நீண்ட மௌன போராட்டத்துக்கு பின்னர், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்குமா அல்லது இல்லையா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக நீடித்துவந்தது.

ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கெனவே இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் கண்டிப்பாக வாக்களிக்கவேண்டும் என்று கோருவது என்று முடிவு எடுத்திருந்த நிலையில், அதற்கு எஞ்சியிருந்தது இரண்டே இரண்டு தெரிவுகள் மட்டுமே.

ஒன்றில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் அல்லது மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு கோரவேண்டும்.

இந்த இரண்டு தெரிவுகளில், மனச்சாட்சிப்படி தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கோரும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிரணியினரோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த தவறியிருந்தனர்.

அதாவது, தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சினைகள் அனைத்துக்கும் என்று இல்லாவிட்டாலும், சில முக்கிய பிரச்சினைகளின் தீர்வு குறித்த சில உறுதிமொழிகளையாவது பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பியது.

அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அத்தகைய எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க எதிரணி தயாராக இருக்கவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றம் எனலாம்.
மேலும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூட, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தோ, அவற்றுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்தோ எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை.

அடுத்து, தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்குவதற்கு எதிரான போக்கையுடைய சிங்களத் தேசியவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மீது செல்வாக்கு செலுத்தும் நிலை அதிகமாகவே காணப்படுகிறது.

இவற்றையெல்லாம் மீறி, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து செயற்படுமளவுக்கு அவர் ஒன்றும் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசிய ஒருவரோ, தமிழ் மக்களால் வித்தியாசமான அரசியல்வாதியாக பார்க்கப்பட்ட ஒருவரோ அல்ல.

இவை போன்ற காரணங்களால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை அறிவிப்பதில் பலத்த போராட்டங்களை சந்திக்கவேண்டிய நிலையேற்பட்டது.

வெறுமனே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துக்காக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவேண்டுமா என்ற கேள்வி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருபகுதியினரிடம் இருந்துவந்திருந்தது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், அதற்கு துணைபோவது சரியான அரசியல் முடிவா என்ற விவாதம் இம்முறை கடுமையாகவே இருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது. அப்போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்கநேரிட்டது.

அதுபோன்றே, இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவேண்டுமா, ஒதுங்கியிருக்கவேண்டுமா என்ற விவாதங்கள் சூடுபிடித்திருந்தன.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிலிருந்து சாதகமான வகையில் எந்த சமிக்ஞையும் வெளிக்காட்டப்படாத நிலையிலேயே,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்ப்பை மக்களிடம் விட்டுவிடும் முடிவை எடுக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து திரும்பியதும், கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

தாம், மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய நீண்ட கலந்துரையாடல்களின் பின்னரே, ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

இது எந்தளவுக்கு சரியானது என்பது கேள்விக்குரிய விவகாரமாக இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘ஊரோடு ஒத்தோடும்‘ முடிவை எடுத்துள்ளதையிட்டு ஆச்சரியப்படமுடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் ஒதுங்கிநிற்கும் முடிவை எடுத்திருந்தாலும் கூட, எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்காதுபோனாலும் கூட, தமிழ் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகின்றனர் என்பது ஏற்கெனவே தெளிவான விடயம்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில், அரச எதிர்ப்பு அலை மிகத் தீவிரமாக வீசுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. தெற்கில் இருப்பதை விட, வடக்கு, கிழக்கிலேயே அரச எதிர்ப்பு அலை தீவிரமாக உள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில், அரசாங்க எதிர்ப்பு அலை எந்தளவுக்கு மோசமாக வீசியது என்பதை எடுத்துப்பார்த்தால், இம்முறை நிலை எப்படியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

உள்ளூராட்சி, மாகாணசபை, ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்களில் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழ் வாக்காளர்கள் மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும், மாகாணசபைத் தேர்தலில் அரச தரப்பு மிகப்பெரியளவில் மண் கௌவ்வும் நிலையேற்பட்டது. அந்தப் படுதோல்வியிலிருந்து அரச தரப்பு இன்னமும் மீளாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலிலும் அதே நிலை தொடரும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்குமாறு கோரினாலும் சரி, கோராதுபோனாலும் சரி, தமிழ் வாக்காளர்களை அரச எதிர்ப்பு அலையே, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நோக்கி இழுத்துச் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியானதொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒதுங்கிநிற்பது சரியானதா என்ற கேள்வி அவர்கள் முன் எழுந்திருக்கலாம்.

அதாவது, ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்பும்போது, அதற்கு துணையாக செயற்படாமல் ஒதுங்கிநிற்பது, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்புடைய செயலாக அமையாது என்ற கருத்தும் அவர்களிடத்திலிருந்தது.

தமிழ் மக்களின் கருத்தை அறிந்து, அவர்களை அரசியல் ரீதியாக வழிநடத்தவேண்டிய பொறுப்பிலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, இந்த விவகாரத்தில் ஏதாவதொரு தெளிவான முடிவை அறிவிக்கவேண்டிய அழுத்தமும் காணப்பட்டது.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை மறைமுகமாக ஆதரிப்பதால், எதுவும் நடக்கப்போவதில்லை.

