மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடாத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத்தேர்தல்கள் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரசாங்கத்தினால் பழைய முறைமையிலேயே தேர்தல்களை நடாத்தமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எனவே பழைய முறைமையில் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டத்திருத்தத்தை எம்மால் நிறைவேற்றமுடியும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எதிர்வரும் மாகாணசபைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசாங்கத்துக்கு சவாலாக அமையுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அக்கூட்டணி தமக்கு எவ்வகையிலும் சவாலாகவோ அல்லது பிரச்சினையாகவோ அமையாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
‘எம்மிடம் சுமுகமான முறையில் பயணிக்கும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், உரியவாறு இயக்கும் 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்தும், எம்மால் நிர்வகிக்கப்படும் உள்ளுராட்சிமன்றங்கள் குறித்தும் மக்களுக்கு சிறந்த புரிதல் உண்டு. ஆகையினால் எதிர்வரும் தேர்தல்களில் எமக்கு எவ்வித சவாலும் இல்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

