வரலாற்றில் மிகவும் ஆபத்தான அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள்.
சிலர் பகிரங்கமாக போர்ப் பிரகடனம் செய்வார்கள். இவர்களில் சட்ட ஒழுங்கை மதிப்பவர்கள் உண்டு.
சிலர் தாறுமாறாக செயற்படுவார்கள். சட்ட திட்டங்களை பொருட்டாகக் கொள்ள மாட்டார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அப்படிப்பட்டவர். தமது செயல்களைப் பற்றிய விமர்சனங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் சர்வதேச சட்டமெல்லாம் தனக்குத் தேவையே இல்லை என்றார். தான் தார்மீக ஒழுக்கமென எதனைக் கருதுகிறேனோ அதன்படி நடப்பேன் என கடந்த வாரம் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இவை போகிற போக்கில் சொன்ன வார்த்தைகள் அல்ல. தாம் உலகைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையே ட்ரம்ப் பறைசாற்றினார்.
அவரின் உலக கண்ணோட்டத்தில் கொள்கைகள் முக்கியமில்லை. அதிகாரம் போதும். கருத்தொற்றுமையெல்லாம் தேவையில்லை. பலத்தைக் கொண்டு எதனையும் சாதிக்கலாம். உலக ஒழுங்கெல்லாம் தனிமனிதனின் சுபாவத்தால் தீர்மானிக்கப்படக்கூடியவை.
தாம் நினைப்பதையெல்லாம் அராஜகமாக நிகழ்த்திக் காட்டிய ‘செயல் வீரனாக’வும் ட்ரம்ப் இருப்பது தான் மிகப்பெரிய ஆபத்து.
வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை வலுக்கட்டாயமாக சிறைபிடித்த செயலை வெறுமனே தவறென விமர்சித்து விட்டு கடந்து செல்ல முடியாது. இது உலகப் பொதுச் சட்டமான ஐ.நா. சாசனத்தின் அப்பட்டமான மீறல். ஒரு அரசின் இறைமைக்கு எதிராக படைப்பலத்தைப் பயன்படுத்தும் சட்டவிரோதச் செயல்.
ஒரு நகரின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, இராணுவ தளங்களைத் தாக்கி, அரச தலைவரை படைகளால் இழுத்து வருவதெல்லாம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் தேசம் செய்ய வேண்டிய காரியங்களா என்ன? இவை முரட்டுத்தனமான அதிகாரத்தின் விளைவுகள் அல்லவா?
ஆபத்தானதாக இருப்பது செயல் மட்டுமல்ல. அந்த செயலை நியாயப்படுவத்துவதற்காக ட்ரம்ப் சொல்லும் மிக மோசமான தர்க்கமும் தான்.
சர்வதேச சட்டமென நீங்கள் எதனை வரையறை செய்கிறீர்களோ, அதன் அடிப்படையிலேயே உங்கள் செயல் கணிக்கப்படும் என்கிறார், ட்ரம்ப்.
அதாவது, சர்வதேச சட்டமென தான் எதைக் கருதுகிறாரோ, அது தான் சட்டம்.
இதனை பொருள் மயக்கமாகவோ, சிந்தனையில் தெளிவின்மையாகவோ கருத முடியாது. சட்டத்தின் மீதான அப்பட்டமான அவதூறு.
எத்தகைய குறைபாடு இருந்தாலும் சர்வதேச சட்டமென ஒன்று உள்ளது. வல்லரசு நாடுகள் விதிமுறைகளை தமக்கு சாதகமான முறையில் வளைத்துக் கொள்வதையோ, வரைந்து கொள்வதையோ தடுக்கிறது.
உலகிலேயே பலம் வாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருக்கும் வல்லரசு தேசத்தின் தலைவர், அந்த விதிமுறைகள் தேவையில்லாமலும் இருக்கலாம் என்று கருதும் பட்சத்தில், பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவை ஒரு நாட்டை மாத்திரமன்றி, பல தரப்புக்களையும் பாதிக்கின்றன.
வெனிசுவேலாவில் கட்டவிழ்த்த அராஜகத்தைத் தொடர்ந்து, மீண்டும் இராணுவ நடவடிக்கை பற்றி ட்ரம்ப் எச்சரித்தார். வெனிசியூலாவின் இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மாத்திரமன்றி, கொலம்பியாவின் ஆட்சியாளருக்கும் எதிராக அச்சுறுத்தல் விடுத்தார்.