அதைவிட வெளிப்படையாக ஆதரித்துவிட்டுப் போகலாம் என்ற கருத்து மேலோங்கிய நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு விடயத்தில் மிகத்தெளிவான நிலைப்பாட்டை கையாண்டிருக்கிறது.
தமது முடிவை தெளிவுபடுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையை கவனமாக படித்துப் பார்ப்பவர்களுக்கு அந்த விடயம் தெளிவாக புரியும்.

அந்த அறிக்கையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது எந்த நம்பிக்கையையும் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவில்லை. அந்த அறிக்கை முழுமையாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்கவேண்டியதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தியுள்ளதை காணமுடிகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது ஏன் என்பதை நீண்ட பந்திகளில் விபரித்துவிட்டு, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள திட்டங்களில் தமக்கு உடன்பாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இதன் அடிப்படையிலேயே, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றது.

எனினும், அந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், என்ன நன்மை கிடைக்கும் என்றோ, அவர் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் குறித்தோ விபரிக்கப்படவில்லை.

அது, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ் வாக்காளர்களுக்காக எந்த வாக்குறுதியையும் கொடுக்க முன்வராத பலவீனத்தின் வெளிப்பாடு என்று கூட குறிப்பிடலாம்.

இந்நிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருந்தாலும், அவரது சார்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சி அமைத்தால், ஒருவேளை வடக்கு மாகாணசபை மீதான கெடுபிடிகள் தளர்ந்து, மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையில் புதிய உறவு ஏற்படக்கூடும்.

மீள்குடியமர்வு, காணி அபகரிப்பு தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் சில முன்னேற்றங்கள் எட்டப்படலாம். ஆனால், அதற்கப்பால் பெரிதாக எதிர்பார்க்கின்ற எந்த மாற்றத்தையும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் செய்யமுடியாது. அவரிடமிருந்து தமிழ் மக்கள் அதனை எதிர்பார்க்கவும் முடியாது.

தற்துணிவுடன் எதையும் செய்வதற்கு அவருக்கென்று ஒரு வலுவான கட்சியும் கிடையாது. அவரை சுற்றிவர நிற்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. இத்தகைய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கையூட்டமுடியாது.

அவ்வாறு நம்பிகையூட்டும் முடிவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்குமேயானால், அது அவர்கள் இழைக்கும் மிகப்பெரிய வரலாற்று தவறாகவே அமைந்துவிடும் ஆபத்துள்ளது. எனவே, மிகக்கவனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த முடிவை நாசூக்காகவும் வெளிப்படுத்தியிருக்கிறது.

என்றாலும், தமிழ் மக்களை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு கோரியதன் மூலம், அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, அதற்கேற்ப செயற்படவேண்டியதும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் அவற்றை தீர்க்கவும் முயற்சிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதையும் மறந்துவிடமுடியாது.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்துள்ள முடிவு, சிங்கள மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைப்பதை குறைத்துவிடும் என்றும் அது ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

கடந்தமுறை, ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவினால்;, சிங்கள மக்கள் பெருமளவில் அவருக்கு வாக்களிக்க தவறியதாக ஒரு கருத்து நிலவுகிறது. கடந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள மக்கள் மத்தியில் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்தியது போர் வெற்றி மட்டுமே.

போருக்கு தலைமை தாங்கிய தளபதியா அல்லது போரை நடத்திய நாட்டின் தலைவரா என்ற கேள்வி எழுந்தபோது, சிங்கள வாக்காளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே சார்ந்துநின்றனர்.

சரத் பொன்சேகா மீது மதிப்பு வைத்திருந்தாலும், நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு கட்சி அமைப்பு மற்றும் செல்வாக்கின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறமுடிந்தது. ஆனால், இப்போது போர் வெற்றி அலை இல்லை. அரச எதிர்ப்பு அலை மட்டுமே காணப்படுகிறது.

இத்தகைய நிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதால், சிங்கள வாக்காளர்கள், அவரை நிராகரிப்பர் என்று முற்றிலும் எதிர்பார்க்கமுடியாது. எவ்வாறாயினும், கணிசமான சிங்கள வாக்காளர்கள் அவ்வாறு சிந்திப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதை மறுக்கமுடியாது.

எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்ற ஒரே காரணத்துக்காக, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களால் தோற்கடிக்கப்படுவாரேயானால், அது இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதம் எப்போதும் அழியப்போவதில்லை என்பதையே எடுத்துக்காட்டும்.

அது, இலங்கைத்தீவு பூகோள ரீதியாக ஒன்றுபட்டிருந்தாலும், அக ரீதியாக பிளவுபட்டேயிருக்கிறது, அதனை ஒருபோதும் ஒட்டவைக்கவே முடியாது என்பதையே சுட்டிக்காட்டும்.

-கே.சஞ்சயன்-

Share.
Leave A Reply