ஈழப் போர் என்பது வெறும் உள் நாட்டுக் கிளர்ச்சி என்ற நிலையிலிருந்து மாற்றம் பெற்று அப்
போர் தற்போது பிராந்திய சக்திகளையும் இதற்குள் இழுத்து விட்டிருந்தது எனக் கடந்த
பகுதியில் தெரிவித்திருந்த சரத் பொன்சேகா தற்போது ஈழப் போர் 2 இன் பின்னணிகளை
எவ்வாறு உரைக்கிறார்? எனப் பார்க்கலாம்.
ஈழப் போர் 2 இன் கால எல்லை என்பது 1990 -1994 காலப் பகுதியாகும். இக் கால இடைவெளியில் போரின் உக்கிரம் அதிகரித்துச் சென்றது.
போர் கள நிலவரங்கள் மிக வேகமாகவே மாறிச் சென்றன. இனிமேலும் இவை ஒரு கிளர்ச்சி என்ற வரையறைக்குள் பார்க்க முடியாது.
மிகவும் மூர்க்கமான, கனரக ஆயுதங்களைக் கொண்ட, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட
எல்லைக்குள்ளும், வெளிநாடுகளின் உதவியும், ஒரு ஒழுங்கற்ற போரினை பல்வேறு
தந்திரங்களுடன் நடத்தும் ஆற்றல் உள்ளதாக மாற்றம் பெற்றிருந்தது.
இந்த ஈழப் போர்க் காலத்தில் இலங்கை ராணுவமும், இதர சேவைகளும் பொலீசாரும் பாரிய
அளவில் விஸ்தரிக்கப்பட்டனர்.

the Indian Peace Keeping Force in Sri Lanka, 1987–1990
1994ம் ஆண்டளவில் ராணுவத்தின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரித்தது. அதே காலத்தில் விடுதலைப்புலிகளின் தொகையும் அதிகரித்து மூன்று வருட காலத்தில் உலகின் நான்காவது பாரிய ராணுவத்துடன் மோதும் அளவிற்கு பலம் மிக்கதாக மாறியிருந்தது.
இந்தியா இலங்கையில் சுமார் 75000 ராணுவத்தையும், கனரக ஆயுதங்களையும், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் துணையை வைத்திருந்த போதிலும், இவ்வளவு பலம் வாய்ந்த படையினருடன் விடுதலைப் புலிகள் மோதிய காரணத்தால் அவர்கள் மீதான மதிப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தமையால் மேலும் பலரை இணைக்கும் வாய்ப்பு அதிகரித்தது.
ஈழப் போர் 2 முடிவடையும் தறுவாயில் அவர்களின் பலம் 5000 எட்டியிருந்தது.
இவ்வாறாக தனது பலத்தை விடுதலைப்புலிகள் அதிகரித்த போதிலும் அவர்களால் வடக்கு,
கிழக்கில் சமமான பலத்தைக் கொண்டிருக்கவில்லை.
ராணுவத்திற்கு வடக்கில் கிடைத்த கணிசமான அழுத்தங்கள் கிழக்கில் இருக்கவில்லை. அங்கு ஓரளவு சுதந்திரமாக சில இடங்களான தொப்பிகல காட்டுப் பகுதியில் ஓரளவு பலமாக இருந்ததைத் தவிர்த்து ராணுவத்தால் நடமாட முடிந்தது.
விடுதலைப்புலிகள் தாக்குதலும், ஓடுதலும் என்ற தந்திரோபாயத்தையே அதிகளவு பயன்படுத்தினர். ஆனால் ராணுவம் நேரடித் தாக்குதலுக்கு ஏற்றவாறே பயிற்சி பெற்றிருந்தது.
1990 இன் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகள் தமது தந்திரோபாய தாக்குதலின்
கெட்டித்தனங்களை அதிகளவு காட்டினர்.
