முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டத் திருத்தம், நிறைவேற்றப்பட்ட பின்னர், விஜேராம மாவத்தை இல்லத்தில் இருந்து, மஹிந்த ராஜபக் ஷ ஆரவாரங்களுடன்பு றப்பட்டுச் சென்றிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்த பின்னர், முதல் முறையாக அலரி மாளிகையில் இருந்து வெளியேறி, தங்காலைக்குத் திரும்பினார்.
அப்போது அவரை அலரி மாளிகையில் இருந்து வழியனுப்பி வைப்பதற்கு, ஆதரவாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. அவரது நெருங்கிய அமைச்சரவை சகாக்கள் சிலர் மாத்திரம் கூடியிருந்தார்கள்.
அவர் ஆட்சியை ஒப்படைக்க மறுக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அமெரிக்க இராஜாங்க செயலராக இருந்த ஜோன் கெரி, அந்த விவகாரத்தில் தலையிட்டு, சுமூகமான ஆட்சிமாற்றம் நடைபெற வேண்டும் என அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு, பாதுகாப்பாக மஹிந்த ராஜ பக் ஷ வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி அவர் ஹெலிகொப்டர் மூலம், தங்காலைக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அவரை வரவேற்க ஒரு கூட்டம் காத்திருந்தது.
சில காலம் அவர் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தங்கி இருந்தபோது, தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரைத் தேடிச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
இப்பொழுது மஹிந்த ராஜபக் ஷ இரண்டாவது முறையாக தங்காலைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்.
அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்திருத்தத்தின் படி, அவரால் விஜேராம மாவத்தை இல்லத்தில் தங்கி இருக்க முடியவில்லை. இதனால் அவர் தானாகவே வெளியேறி சென்றார்.
அவர் வெளியேறிச் சென்ற போது, அவரை வழி அனுப்புவதற்கு ஆதரவாளர்கள் மாத்திரம் வரவில்லை, சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கும், வந்திருந்தார்.
அவர் கார்ல்டன் இல்லத்துக்குச் சென்ற போது அங்கு பெருமெடுப்பிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
எது எப்படியோ மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தங்காலைக்குத் திரும்பி இருப்பதை அவரது அரசியல் வாழ்வின் முடிவாக கருதப்படவில்லை.
அவர் விஜேராம மாவத்தை இல்லத்தை விட்டுச் செல்லும்போது, அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என உறுதியாகக் கூறியிருந்தார்.
அவர் மீண்டும் கொழும்புக்கு திரும்புவாரா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனால், அவரை மீண்டும் கொழும்பிற்கு கொண்டு வர, தீவிர அரசியலுக்கு இழுத்து வருவதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.
மஹிந்த ராஜபக் ஷ இப்பொழுது உடலளவில் தளர்ந்து போயிருக்கிறார்.
அவர் அரசியலில் தொடர்ந்து நிலைத்திருப்பேன் என்று கூறுவதற்கு அடிப்படைக் காரணம், தனது வாரிசுகளின் அரசியலை நிலைநிறுத்திக் கொள்வது தான்.
நாமல் ராஜபக் ஷவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் தொடர்ந்திருக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து அவர் முதல்முறையாக கார்ல்டனுக்குத் திரும்பிய போது, அவரை மீண்டும் அரசியலுக்கு இழுத்து வருவதற்கு பலர் முயன்றார்கள். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
இப்பொழுது அவரை இழுத்து வருவதற்கு அவர்கள் அவருடன் கூட்டணியில் இல்லை. ஆனாலும், விமல் வீரவன்ச தங்காலைக்குச் சென்று மஹிந்தவைச் சந்தித்திருக்கிறார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக் ஷ விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, சீனத் தூதுவர் அங்கு சென்று அவரைச் சந்தித்தமை அரசியல் மட்டத்தில் முக்கியமான பேசுபொருளாகவும் பிரச்சாரமாகவும் பார்க்கப்பட்டது. சீனத் தூதுவர் ஏன் மஹிந்தவை சந்திக்க சென்றார் என்ற கேள்வி வலுவாக இருந்தது.
தற்போதைய அரசாங்கம் சீன சார்பு அரசாங்கம் என்ற பெயருடன் இருந்தாலும், அது அமெரிக்காவுடன் அதிகம் நெருங்கிச் செயற்படுகிறது.
