கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

மழையினால் தடைப்பட்டு சுமார் 4 மணித்தயாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்த இந்தப் போட்டி அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

31 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

எனினும் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 31 ஓவர்களில் 113 ஓட்டங்கள் என அறவிக்கப்பட்டது.

பதிலுக்கு திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால்  ஆட்டம் இரவு 9.32 மணிக்கு  இரண்டாவது தடவையாக  தடைப்பட்டது.

ஒமய்மா அலி 19 ஓட்டங்களுடனும் முனீபா அலி 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

சிறு மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்ட தாக இரவு 9.58 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 31 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சுகளில் சரிவு கண்ட இங்கிலாந்து 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் பிற்பகல் 4.43 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

எஞ்சிய 6 ஓவர்களில் இங்கிலாந்து மேலும் 2 விக்கெடகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியது.

மத்திய வரிசையில் சார்ளி டீன் (33), எமி ஆர்லட் (18) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

அவர்களை விட ஹீதர் நைட் (18), அலிஸ் கெப்சி (16), சொஃபியா டின்க்லி (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சாடியா இக்பால் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இங்கிலாந்தும் பாகிஸ்தானும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.

இதற்கு அமைய இங்கிலாந்து 4 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவும் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தென் ஆபிரிக்கா 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் வரவேற்பு நாடான இந்தியா 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.

Share.
Leave A Reply