உத்தரப்பிரதேசத்தில் மோமோவிற்கு ஆசைப்பட்ட சிறுவன் ரூ.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வீட்டில் இருந்து எடுத்து வந்து, தெருவோர வியாபாரிக்கு கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருப்பவர் விம்லேஷ் மிஸ்ரா.

இவர் அங்குள்ள தியோரியா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் இருக்கிறார். அவருக்கு மோமோ (MOMO) மீது அதிக விருப்பம். அடிக்கடி தனது தந்தையிடம் பணம் வாங்கிச் சென்று மோமோ சாப்பிடுவது வழக்கம்.

சிறுவனின் ஆசையை தெரிந்துகொண்ட மோமோ வியாபாரிகள், அவரிடம் மேற்கொண்டு இலவசமாக மோமோ சாப்பிட வேண்டுமானால், வீட்டில் இருந்து தங்க நகைகளை எடுத்து வரும்படி தெரிவித்திருக்கிறார்கள்.

சிறுவனும் தனது வீட்டில் இருந்து அடிக்கடி தங்க நகைகளை எடுத்துக் கொடுத்து மோமோ சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

மிஸ்ரா தனது வீட்டில் தனது சகோதரியின் தங்க நகைகளை வைத்திருந்தார். திடீரென மிஸ்ராவின் சகோதரி தனது தங்க நகைகளை திரும்பக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே மிஸ்ரா வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை எடுக்கச் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகள் காணாமல் போய் இருந்தது.


Momos

இது குறித்து விசாரித்து பார்த்த மிஸ்ரா, வீட்டில் இருந்த சிறுவனிடம் விசாரித்தபோது, தங்க நகைகளை எடுத்துச் சென்று மோமோ வியாபாரிகள் 3 பேரிடம் கொடுத்ததாகத் தெரிவித்தான்.

அந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ.85 லட்சமாகும். இது குறித்து மிஸ்ரா போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து மிஸ்ரா கூறுகையில், ”தங்க நகைகளை எடுத்து வந்து கொடுத்தால் இலவசமாக மோமோ தருவதாக 3 வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே சிறுவன் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துள்ளான். இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறோம். போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

Share.
Leave A Reply