அதே நேரம், கிறீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கும் எத்தனிப்பையும் ட்ரம்ப் தீவிரமாக முன்னெடுக்கிறார். இறையாண்மையுள்ள தேசத்தின் சுயாட்சியுள்ள ஆட்புலத்தை இராப்போசன விருந்தொற்றில் பேரம் பேசி கைமாற்றக்கூடிய பிராந்தியம் போல நினைத்து செயற்படுவது ஒட்டுமொத்த உலகினதும் துரதிருஷ்டம். இது வரலாற்று ரீதியான பாசாங்குகளையும் தூரத்தில் எறியக் கூடிய ஏகாதிபத்திய சிந்தனை.
ட்ரம்பை ஆதரிப்பவர்கள் இதன் பின்னணியில் மூலோபாயத் திட்டமொன்று உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இங்கு முற்றுமுழுதாக பொறுப்பற்றதொரு சூழலே நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி, நலிவான நாடுகள் மீது கொள்கைகளை வலிந்து திணிக்கிறார். தொலைதூரத்தில் இருந்து அவற்றை நிர்வகிப்பது பற்றி பேசுகிறார். ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்களை சூறையாடிக் கொண்டு, செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருக்கவும் முனைகிறார்.
இது கடந்த காலத்தில் உலகம் கண்ட காலனித்துவ ஆட்சி முறையை விடவும் மாறுபட்டதாக இருக்கிறது. எதற்கும் பொறுப்புக்கூறாமல் வற்புறுத்தலின் பேரில் ஆட்சி செய்யக்கூடிய முறையாக இருக்கிறது. இந்த முறை கேவலமானது, குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
ட்ரம்பின் செயல்கள் சூனிய வெளியில் நிகழ்பவை அல்ல. ஒவ்வொரு செயலும் அவதானிக்கப்படுகிறது. அவை தவறான முன்னுதாரணங்களாகவும் அமையலாம்.
அமெரிக்கா, சர்வதேச சட்டத்தை புறந்தள்ளும் பட்சத்தில், அதனையே ஏனைய நாடுகளும் பின்பற்ற முடியும். தாய்வானை சீனாவும், உக்ரேனை ரஷ்யாவும் ஆக்கிரமிப்பதில் பிரச்சினை இருக்காது.
பிராந்திய வல்லரசுகளும் ட்ரம்ப்பைப் பின்பற்றி எல்லாவற்றை விடவும் வலிமையே பெரியது என்று சிந்திக்கத் தலைப்படலாம்.
சட்ட ஒழுங்குகள் சீர்குலையும் பட்சத்தில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிலவிய காலத்தை நோக்கி உலகம் மீண்டும் தள்ளப்படலாம் என ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்கரெட் சட்டர்த்வெய்ட்டே குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.
அந்த யுகம் மீண்டும் உருவாகும் பட்சத்தில் பொறுமைக் காத்தல் என்ற குணம் மறைந்து, சண்டைகள் தீவிரம் பெறுவதைத் தவிர்க்க முடியாமல் போகலாம்.
அமெரிக்காவின் ஆதிக்க சிந்தனை மிக்க வரலாற்றை ஆராய்கையில் ஆறுதல் கொள்ளக் கூடிய விடயம் எதுவும் கிடையாது. அமெரிக்காவின் தலையீடுகளாலும், ஆக்கிரமிப்புக்களாலும், சதி முயற்சிகளாலும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக கஷ்டப்பட்டு வந்துள்ளன. சிலியில் இருந்து பனாமா வரை, ஹெய்ட்டியில் இருந்து நிக்கரகுவா வரை எந்தவொரு நாடும் தப்பவில்லை.
இந்நாடுகளில் நீடிக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் ஸ்திரமற்ற நிலைக்கும் காரணம், பாதுகாப்பு அல்லது சட்ட ஒழுங்கு என்று வார்த்தைகளைப் பயன்படுத்தி அமெரிக்க செய்த காரியங்கள் தான்.
வரலாற்றை ஆராய்கையில், வெனிசுவேலாவின் மீது ட்ரம்ப் கட்டவிழ்த்து விட்ட அராஜகம் புதிய விடயமல்ல. அது வரலாற்று இன்னொரு விதத்தில் புதுப்பிக்கப்படுவதைத் தான் காட்டுகிறது.
இதில் புதியது யாதெனில், முன்னைய தலைவர்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற வார்த்தைகள் மூலம் உலகை ஏமாற்றிக் கொண்டு அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டு அவமானங்களை மறைத்துக் கொண்டார்கள். ட்ரம்ப் தாம் செய்வது தவறு என்பதைக் குறித்த வெட்கம் எதுவும் இன்றி சகலதையும் செய்கிறார்.
