’பேபி ஐ லவ் யூ… இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க. என் அறைக்கு வந்துடு… என்னோட ஒத்துழைச்சா, உன்னை செலவில்லாம வெளிநாட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்!’ – தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதே மெசேஜை வார்த்தை மாறாமல் பல மாணவிகளுக்கு அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் ஒரு சாமியார்.

தலைநகர் டெல்லியை அதிரவைத்த இந்தப் பாலியல் வழக்கில் நடந்தது, நடப்பது என்ன?

யார் அந்தச் சாமியார்?

காவி உடை, நெற்றியில் சந்தனம், அதில் கொஞ்சம் குங்குமம், அதற்கு மேலே மூன்றடுக்குப் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை… இதுதான் அந்தச் சாமியாரின் அடையாளம்.

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி… இதுதான் தனக்குத் தானே அவர் சூட்டிக்கொண்ட பெயர். `பார்த்தசாரதி’ என்பதுதான் இவரது நிஜப் பெயர்.

ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

`டெல்லி பாபா’ என்று அழைக்கப்படும் இவருக்கு வயது 62.

28 புத்தகங்களை இவர் எழுதியிருப்பதாகவும், சனாதன வேதங்களைக் கற்று அறிந்திருப்பதாகவும் இவரது இணையதளத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

நூல் விற்பனைத் தளங்களில், இவரது அருமை பெருமைகள் என சில குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

`சுவாமி பார்த்தசாரதி’ என்ற பெயரில் இவர் எழுதிய, `Forget Classroom Learning’ என்ற நூலுக்கு `ஆப்பிள்’ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முன்னுரை எழுதியிருப்பதாகவும்… முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, `Transforming Personality’ என்ற சைதன்யானந்தாவின் நூலில் இடம்பெற்றுள்ள விஷயங்களைத் தனது பேச்சுகளில் அவ்வப்போது எடுத்துரைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தனது வாழ்நாளின் ஒரு பகுதியை அமெரிக்காவில் கழித்த சைதன்யானந்தா, ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களில் ஒன்றான கர்நாடகாவின், சிருங்கேரி சாரதா பீடத்தின் கல்வி நிறுவனத்தில்தான் கடந்த 12 ஆண்டுகளாக இயக்குநராக இருந்திருக்கிறார்.

டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் சிருங்கேரி மடத்தின், ` சாரதா இந்திய மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ இயங்கிவருகிறது.

அங்கிருக்கும் ஆசிரமத்தில் சாமியாராகவும், கல்வி நிறுவனத்தில் இயக்குநராகவும் வலம்வந்திருக்கிறார் சைதன்யானந்தா.

பாலியல் குற்றச்சாட்டும்… எஃப்.ஐ.ஆர் அதிர்ச்சியும்..!

சாமியார், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பேராசிரியர், கல்வியாளர், முனைவர் எனப் பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு இத்தனை காலம் சுற்றித்திரிந்த சைதன்யானந்தா, இன்று பாலியல் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தனது கல்வி நிறுவனத்திலுள்ள மிகவும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளைக் குறிவைத்து, பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் சைதன்யானந்தா.

கடந்த ஆகஸ்ட்டில் இவர்மீது 17 மாணவிகள் கூட்டாக இணைந்து புகார்கள் கொடுத்ததும், கல்வி நிறுவனத்திலிருந்து அவரை உடனடியாக நீக்கியது சிருங்கேரி மடம்.

அதேநேரம், மாணவ, மாணவிகள் தடையின்றிக் கல்வி கற்பதையும் உறுதிசெய்வதாக அறிவித்திருந்தது சிருங்கேரி மடம்.

தனக்கெதிராகப் புகார் கிளம்பியதும் தலைமறைவான சைதன்யானந்தாவை கடந்த வாரம் ஆக்ராவில் வைத்து கைதுசெய்தது டெல்லி காவல்துறை.

மாணவிகளிடம் பெற்ற புகார்களின் அடிப்படையில் டெல்லி காவல்துறை பதிவிட்டிருந்த எஃப்.ஐ.ஆரில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதில், “கல்வி நிறுவன இயக்குநரான சைதன்யானந்தா, சில நாள்கள் பேராசிரியராக வகுப்பறைக்குச் செல்வார்.

அங்குள்ள பெண்களை நோட்டமிட்டு, சிலரைக் குறிவைப்பார். அவர்களிலிருந்து, நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுப்பார்.

சில ஆசிரியர்கள், விடுதி வார்டனின் உதவியோடு அந்தப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிப்பார்.

இரவு நேரங்களில், தான் குறிவைத்த பெண்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிப் பேசியிருக்கிறார்.

அதில், `என்னோடு வெளிநாட்டுக்கு வருகிறாயா… இரவு உணவுக்கு வருகிறாயா… எனக்கு ஒத்துழைத்தால் நீ படிக்காமலேயே பாஸ் ஆகலாம்… வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவேன்… ஏர் ஹோஸ்டஸ் பணி வாங்கித்தருவேன்’ என்றெல்லாம் ஆசைவார்த்தைகளை அனுப்பியிருக்கிறார்.

அதன் பிறகு, மிக மிக மோசமான மெசேஜுகளை மாணவிகளுக்கு அனுப்பி, தொல்லை கொடுத்திருக்கிறார்.

