யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்டார். பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர்.
அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.
இந்நிலையில், குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்த வழக்கில் விரிவுரையாளரின் மகளான சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி, தாயின் இறுதிச் சடங்கில், மயானத்தில் பங்குகொள்ள தனது கட்சிக்காரரான மகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை முன்வைத்த நிலையில் மன்று அதற்கு அனுமதி வழங்கியது.
கோம்பயன் மணல் மயானத்திற்கு கொலை சந்தேகநபரான, விரிவுரையாளரின் மகள் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
மயானத்தில் எந்தவிதமான காட்சிகளையும் பதிவு செய்ய வேண்டாம் எனவும், அப்படி பதிவு செய்தால் கைது செய்யவேண்டி ஏற்படும் எனவும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை வெளியே நிற்குமாறும் கூறினார். இருப்பினும் ஊடகவியலாளர்கள் குறித்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சந்தேகநபரை பொலிஸார் அழைத்து சென்ற பின்னர், செய்தி சேகரிப்புக்காக இனி படங்கள், காணொளிகள் பதிவு செய்யலாமா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட நிலையில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அதற்கு பின்னரும் பதிவு செய்ய வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பொலிஸ் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.
படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக வைப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

