2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2025 ஒக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான சுற்றுலா வருவாய் 186.1 மில்லியன் டொலர்களாகும்.

இது 2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் பதிவான சுற்றுலா வருவாயான 2,533.7 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.9% அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஜனவரி மாதம் முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 ஆகும்.

இவர்களில் 443,622 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 180,592 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும், 144,308 பேர் ரஷ்யாவிலிருந்தும், 123,053 பேர் ஜெர்மனியிலிருந்தும், 115,400 பேர் சீனாவிலிருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,270 ஆகும்.

Share.
Leave A Reply