புத்தளம் மாவட்டம் சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் காதல் உறவு முறிந்ததை தொடர்ந்து 13 வயதுடைய சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயதுடைய இளைஞன் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுமி தனது பணியிடத்தில் அறிமுகமான இளைஞனுடன் நீண்ட காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 26ஆம் திகதி சந்தேக நபர் சிறுமி தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு சென்று அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இது குறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் சிறுமிக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான காதல் உறவு முறிந்துள்ளது. அதன் பின்னர், சிறுமி மற்றொரு இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள நிலையில், தனக்கு நேர்ந்த துயரத்தை அந்த இளைஞனிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட வாடகை வீட்டின் பெண் உரிமையாளர், சம்பவம் குறித்து சிறுமியின் தாயிடம் தகவல் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, சிறுமியின் தாய் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார், சந்தேக நபரான முன்னாள் காதலனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply