திருச்சி கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை மாத்திரமின்றி இந்தியாவையும் உலுக்கியுள்ளது.
இதற்கு முன்பதாக எந்தொவொரும் பிரசார நிகழ்விலும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை. அதுவும் தேர்தல் கால பிரசார கூட்டங்களிலும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதில்லையென்பது முக்கிய விடயம்.
இந்த சம்பவத்தில் 10 சிறுவர்கள் 16 பெண்கள் உட்பட 39 பேர் பலியாகியுள்ளனர். இதில் நான்கு பேரின் சடலங்களை அடையாளம் காணமுடியவில்லையென்பது வேதனையான விடயம்.
இந்த சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இச்சம்பவம் குறித்த பல உண்மைகள் இப்போது தான் வெளிப்பட்டுள்ளன. கூட்டத்தை சேர்ப்பதற்காகவும் ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அழுத்தங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்த விஜய் சில திட்டங்களை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது இதற்கு முன்பதாக விஜய் நடத்தில் கட்சியின் மாநாட்டில் கூட்டம் அலைமோதியது. இது தமிழகத்தின் ஆளும் தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி , கமலின் மக்கள் நீதி மைய்யம் போன்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயை சுற்றி இவ்வளவு கூட்டமா என்ற திகைத்த அவர்கள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் விஜய் முதலமைச்சர் ஆகி விடுவாரா என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்திருந்தமையை தவிர்க்க முடியாதிருந்தது.
இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விஜய் தனது அடுத்தடுத்த கூட்டங்களுக்கு அதிக கூட்டத்தினரை சேர்ப்பதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார்.
திருச்சி கரூர் கூட்டமும் அப்படி திட்டமிட்டு செய்யப்பட்டது தான் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதோ 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையத்துக்கு 10 மணிக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கமாக 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும். இதற்கு பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.
அவர் கொடுத்த நேரம் 8.45 ஆக இருக்கும் போது புறப்பட்டிருக்க வேண்டிய நேரம் என்ன? விஜய் வருகின்றார் என்று தெரிந்தாலே அம்மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்படுவது இயல்பு, ஆகையால் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது அவர் புறப்பட்டிருக்க வேண்டும்?
அவர் கரூர் வந்து சேர்ந்த நேரம் 2.30 மணியாகும். அதே வேளை அவர் கரூரில் பேச பெற்ற நேரம் 12மணி. இப்படி நேர அட்டவணை இருக்க அவர் வந்து சேர்ந்த நேரம் மாலை 7 மணி. இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல என்பது புரிகின்றது.
திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்? இப்படி பல கேள்விகள் எழ தமிழக ஊடகங்களோ இதை கண்டுகொள்ளவில்லை.
காலையிலிருந்து பலர் காத்திருந்ததால் விஜய் வருவதற்கு முன்பே பலர் மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். விஜய் இரவு 7 மணிக்கு வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, சிலர் மயக்கமடையத் தொடங்கினர்.
அவர் பரப்புரையை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிறகு, பலர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின.
அதைத் தொடர்ந்து பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தன. தொடர்ச்சியாக மக்கள் பலரும் அதில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கரூர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை கரூரில் நடந்த சோகமான நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்ளுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதே வேளை கரூர் சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப் பதிவில், “கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கரூர் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். “நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.”
“நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என அவர் பதிவிட்டுள்ளார்
இப்படி மாநில கட்சித் தலைவர்கள் , நடிகர்கள் , பிரபலங்கள் , தேசிய மட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் , மத்திய அமைச்சர் என பலரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள கரூர் சம்பவம். ஒரு பக்கம் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் விஜய் என்ற நடிகரைப் பார்க்க இவ்வளவு பேர் திரண்டு உயிரையும் இழந்துள்ளனர் என்ற செய்தியும் மறைமுகமாக தமிழக அரசியலை மாத்திரமின்றி தேசிய அரசியலையும் சற்று துணுக்குற செய்துள்ளது.
மேலும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கூடியிருக்க அந்த பக்கமே திரும்பிப்பார்க்காமல் சென்ற விஜயை சில ஊடகங்கள் வறுத்தெடுத்துள்ளன.
விஜய் என்ன தான் ஆறுதல் கூறினாலும் 39 பேரின் மரணத்துக்கு அவர் காரணமாகி விட்டார். தனது பிரசார கூட்டத்தை திட்டமிட்டு அவர் செய்யவில்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடத்தை தமிழக அரசு வழங்கவில்லையென்ற குற்றச்சாட்டை விஜய் முன்வைத்துள்ளார்.
இறந்தவர்களில் அரைவாசியானோர் சிறுவர்கள் என்ற தகவலின் மூலம் விஜய் என்ற அரசியல்வாதியை விட விஜய் என்ற நடிகரை பார்க்கவே கூட்டம் அலைமோதுகின்றது என்ற செய்தியை இந்த சம்பவம் அழுத்தமாக உரைத்துள்ளது.