தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் திடீர் சுகயீனம் காரணமாக யாழ், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன் கூட்டமைப்பின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலை தான் புறக்கணிப்பதாகவும் அறிவித்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை அனந்தி சசிதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அனந்தியை கடுமையாகத் திட்டிதாகவும் அதனால் அனந்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அனந்தியிடம் வினவ அவரது தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கும் முயற்சி கைகூடவில்லை. அனந்தியின் கைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவை சேனாதிராஜா கூறுகையில்,
´நான் தொலைபேசி அழைப்பெடுத்து அனந்தியிடம் பேசியது உண்மைதான். ஆனால் ஊடக செய்திகள் சொல்லும்படி நான் அவரை திட்டவில்லை. நாட்டு நிலை குறித்தே பேசியிருந்தேன்.
என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி ஒருபோதும் அப்படி பேசுபவர்கள் அல்ல. நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்´ என்றார்.