தாம் செய்வது அராஜகம் என்ற சுயபிரக்ஞை ட்ரம்பிற்கு கிடையாது. ஒரு தேசத்தின் இறையாண்மையை மீறும் வகையில் படைகளை அனுப்பி, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு இழுத்து வரும் காட்சியை தொலைக்காட்சியில் நேரலையாக காண்கிறார்.
அது மிகச் சிறந்த இராணுவ நடவடிக்கை என்று புகழ்பாடுவதெல்லாம் அடுத்தவன் வீட்டை உடைத்தது பற்றி பெருமை பேசுவதற்கு சமமானது அல்லவா? இந்தப் பேச்சில் தார்மீகம் மறைந்து, அச்சுறுத்தல் மேலோங்கி நிற்கிறது. ட்ரம்பின் எண்ணப்படி, அதுவே நியாயம்.
அமெரிக்காவின் எல்லைக்கு வெளியே மாத்திரமன்றி, உள்ளேயும் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஒரு புறத்தில் அரசாங்க முடக்கநிலை, மறுபுறத்தில் அரசியல் மயமாக்கம். மக்கள் மத்தியில் ஜனாதிபதி மீது இருந்த நம்பிக்கை சூன்யத்தை நோக்கி நகர்கிறது.
உள்நாட்டில் தோல்வியை சந்திக்கையில், அரசியல் தலைவர்கள் ஏதோவொரு வெளிநாட்டுப் பிரச்சினையை இழுத்துப் போட்டுக் கொண்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது வரலாறு நெடுகிலும் நடந்து வரும் விடயமே. இந்த அபாயம் கற்பனையான ஒன்றல்ல. அதிகாரம் செயற்படும் கட்டமைப்பிலேயே அது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் அராஜகங்களை வெறுமனே தனிமனிதனின் பித்துக்குளித்தனமாகக் கருதி, சர்வதேச சமூகம் சகித்து கொள்ளாதது இதனால் தான். ஒரு நாட்டின் தலைவரை கடத்துவதும், இறைமையுள்ள தேசத்தின் மீது குண்டுகளைப் போடுவதும், சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக புறக்கணிப்பதும் எல்லைகளை மீறும் செயல்கள்.
இங்கு ஒரு செயல் தடுக்கப்படாமல் இருந்தால், அடுத்த செயலுக்கான தடைகள் இல்லாமல் போகின்றன. அடுத்தடுத்து அராஜகம் புரிவதற்கான தயக்கம் நீங்கி, அதுவே அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் அடுத்து கிறீன்லாந்து மீது கை வைப்பாரா, வேறு லத்தீன் அமெரிக்க நாடொன்றை தாக்குவாரா அல்லது உலகின் வேறொரு புள்ளியை இலக்கு வைப்பாரா என்பது கேள்வி அல்ல.
இங்கு முக்கியமான கேள்வி, உலகம் என்ன செய்யப் போகிறது என்பது தான். ஐ.நா. போன்ற கட்டமைப்பைப் பயன்படுத்தி, அது சாத்தியப்படாவிடின் வேறு ஒழுங்குகளை ஏற்படுத்தி ட்ரம்ப்பை தடுத்து நிறுத்தப் போகிறதா அல்லது அராஜகத்தை அங்கீகரித்து வாளாதிருக்கப் போகிறதா, சர்வதேச சமூகம்?
கட்டுப்படுத்தப்படாத எந்தவொரு அதிகாரமும், தனக்குரிய எல்லைகளுக்குள் முடங்கி விடப் போவதில்லை. சர்வதேச சட்டத்திற்கு பதிலாக தமது சிந்தனையின் பிரகாரம் தாமே உருவாக்கிக் கொண்ட நீதி நெறியைத் திணிப்பதற்கு ட்ரம்ப் போன்ற ஒருவருக்கு உலகம் இடமளிக்கும் பட்சத்தில், இப்போது காண்பதை விடவும் மோசமான அநீதிகளும், அநியாயங்களும், அராஜகங்களும் அரங்கேற இடமுண்டு.
இனிமேலும், மரியாதை கருதி அவநம்பிக்கைக்கு இடமளித்து காத்துக் கொண்டிருப்பதற்கான காலம் கடந்து விட்டது. அநீதிக்கு எதிராக கூட்டாக செயற்பட்டு, ஒவ்வொரு அராஜக செயலுக்கும் பொறுப்புக் கூறச் செய்து, உலக ஒழுங்கு துண்டு துண்டாக சிதைக்கப்படாமல் பாதுகாப்பதற்குரிய கூட்டு நடவடிக்கைகளே சமகாலத் தேவை.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

