விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி- சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்: த.வெ.க. வழக்கறிஞர்

“கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியறுத்தி த.வெ.க. வக்கீல் பிரிவினர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது காவல்துறை கடமையாற்ற தவறி உள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

விஜய் பிரசாரத்தின்போது கூடி இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம். கூட்டத்தில் விஜய் பேசியபோது மர்ம நபர்கள் செருப்பு வீசினார்கள்.

இந்த சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது.

உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம்.த.வெ.க. கூட்டத்தில் குண்டர்கள் பலர் கல்வீச்சிலும், செருப்புகளையும் வீசி தொண்டர்களை தாக்கியுள்ளனர்.

சதி திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது

முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்ததும் சதி திட்டத்திற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் போதுமான காவலர்களை பணியமர்த்தாததும் முன்னேற்பாடுகளை செய்யாததும் இந்த சம்பவத்துக்கு காரணமாகும்.

எனவே இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வாதாடி மேற்கண்ட குற்றத்துக்கு காரணமானவர்களை வெளிக் கொண்டு வருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.”,

Share.
Leave A Reply