இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் காலங்களில் நிறைவேற்ற முடியாத பல பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கிவிட்டு, இப்பொழுது அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களின் கோபத்துக்கு ஆளாகி வருகின்றது.

அவ்வாறு வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளில் ஒன்று, தாம் ஆட்சிக்கு வந்தால், புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி, கடந்தகால அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் விரோத நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என்பதாகும்.

ரில்வின் சில்வா

இதற்கிடையில், புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்ததும், தற்போதைய அரசியல் அமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டம் இல்லாமல் போய்விடும் என ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்தும் இருந்தார்.

அதாவது, ஜே.வி.பி. ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த மாகாண சபை முறைமை இல்லாமல் செய்யப்பட்டு விடும் என்பதே அதன் அர்த்தம்.

ஆனால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தைக் கடந்து விட்ட போதும் புதிய அரசியல் அமைப்பு இதுவரை கொண்டு வரப்படவில்லை என்பதுடன், அதற்கான ஆரம்ப முயற்சிகள் கூட இதுவரை துவக்கப்படவில்லை.

இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, அரசாங்கத்துக்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் நோக்கம் இல்லை எனத் தெரிய வருகிறது. குறிப்பாக, சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மத்தியில் இந்தக் கருத்து பலமாக நிலவுவதைக் காண முடிகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தில் பின்னடிப்பதற்கான காரணங்களாக இரண்டு விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகிறது.

முதலாவது, தாம் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியல் அமைப்பின் மூலம் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதிபடக் கூறியிருந்தது.

அதேபோல, தாம் கொண்டு வரும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் இந்தியாவால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு, அனைத்து சிறுபான்மை இனங்களுக்கும் சமவுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடுகள் புதிய அரசியல் அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி கூறியிருந்தது.

ஆனால் தற்பொழுது, முன்னைய ஆட்சியாளர்கள் செய்தது போன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு பின்னடிப்பதாகத் தெரிய வருகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜே.வி.பி. கட்சியே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக நிற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜே.வி.பியின் தலைவராகவும் இருப்பதால், அவரும் இந்தக் கருத்தையே கொண்டிருப்பார் என்பதில் ஆச்சரியம் இல்லை. அதுவுமல்லாமல், அவர் கடந்த ஒரு வருடமாக அந்தப் பதவியில் இருந்து ருசி கண்டவராகவும் இருக்கின்றார்.

மறுபக்கத்தில், புதிய அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான யோசனைகளை முன் வைப்பதானால், தற்போதுள்ள மாகாண சபை முறைமைக்கு மேலதிகமான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்.

ஆனால், ஓரளவு ஏற்கக்கூடிய அதிகாரப் பகிர்வாக கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவின் 2000 ஆண்டுத் தீர்வுத் திட்டத்தையும், 1987 இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் தீவிரமாக எதிர்த்த ஜே.வி.பி. கட்சி தலைமையிலான இன்றைய அரசாங்கம், அவற்றையும் விட அதிகாரம் மிகுந்த தீர்வுத் திட்டம் ஒன்றை சிறுபான்மை இனங்களுக்கு வழங்குமா என்ற கேள்வி எழுகின்றது.

இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இதில் சிறுபான்மை இனங்களின் நிலைமைதான் மிகவும் நெருக்கடி வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில், புதிய அரசியல் அமைப்பு ஒன்று வரும்வரை அவர்களுக்கு உள்ள ஒரே தீர்வாக தற்பொழுது 13ஆவது திருத்தச் சட்டம் வழங்கிய மாகாண சபை முறைமை மட்டுமே இருக்கின்றது.

அதற்கான தேர்தலையும் நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றது. அந்தத் தேர்தலை நடத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளதாக அரசாங்கமும், தேர்தல் ஆணையமும் ஏகோபித்துக் கூறி வருகின்றன.

ஆனால், தேர்தல் நடத்துவதில் ஏதாவது சட்டச் சிக்கல் இருந்தால், அதை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததே. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குவதற்காகவும், தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும், நாடாளுமன்றத்தில் தனக்கு இருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி வரும் அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காகவும் அதே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை ஏன் பயன்படுத்த முடியாது?

இந்த விடயத்தில் புதிய அரசியல் அமைப்பு வந்து சிறுபான்மை இனங்களின் பிரச்சினை தீரும் என்று காத்திருக்காமல், தற்போது கைவசம் இருக்கும் ஓரளவு அதிகாரப் பகிர்வு முறையான மாகாண சபை முறைமையைப் பாதுகாப்பதில், சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டாகச் செயல்படுவதே தற்போதைய தேவையாகும்.

Share.
Leave A Reply