அண்மைக்காலமாக கொண்டுவரப்படும் போக்குவரத்துச் சட்டங்கள், குறிப்பாக ஆசனப் பட்டி கட்டாயமாக்கல் மற்றும் இலக்கத் தகடுகள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியன குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இது குறித்து கருத்து வெளியிட்டார்.
ஆசனப் பட்டி கட்டாயமாக்கப்பட்டதால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும், சந்தையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் வாகன உரிமையாளர்கள் முறைப்பாடு தெரிவிப்பதாக ஊடகவியலாளர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், சட்டம் வருவதற்கு முன்னரே இது குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், தேவை அதிகரித்ததால் விலையேற்றம் ஏற்பட்டிருந்தாலும், விநியோகம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தற்போது விலை குறைவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

