கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டனில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வளைவு ஒன்றில் எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முற்பட்ட போது, முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியினுள் தாய், தந்தை மற்றும் இரு மகள்கள் இருந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டியை மூத்த மகளே செலுத்தியுள்ளதாகவும், அவரிடம் வாகனத்தை செலுத்துவதற்கான சட்டபூர்வமான சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் இரு மகள்களும் தாயாரும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