இந்தச் சூழலில், தங்களின் பழைய கூட்டாளிகளுடன் நட்புறவை வலுப்படுத்த சீனா முற்படுகிறதா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
தற்போதைய அரசாங்கம் நெருக்கமானதாக இருந்தாலும், தான் அதிகம் நம்புகின்ற கூட்டாளிகளாக ராஜபக் ஷ வினரை சீனா வைத்திருக்கிறது என்பதே உண்மை. ஏனென்றால் ஜே.வி.பியின் அரசியல் வரலாறு, சித்தாந்த ரீதியாக இறுக்கமானதல்ல. அது நிகழ்வுத்தன்மை கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் அது மொஸ்கோவை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது. பின்னர் அது பெய்ஜிங் சார்புடையதாக மாறியது. அதற்குப் பின்னர், வடகொரியாவின் ஆதரவுடனேயே, 1971 கிளர்ச்சியில் ஈடுபட்டது. இப்படிக் காலத்துக்கு காலம் அது தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது அது அமெரிக்காவுடன் உறவு வைத்துக் கொள்வதற்கும் கூட தயாராகி விட்டது.
ஆக, ஜே.வி.பியை முற்று முழுதாக நம்பியிருக்க முடியாத நிலை சீனாவுக்கு இருக்கிறது.
ஆனால் ராஜபக் ஷவினர் அப்படியல்ல, அவர்கள் எப்போதும் சீனாவின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்து வந்தவர்கள்.
அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தவர்கள். சீனாவினால் இயக்கப்பட்டவர்கள்.
அவர்களை சீனா எப்போதும் நம்புகிறது.
முன்னர் ஒரு காலத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுடன் சீனா பெரும்பாலும் தொடர்புகளை வைத்துக் கொள்வதில்லை.
தாங்கள் அரசாங்கத்துடன் மாத்திரமே தொடர்புகளை வைத்துக் கொள்வோம் என, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். அப்போது ராஜபக் ஷவினர் ஆட்சியில் இருந்தனர்.
ராஜபக் ஷவினரின் ஆட்சி இல்லாமல் போன பின்னர், சீனத் தூதுவர்களால் அவ்வாறு கூறக்கூடிய நிலை இருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஆட்சியில் இருப்பவர்களும் தேவைப்பட்டார்கள், ஆட்சியில் இல்லாத ராஜபக் ஷவிவினரும் தேவைப்பட்டார்கள்.
அதனால் அவர்களுடன் தொடர்புகளை பேணிக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சிகளையும் அவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள்.
அதன்பின்னர்தான், அரசியல் கட்சிகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பொழுது சீனா, ராஜபக் ஷவினருடனான, தனது நெருங்கிய உறவுகளை சமப்படுத்திக் கொள்வதற்காக, ஏனையவர்களையும் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ விஜேராம மாவத்தை இல்லத்தை விட்டு வெளியேறிய போது, சீனத் தூதுவர் அவரை சந்தித்த விடயம், அரசாங்கத்திற்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அரசாங்கத்தின் நடவடிக்கையால் தான் மஹிந்த ராஜபக் ஷ வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பின்னால் சீனா இருக்கிறது என்ற செய்தி, அரசாங்கத்துக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கவில்லை.
இந்தச் சூழலில் சீனத் தூதுவர், அடுத்து ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்தார். இது அரசாங்கத்தை இன்னமும் குழப்பத்திற்கு உள்ளாக்கியது.
ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர், அவரை சந்தித்த முதலாவது வெளிநாட்டு உயர் இராஜதந்திரி சீனத் தூதுவர் தான்.
இந்த இரண்டு சந்திப்புகளும் அரசாங்கத்துக்கு எதிரான வியூகத்தை சீனா வகுக்கிறதா என்ற சந்தேகங்களை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து சீனத் தூதுவர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்திருக்கிறார்.
ஆக, பதவியில் இருந்து விலகிய முன்னாள் ஜனாதிபதிகள் மூவரையும் சந்தித்ததன் மூலம் சீனத்தூது வர் ஒருவித சமத்துவ நிலையை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்.
ஆனால், என்னதான் மறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும், சீனாவுக்கும் ராஜபக் ஷவினருக்கும் இடையிலான நெருக்கம் என்பது வெளிப்படையானது, மறுக்க முடியாதது. ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கத்தை, சீனா தன் கைக்குள் வைத்திருக்க விரும்பினாலும், சீனாவின் விருப்புக்குரியவர்களாக ராஜபக் ஷவினரே இருக்கிறார்கள்.
அதனால் தான் ஆட்சியில் இல்லாத போதும் அவர்களுடன் நெருங்கிய உறவாடல்களை சீனா வைத்துக் கொள்கிறது.
அவர்கள் சீனாவுடன் நெருங்கி செல்வதை உணர்ந்து, இந்திய தூதுவரும் ராஜபக் ஷவினரை கையாளுவதிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இவையெல்லாம் ராஜபக் ஷவினர் அரசியலில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டுவிடவில்லை, அகற்றப்படுவதை பிராந்திய சக்திகள் விரும்பவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.
-கார்வண்ணன்–