கிட்னி திருட்டு விற்பனையில் ஈடுபட்ட மாஃபியாக்களோடு, அந்த அதிகாரியும் சிக்கிக்கொள்வார்.

பல மருத்துவமனைகளும் இழுத்து மூடப்படும். அதற்காகத்தான், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடர முடியாதபடி, சட்டச் சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன…” என்கிறார்கள்.

தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த கிட்னி திருட்டு முறைகேட்டில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிட்னி எடுக்கப்பட்டதால், மேல் சிகிச்சைக்கு வழியில்லாமல் மேலும் மேலும் கடனாளி ஆகியிருக்கிறார்கள்.

சட்ட விதிமுறைகளெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, பல நூறு கோடிகளில் கண்ணெதிரே ஒரு முறைகேடு நடந்திருக்கிறது.

ஆனால், இதையெல்லாம் தமிழக அரசு துளியும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவேண்டிய அரசாங்கம், குற்றமிழைத்தவர்களுக்குச் சாதகமாக மேல்முறையீடு செய்தது ஏன்… உயர் நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழுவுக்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீடும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க கோட்டையிலுள்ள சில அதிகாரிகள் மெனக்கெடுவதையும் பார்க்கும்போது, ஒரேயொரு கேள்விதான் அழுத்தமாக எழுகிறது

.‘யார் யாரைக் காப்பாற்ற இவ்வளவு மெனக்கெடுகிறது தமிழக அரசு..?

’“விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!”

கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய, சி.ஐ.டி.யூ நாமக்கல் மாவட்டத் தலைவர் அசோகன், “மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, மருத்துவர்களும் புரோக்கர்களும் பணம் சம்பாதிக்கிறார்கள்.

கிட்னி கொடுத்தவர்கள், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் கொடுமையை அனுபவிக்கிறார்கள். எங்கள் ஆய்வில், பெண்களே கிட்னியைப் பெருமளவு கொடுத்திருக்கிறார்கள்.

கிட்னி கொடுத்துவிட்டு மருத்துவச் செலவு செய்ய முடியாமல், வேலையும் பார்க்க முடியாமல் பெரும் வலியில் உழல்கிறார்கள்.

அரசு இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய மருத்துவச் சிகிச்சை கொடுப்பதற்குச் சிறப்பு ஏற்பாடு செய்வதுடன், அவர்களை ஊனமுற்றோர்களாகக் கருதி, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மக்களிடம் உடனடியாக உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார் கோரிக்கையாக!

Share.
Leave A Reply