இணங்க மறுக்கும் மாணவிகளுக்கு, தினசரி தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். `இனி நீ நிம்மதியாக இங்கு படிக்க முடியாது… உன்னை ஃபெயிலாக்கிவிடுவேன்… உனது ஒரிஜினல் சான்றிதழ்கள் திரும்பக் கிடைக்காது’ என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார்.

சிலரை அறைக்கு அழைத்து, தொடக் கூடாத இடங்களிலெல்லாம் கைவைத்திருக்கிறார்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்களும்… `ஸ்வீட்டி… பேபி…’ மெசேஜுகளும்!

போலீஸ் விசாரணையில், புகாரளித்த இந்த 17 பெண்களைத் தவிர, பலருக்கும் சைதன்யானந்தா பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

சில பெண்கள் வேறு வழியின்றி இவருக்கு ஒத்துழைத்திருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் சாட் ஒன்றின் ஸ்க்ரீன்ஷாட்டில், `துபாய் ஷேக் ஒருவர் செக்ஸ் வைத்துக்கொள்ள ஒரு பெண்ணைத் தேடுகிறார்…

உனக்குத் தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?’ எனச் சைதன்யானந்தா கேட்க, `அப்படி யாருமில்லை’ என்று அந்த பாதிக்கப்பட்ட பெண் ரிப்ளை செய்திருக்கிறார்.

இந்த மெேசஜ் மூலம், இவர் பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி, பலருக்கும் பெண்களைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்த அனுப்பிவைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.

எனவே, இதையொட்டியும் விசாரணை நடைபெறுகிறது. அதேபோல வேறொரு பெண்ணுக்கு, காலை முதல் மாலை வரை `ஸ்வீட்டி… பேபி’ என்றெல்லாம் கொஞ்சி மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

எதிர்த்திசையிலிருந்து எந்த ரிப்ளையும் வராதபோது, `பேபி கோபமா?’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அப்போதும் ரிப்ளை வராததால், மாலை நேரத்தில், `என்னுடைய அன்புக்குரிய பேபி டால், குட் ஈவினிங்’ என்று மெசேஜ் செய்திருக்கிறார்.

அதற்கு, `இங்கு இப்போது மதிய நேரம் சார்… ஹேப்பி ஆஃப்டர்நூன்’ என்று ரிப்ளை வந்திருக்கிறது.

இந்த நேர இடைவெளியைக் கொண்டு, `இவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் மெசேஜாக இது இருக்கலாம்’ என்று சந்தேகிக்கிறார்கள் காவல்துறையினர்.

`இதுபோல, பல பெண்களைச் சைதன்யானந்தா ஏமாற்றியிருக்கலாம்’ என்றும் சொல்கிறது டெல்லி காவல்துறை.

`அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால்..!

இந்தப் பாலியல் வழக்கு போக, மேலும் இரண்டு வழக்குகள் சைதன்யானந்தா மீது பதியப்பட்டிருக்கிறது.

இந்தப் புகாரையொட்டி கல்வி நிறுவனத்தில் நடத்திய சோதனையில், போலி நம்பர் பிளேட்டுடன் சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

அது தொடர்பாகவும் ஒரு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. மேலும், சிருங்கேரி மட டிரஸ்ட் வங்கிக் கணக்குக்கு வரவேண்டிய பணத்தின் ஒரு பகுதியை, வேறொரு டிரஸ்ட்டின் வங்கிக் கணக்குக்கு மடைமாற்றி மோசடி செய்திருக்கிறார் சைதன்யானந்தா.

இது தொடர்பாக ஒரு பண மோசடி வழக்கும் இவர்மீது பாய்ந்திருக்கிறது.2006, 2009-ம் ஆண்டுகளிலேயே இவர்மீது மோசடி வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

2016-ல் மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில், இவர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், சில தினங்களிலேயே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்திருக்கிறார். அந்த வழக்கும் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறதாம்.

அப்போது இவர்மீது புகாரளித்த மாணவி, “அப்போதே சைதன்யானந்தா மீது ஒழுங்கான நடவடிக்கை எடுத்திருந்தால், எத்தனையோ பெண்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். நான் படிக்கும்போது இவரது தொல்லை தாங்காமல், பல பெண்கள் படிப்பை நிறுத்திவிட்டு பாதியிலேயே சென்றுவிட்டனர்.

இப்போதாவது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என தேசிய ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

2016-ம் ஆண்டு சைதன்யானந்தா கைதுசெய்யப்பட்டும், அவரைக் கல்வி நிறுவனத்திலிருந்து சிருங்கேரி மடம் நீக்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்தவர், கல்வி நிறுவனத்தின் இயக்குநராகத் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

அதற்கு முன்பு சில புகார்கள் கிளம்பியபோதும், அதிலிருந்து எளிதாகத் தப்பியிருக்கிறார். ஆனால், இப்போது 17 மாணவிகள் கூட்டாகப் புகாரளித்ததால், வசமாகச் சிக்கியிருக்கிறார் சைதன்யானந்தா.<

`இந்த முறை, எந்த வகையிலும் சைதன்யானந்தா தப்பிவிடக் கூடாது. சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, அவருக்குக் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்பதே இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது.

சைதன்யானந்தாவுக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றி, சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்!

Share.
Leave A Reply