காதல் வார்த்தைகளைக் கூறி, இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவந்த வக்கிர இளைஞரின் தகிடுதத்தங்கள்,
போலீஸாரையே அதிரவைத்திருக்கின்றன!
வடசென்னையைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பி.காம் படித்த இவர், சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி ஒன்றின் மூலம், லிபின்ராஜ் என்ற இளைஞர் இவருக்கு அறிமுகமாகி யிருக்கிறார்.
அடுத்தடுத்த நாள்களில், ராணியைக் காதலிப்பதாகக் கூறி நெருக்கமாகப் பழகிவந்த லிபின்ராஜ், ராணியுடனான அந்தரங்கத் தருணங்களை ஆடியோ, வீடியோவாகப் பதிவுசெய்து மிரட்டி, செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகக் கைதாகி, இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
லிபின்ராஜின் வக்கிரச் செயல்கள் குறித்துப் பேசுகிற திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸார், “ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம்கொண்ட ராணி, அதை ரீல்ஸாக வெளியிட்டு வந்திருக்கிறார்.
ராணியின் பென்சில் ஆர்ட்டைப் பார்த்து கமென்ட்டில் பாராட்டியிருக்கிறார் லிபின்ராஜ். இதையடுத்து, இருவருக்கிடையே நட்பு ஏற்பட்டிருக்கிறது.
தொடர்ந்து ஓவியம் தொடர்பாகப் பேசிவந்த லிபின்ராஜ், ஒருகட்டத்தில் ‘நீ ரொம்ப அழகா இருக்க. உன் அழகுக்கு நான் அடிமை’ என்று காதல் வார்த்தைகளைப் பேசி, தன் வலையில் வீழ்த்தியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, ராணியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த லிபின்ராஜ், தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றத் தொடங்கியிருக்கிறார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராணியிடம் ‘நீயும் உன் ஆடையைக் கழற்று’ என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ராணி மறுக்க, ‘அப்படியென்றால் நீ என்னை நம்பவில்லையா… இவ்வளவுதானா நம் காதல்..?’ என சென்டிமென்ட்டாகக் கேட்டிருக்கிறார்.
அந்த சென்டிமென்ட் வலையில் வீழ்ந்த ராணி, லிபின்ராஜ் சொன்னபடி கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய ஆடைகளை வீடியோ காலிலேயே கழற்றியிருக்கிறார்.
வக்கிர எண்ணம்கொண்ட லிபின்ராஜ், ராணியின் அரை நிர்வாணத்தை அவருக்கே தெரியாமல் ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்துவைத்திருந்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு, அந்த ஸ்கிரீன்ஷாட்டை ராணிக்கே அனுப்பிவைத்த லிபின்ராஜ், ‘நான் சொல்கிறபடி நீ கேட்கவில்லை என்றால், இதை சமூக வலைதளத்தில் பதிவுசெய்துவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார்.
அன்பாகவும் அக்கறையாகவும் பேசிவந்த லிபின்ராஜ், ஏன் திடீரென இப்படி மாறிவிட்டார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்த ராணி, ஸ்கிரீன்ஷாட்டை அழித்துவிடும்படி கெஞ்சியிருக்கிறார்.
அதற்கு லிபின்ராஜ், ‘நான் சொல்கிறபடி நீ கேட்டால் அழித்துவிடுகிறேன்’ எனக் கூறி, ராணியை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரவழைத்திருக்கிறார்.
பிறகு அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்ற லிபின்ராஜ், அங்கு ராணியைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
ஏற்கெனவே தான் திட்டமிட்டிருந்தபடி அதை ரகசியமாக வீடியோவாகவும் பதிவுசெய்திருக்கிறார்.
பின்னர், நல்லவன்போல தான் முன்பு எடுத்திருந்த ஆபாச போட்டோஸையெல்லாம் ராணியின் கண் முன்னாலேயே அழித்திருக்கிறார். இதையடுத்து ராணியும் நிம்மதியடைந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராணியின் பாட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்திருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட லிபின்ராஜ், ராணிக்கு போனில் ஆறுதல் கூறியவர், ‘உன்னை என்னால் மறக்க முடியவில்லை.
நான் இப்போதே உன்னுடன் செக்ஸ் வைக்க வேண்டும். அதனால் நீ உடனே சென்ட்ரலுக்கு வா…’ என அழைத்திருக்கிறார்.
ஆனால் ராணி வர மறுக்கவே, ஆத்திரமடைந்த லிபின்ராஜ், ‘நான் சொல்கிறபடி நீ கேட்கவில்லை என்றால், நீயும் நானும் செக்ஸ் வைத்துக்கொண்ட வீடியோவை, உன்னுடைய அம்மாவுக்கு அனுப்பிவைத்துவிடுவேன்’ என மிரட்டியதோடு, சொன்னபடியே ராணியின் அம்மாவின் செல்போன் நம்பருக்கு அந்த வீடியோவை அனுப்பியும்வைத்திருக்கிறார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராணியின் அம்மா, மகளிடம் விசாரித்தபோதுதான் லிபின்ராஜ் குறித்த உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.
இதையடுத்து ராணியின் அம்மா, வீடியோ ஆதாரத்தோடு புகாரளிக்க… குமரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த லிபின்ராஜைக் கைதுசெய்தோம்.
எங்கள் பிடியிலிருந்து லிபின்ராஜ் தப்பி ஓடியபோது, தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு அவரைப் புழல் சிறையில் அடைத்திருக்கிறோம்.
லிபின்ராஜின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் வேறு சில பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் இருந்தன.
அவை குறித்தும் தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றனர் விரிவாக.இது குறித்துப் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “கைது செய்யப்பட்ட லிபின்ராஜ் மீது ஏற்கெனவே திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது.
பிழைப்பு தேடி குமரியிலிருந்து சென்னைக்கு வந்த லிபின்ராஜ், ஆட்டோ ஓட்டிவந்திருக்கிறார். 9-வது வரை மட்டுமே படித்திருக்கிறார். பாலியல் இணையதளங்களை, வீடியோக்களை அதிக அளவில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ரீல்ஸ் வெளியிடும் பெண்களுக்கு லைக்ஸ் கொடுத்து, அவர்களோடு நெருங்கிப் பழகி ஏமாற்றுவதை வழக்கமாகவே வைத்திருந்திருக்கிறார்.
ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை எங்களிடம் புகாரளிக்கவில்லை. அவமானம் கருதி பெண்கள் புகாரளிக்காததை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய லிபின்ராஜ், சென்னையில் ஆங்காங்கே தங்கியிருந்து தொடர்ந்து பாலியல் வக்கிரச் செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.
லிபின்ராஜால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்” என்றார்.<
தொழில்நுட்பத்தையும் கையாளத் தெரியவில்லை… மனிதர்களையும் நேசிக்கத் தெரியவில்லை… இவர்களெல்லாம் ஜெயிலிலேயே நிரந்தரமாக இருப்பதுதான் சமூகத்துக்கு நல்லது!
““நீயும் உன் ஆடையைக் கழற்று… இல்லை, வீடியோவை உன் அம்மாவுக்கு அனுப்புவேன்..!””,