இதன் காரணமாக, 1990ம் 1991ம் ஆண்டு காலத்தில் இரண்டு தளங்களையும், ஒரு முழுமையான பட்டாலியனைக் கொண்டிருந்த தளத்தையும் வடக்கில் கைப்பற்றினர்.
இரு தளங்களை ராணுவம் மீளவும் கைப்பற்றிய போதிலும் விடுதலைப்புலிகள் சிறிய தளங்கள் பலவற்றை கைப்பற்றினர்.
1992ம் ஆண்டு சுமார் 1200 ராணுவத்தைக் கொண்டிருந்த இரண்டு பட்டாலியன்களை முழுமையாக அழித்தனர்.
1993ம் ஆண்டு இடம்பெற்ற மோதலின் போது விடுதலைப்புலிகளுக்குப் பலமான இழப்பு ஏற்பட்டதோடு அச் சம்பவத்தில் அதற்குக் கட்டளைத் தளபதியாகச் சென்ற சரத் பொன்சேகா நெஞ்சில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சுமார் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றார்.
இதுவே இலங்கை ராணுவத்தின் வரலாற்றில் ஒரு பிரிகேடிக்குத் தலைமை தாங்கிய கட்டளைத் தளபதி போரின் போது காயமடைந்த சம்பவமாகும்.

ராணுவம் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய போதிலும், அவர்களை முழுமையாகத் தோற்கடிக்கும் திட்டங்கள் எதுவும் ராணுவத்திடம் இருக்கவில்லை.
பல தாக்குதல்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய வெற்றியைத் தந்தனவே தவிர போர்த்
தந்திரத்தின் சமநிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
1993ம் ஆண்டு ராணுவம் மிகப் பாரிய இழப்பை வடக்குப் போர்க் களத்தில் முகம் கொடுத்தது.
போர் தந்திரோபாயங்களில் மிகவும் வல்லமை மிக்க மேஜர் ஜெனரல் ஒருவரும், பிரிகேடியர்
ஒருவரும் ஒரு தனிச் சம்பவத்தில் உயிரிழக்க நேரிட்டது.
யாழ்ப்பாண நகரப் பகுதியை மீளக் கைப்பற்றும் நோக்கில் வேவு பார்க்கச் சென்ற போதே அவர்கள் கொல்லப்பட்டனர்.
அதாவது விடுதலைப்புலிகளால் ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த நிலக் கண்ணி வெடியில் அவர்கள் சென்ற வாகனம் தாக்கப்பட்டதால் இச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த வாகனத்தின் பிற்பகுதியில் சென்ற ராணுவத்தினர் ஒருவரைத் தவிர அனைவரும் மரணத்தைத் தழுவினர். இச் சம்பவம் ராணுவத்தின் உற்சாகத்தைப் பெருளவில் பாதித்தது எனலாம்.
1993ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வடக்கு, கிழக்கின் செயற்பாடுகள் இறுகிய நிலைக்குச்
சென்றன.
விடுதலைப்புலிகள் அவ்வப்போது சிறிய தாக்குதலைத் தொடுத்ததோடு நிலமைகள்
சென்றன. அரசினது போக்கிலும், ராணுவ உயர் மட்டத்திலும் சிறிதளவு உற்சாகமே
காணப்பட்டது.
படுகொலை முன் மே தின கொண்டாட்டாட்டத்தில் ரணசிங்க பிரேமதாஸ
இதே ஆண்டில் இலங்கையின் நவீன வரலாற்றில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மே
தின நிகழ்வின் போது இலங்கையின் அரசுத் தலைவரான ரணசிங்க பிரேமதாஸ அவர்கள்
படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.
அவரது தனிப்பட்ட சேவைக்கு அமர்த்தப்பட்ட உத்தியோகஸ்தர் ஒருவர் மே தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருந்த வேளையில் அவருக்கு மிக அண்மையில் வைக்கப்பட்ட வெடி குண்டு மூலம் அவரும் அவரது பாதுகாப்பு பிரிவினரும் உயிரிழந்தனர்.
ரணசிங்க பிரேமதாஸ
இச் சம்பவம் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தன.
இவ்வாறான தொடர் சம்பவங்கள் காரணமாக, ராணுவம் மற்றும் அரசியல் பிரிவினர் மத்தியிலும், நாட்டிலும் பெரும் சோர்வு காணப்பட்டது.
குறிப்பாக, பயங்கரவாதத்தினை ராணுவ நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் தோற்கடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
அத்துடன் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இவற்றை அரசியல் வழிகள் மூலம் தீர்ப்பதே உசிதமான அணுகுமுறை என்ற கருத்து பலமாக வளர்ந்தது.
1994ம் ஆண்டு சுமார் 17 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக (சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி) செயற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் அதிகாரத்திற்கு வந்தனர்.
கடந்த நிர்வாகம் எவ்வாறு விடுதலைப்புலிகளால் தவறான வழியில் நடத்தப்பட்டார்களோ அதே வழியில் இவர்களும் ஈர்க்கப்பட்டார்கள்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும் என நம்பிய அரசாங்கம் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்குச் சென்று சமாதான ஒப்பந்தமொன்றை எட்டினர். இதன் காரணமாக ஈழப் போர் 2 ஒரு முடிவுக்கு வந்தது.
ஆனையிறவு முகாமை அகற்றுமாறு விடுதலைப்புலிகள் கோரிக்கை
ஆனையிறவு
இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் இடைச் சமாதானத் தூதுவர்கள்
மூலம் ஆரம்பித்திருந்தது. இப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளை
விடுதலைப்புலிகள் தமது கோரிக்கைகள் நிறைந்த பட்டியல் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
அவற்றில் பல அரசாங்கத்தினால் அல்லது ராணுவத்தால் ஏற்க முடியாதனவாக இருந்தன.
அவற்றில் மிகவும் பிரச்சனைக்குரிய கோரிக்கை எதுவெனில் குடாநாட்டையும், பிரதான நிலப் பகுதியையும் இணைக்கும் வடமேற்கு பகுதியிலுள்ள கூர்மையான பிரதேசத்தில் அமைந்துள்ள அதாவது ஆனையிறவுப் பகுதியாகும்.
இப் பகுதி விடுதலைப்புலிகளை குடாநாட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் பிரதேசமாகும்.

இக் கோரிக்கையை ராணுவத்தினர் ஏற்கவில்லை. சர்வதேச மத்தியஸ்தர்கள் இப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாகவே பாதகமான நிலைக்குச் சென்றது.
இந்த அடிப்படைப் பிரச்சனையில் விடுதலைப்புலிகள் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.
இதன் விளைவாக இம் முரண்பாடுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தன. விடுதலைப்புலிகள்
பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரித்து அரசாங்கத்தின் மேல் அதிகளவு அழுத்தங்களைப்
பிரயோகித்தார்கள்.
முறுகல்நிலை அதிகரித்துச் சென்ற நிலையில் கடற் பிரந்தியத்தில் ரோந்து சென்ற கடற்படையின் படகு ஒன்று தற்கொலைப் பிரிவினரால் தாக்கப்பட்டது.
அரசாங்கம் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மதித்த போதிலும் விடுதலைப்புலிகள் அந்த வாய்ப்பைத் தமக்குச் சாதகமாக மாற்றும் போக்கே காணப்பட்டது.
இதன் காரணமாக அரசாங்கம் மிகவும் தயக்கத்துடன் ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
வாசகர்களே!
சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் ஈழப் போர் 3 மிகச் சுருங்கிய கால
போர் நிறுத்தத்தின் பின் மீண்டும் ஆரம்பித்தது. இந்த விபரங்களை அடுத்த பகுதியில்
பார்க்கலாம்.
தொடரும்………
(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்
மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்;

