கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்படட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலபதி ‘ கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பொலிஸ்மா அதிபரிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.இருப்பினும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டார்.இதனை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர (மிதிகம லசா) பொலிஸ் ஆவணப்படுத்தலுக்கமைய பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு வழங்கல் சட்டத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டோருக்கும், சாட்சியாளர்களுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு வழங்கப்படும்.
பொலிஸ் ஆவணப்படுத்தலில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது என்றார்.

