மிகவும் இரகசிய தகவல்கள் மற்றும் இரகசிய தொடர்புகளை வெளிப்படுத்தியதற்காக தேடப்பட்ட சந்தேக நபர் சம்பத் மனம்பேரியின் கையடக்கத் தொலைபேசி, தெஹிவளையில் உள்ள தொடருந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டு, தொடருந்தில் மோதி அழிக்கப்பட்டு, கடலில் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேலியகொடை குற்றப்பிரிவு விசாரணையின் போது சம்பத் மனம்பேரி இதனைத் தெரிவித்துள்ளார்.

தன்னைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியவுடன், தனது கையடக்கத் தொலைபேசியை இவ்வாறு அழித்து அதன் பாகங்களை கடலில் வீசியதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பத் மனம்பேரி தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகத் தலைவர்கள் பற்றிய தகவல்களும், அவர் செய்த ஏராளமான குற்றங்களும் இந்த கையடக்கத் தொலைபேசி மூலம் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவர் கையடக்கத் தொலைபேசியை அழித்தது விசாரணைக்கு பெரும் பின்னடைவாகும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பேரி என்றும் அழைக்கப்படும் சம்பத், தென் மாகாணத்தில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை கட்டுமானத்தில் தலையிட்டது மற்றும் பாதாள உலகத் தலைவர்களான கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியது உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply