கடந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் குறிப்பாக தாக்கிய
பின்னர் ஓடுதல், கடல் வழிகளைத் தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அரசாங்க தரப்பில்
ராணுவ வழிகளில் அணுக முடியாது எனக் காணப்பட்டதால் தொடர்ந்தும்
பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது என்ற முடிவில் இருந்த வேளையில்,
விடுதலைப்புலிகள் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தம்மைப் பலப்படுத்தியதால் அரசாங்கமும் தவிர்க்க முடியாமல் மிகவும் தயக்கத்துடன் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்ததாகவும், அதனால் சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்து அடுத்த கட்ட நடவடிக்கையான ஈழப் போர் 3 ஆரம்பித்ததாகப் பார்த்தோம்.
ஈழப் போர் 3 – தாக்குதலுக்கான தந்திரோபாயங்களை நோக்கி…..
இம்முறை ஈழப் போர் 3 என்பது பாரிய தாக்குதல்களைத் தொடுப்பது என்ற நோக்கத்துடனேயே
ஆரம்பமானது.
புதிய அரசு பதவிக்கு வந்ததும் பாதுகாப்பு அமைச்சிற்குப் புதிய அமைச்சர்,
பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டார்கள்.
Sri Lanka’s junior defence minister Anuruddha Ratwatte
பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஜனாதிபதியின் மைத்துனரும், முன்னாள்; ராணுவ அதிகாரியுமாகும்.
அவர் தொடர்ச்சியாக ராணுவத்தில் கடமை புரியாவிடினும், அவர் மீளவும் ராணுவத்தில் இணைந்து மிக விரைவாகவே நான்கு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தமையால் பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். (Anuruddha Ratwatte)
அவரது நியமனம் ராணுவத்திற்குள்ளும், பொது மக்கள் மத்தியிலும் நியாயமான நம்பிக்கையைத் தோற்றுவித்தது. போர் நிலமைகள் வருடக் கணக்கில் நீண்டு சென்றமையால் தெளிவான திட்டங்களுக்கான புதிய வாய்ப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
புதிய அரச நிர்வாகம் இப் பிரச்சனையில் அதிக காலத்தைக் கடத்தாமல் மிக விரைவாகவே
காரியத்தில் இறங்கியது.
பயங்கரவாதத்தின் மூல வேர்களை அழிப்பது என்ற திட்டத்தினடிப்படையில் புதிய நவீன ஆயுதங்கள், விமானங்கள், விரைவு கடற்படைப் படகுகள் என பல இறக்குமதி செய்யப்பட்டதால் ராணுவத்தினர் மத்தியில் புதிய நம்பிக்கை தோற்றம் பெற்றது.

மக்கள் மத்தியிலும்ராணுவத்தினர் மத்தியிலும் தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம்
பரவியது. புதிய பிரதி பாதுகாப்பு அமைச்சரின் மேற்பார்வையில் ராணுவம் விடுதலைப்புலிகள முற்றாக அழிக்கும் நோக்கில் தமக்கான தந்திரோபாய வரைபடங்களைத் தயாரித்தது. ( அந்த
வரைபடங்கள் தனியாக தரப்பட்டுள்ளன. )
இத் திட்டத்தின் பிரகாரம் 1987 ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதே பிரதான நோக்கமாக அமைந்தது.
ராணுவத்தின் இரண்டாவது உயர் கட்டளைத் தளபதி ஒருவர் இவற்றின் ஒட்டு மொத்த செயற்பாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
மூன்று படைப் பிரிவுகள் இத் தாக்குதலுக்கென தயார் நிலையில் வைக்கப்பட்டன. இவற்றில் இரண்டு படையணிகள் உடனடியாகவே தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும், மூன்றாவது படையணி இறுதிக் கட்டத்திற்குமென திட்டமிடப்பட்டது.
30 நாட்கள் நீடித்த மிகவும் இறுக்கமான நடவடிக்கைகள் மிக வெற்றியோடு முடிவடைந்தது. யாழ். குடாநாடு மீளவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இந் நடவடிக்கைகளின் போது சுமார் 200 ராணுவத்தினர் பலியானார்கள்.
விடுதலைப்புலிகள்
இவ்வாறாக ஆரம்ப வெற்றிகள் காணப்பட்ட போதிலும் ராணுவத்தின் மூலோபாயத்தை அடைவது பெரும் சிக்கலாகவே அமைந்தது.
வட பகுதித் தாக்குதலில் அதிக கவனம் செலுத்தப்பட்டதால் கிழக்கிலிருந்தும் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதன் காரணமாக சில ராணுவ முகாம்கள் கிழக்கில் மூடப்பட்டன.
இதனால் கிழக்கில் விடுதலைப்புலிகள் மிகவும் சுதந்திரமாகவே செயற்பட்டார்கள். தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்துவதானால் ராணுவத்தை விஸ்தரிப்பது அவசியம்.
இதுவே ராணுவத் தலைமைகள் எதிர்நோக்கிய சவாலாக அமைந்தது. இக் காலகட்டத்தில் ராணுவத்திற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்தகால போர்களின் செய்திகள் காரணமாக மக்களுக்கு ராணுவத்தில் இணையும் ஆர்வம் குறைந்து காணப்பட்டது.
ஆட் திரட்டல் குறைந்து சென்றதால் ராணுவத்தை விஸ்தரிப்பது கடினமாக அமைந்தது.
இதனால் ஏற்கெனவே உள்ளவர்களே அச் சுமையையும் சுமந்தார்கள். இருப்பினும்
விடுதலைப்புலிகள் மீண்டும் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்காமல் எப்போதுமே
தயார் நிலையில் இருந்தனர்.

கிளிநொச்சி
1995ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ராணுவம் குடாநாட்டிலிருந்து கிளிநொச்சி நகரைக்
கைப்பற்றும் நோக்குடன் தனது இரண்டாவது தாக்குதலுக்குத் தயாரானது.
இது யாழ்ப்பாணத்தின் தெற்கு முனையிலிருந்து 14 கிலோமிற்றர் தூரமுள்ள ஆனையிறவு வரையான கரையோரப் பகுதியாகும். 1995ம் ஆண்டின் இறுதியில் கிளிநொச்சியும் கைப்பற்றப்பட்டது.
இருப்பினும் 1996ம் ஆண்டில் மீண்டும் ஒரு இடி விழுந்தது. வடக்கில் மிகவும் பாதிப்படைந்த
விடுதலைப்புலிகள் மீண்டும் தம்மை ஒருங்கிணைத்து முல்லைத்தீவு முகாமைத் தாக்கி
அழித்தனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் சுமார்
1200 ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்களை மீட்க மேலதிக ராணுவம், அதிரடிப் படைப் பிரிவு என்பன பயன்படுத்திய போதிலும் முடியவில்லை.
ஈற்றில் அம் முகாமின் அனைத்து ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஈழப் போர் வரலாற்றில் மிக மோசமான இழப்பை ராணுவம் சந்தித்த சம்பவம் இது எனலாம். முல்லைத்தீவு ராணுவத் தோல்விகள் அரசாங்கத்தையும், ராணுவத்தையும் தமது மூலோபாயங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும்படி தூண்டியது.
இருப்பினும் தமது மூலோபாய இலக்கை அடைவதற்கு மாற்று வழிகள் பற்றி ஆராய்ந்தனர்.
அதன் பிரகாரம் வவுனியாவின் தெற்குப்புறத்திலிருந்து கிளிநொச்சியை நோக்கி சென்று வடக்குப் பகுதியை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே திட்டமாகும்.
ஏ 9 பாதை
இவ்வாறான திட்டங்களுடன் ஈழப் போர் 3 ஆரம்பமாகியது. பிரதான போக்குவரத்துப் பாதையான ஏ 9 ஐக் கைப்பற்றுவதே நோக்கமாகும்.
இப் பாதை வவுனியாவின் வடக்கிலிருந்து கிளிநொச்சி வரை செல்கிறது. இப் பாதை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. சுமார் 50 கிலோ மீற்றர் தூரத்தைக் கைப்பற்றுவதே நோக்கமாகும். ஆனால் இதன் சாத்தியம் குறித்து குறித்து சரத் பொன்சேகா சந்தேகம் கொண்டிருந்தார்.
இருப்பினும்,இதற்கான செயற்பாடுகள் 1997ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாகின. இத்
தாக்குதலில் இரண்டு படைப் பிரிவுகள் ஏ 9 ஐ நோக்கி முன்னேறிச் செல்லவும், மூன்றாவது
பிரிவு பின்னணியில் செயற்பட்டது.
பாரிய எதிர்பார்ப்புகளோடு தொடங்கிய 1997 இன் இம் முயற்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு
வேகமாக முன்னேறவில்லை. புளியங்குளம் வரையே செல்ல முடிந்தது. விடுதலைப்புலிகள் பல முனைகளில் பதில் தாக்குதல்களை நடத்தினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் பிராந்திய ராணுவத் தலைமையகம் ஒன்றினை கிட்டத்தட்டக் கைப்பற்றும் நிலைக்குச் சென்றனர். இதன் விளைவாக ராணுவத்தின் உற்சாகமும், நம்பிக்கையும் படிப்படியாகக் குறைந்து சென்றது.
இக் கால வேளையில் வடக்கிலும், கிழக்கிலும் மிகக் குறைந்தளவு ராணுவத்தைக்
கொண்டிருந்த சில ராணுவ நிலைகள் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர் நோக்கின.
இவ்வாறான ஏ 9 பாதையிலுள்ள பாதிக்கப்பட்ட ராணுவ நிலைகளுக்கு மேலதிக ராணுவம்
அவ்வப்போது அனுப்பப்பட்டது.
சரத் பொன்சேகா
இக் காலப் பகுதியில் சரத் பொன்சேகா பிரிகேடியர் தரத்தில் இருந்து கிளிநொச்சி, ஆனையிறவு ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்தார்.
1998இல் ராணுவ நடவடிக்கைகள் இறுகிய நிலைக்குச் சென்றன. ராணுவ பதவிகளில்
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர் சரத் பொன்சேகா தெற்கிலிருந்து முன்னேறி
தாக்குதல்களை மேற்கொள்ளும் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கும்படி பணிக்கப்பட்டார்.
இக் காலப் பகுதி என்பது ஏ 9 பெருவீதியை விடுவிக்கும் பெரும் போர்க் களமாக அமைந்தது.
1998ம் ஆண்டின் நடுப் பகுதியில் கனகராயன் குளம் கைப்பற்றப்பட்டதோடு, மேலும் வடக்கு
அதாவது மாங்குளம் பகுதியை நோக்கி முன்னேறியது. இங்கு தாக்குதல்கள் மிக உக்கிரமாக
இடம்பெற்றிருந்தன.
வாசகர்களே!
கிளிநொச்சியை நோக்கிச் சென்ற படைப் பிரிவினர் மாங்குளம் வரை சென்றார்களா?
அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
தொடரும்.……
(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்
மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்;

