பெங்களூரு: பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 29ம்தேதி சங்கீதா திடீரென இறந்துவிட்டதாக ஆசிரமம் சார்பில், அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் ஜான்சி ராணி, ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே சங்கீதாவின் பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சாவின் மர்மம் விலகும் என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும், ஆசிரமத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

இந்த பின்னணியில் ஜானஅசி ராணி இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நான், எனது மகள் சங்கீதாவையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினேன். பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகள் துறவி பயிற்சிக்காக சேர்ந்தார்.

நானும் அங்கு செல்வேன். இந்தநிலையில் நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ வெளியானபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அந்த மாதிரி ஒரு தவறான செய்தி கொண்ட வீடியோவை எனது மகள் தனது லேப்டாப் மற்றும் பென் டிரைவில் வைத்திருந்தார். அதனுடன் ஊருக்கு வந்தாள்.

ஆசிரமத்தில் தவறான செயல்கள் நடக்கிறது என்றாள். சங்கீதா ஊருக்கு வந்தவுடன், அம்சானந்தா மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் சங்கீதாவின் லேப்டாப் மற்றும் பென்டிரைவை வாங்கி அதில் இருந்தவற்றை அழித்தனர்.

எங்களை நித்தியானந்தாவிடம் அழைத்துச் சென்றனர். அங்கு நித்தியானந்தா என்னிடம், நானும் ரஞ்சிதாவும் இருந்த வீடியோவை வெளியிட்டாங்க. அந்த வீடியோ வைத்தே என்னை ஒண்ணும் பண்ண முடியல.

உன் பொண்ணு லேப்டாப்ல இருக்கும் வீடியோவை வைத்து என்ன பண்ண முடியும் என்று மிரட்டினார். நான் என் பெண்ணை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன்.

முதலில் விட்டுவிடுவதாக சொன்ன நித்தியானந்தா, அதன் பிறகு என் மகளை தனிமை சிறையில் அடைத்தார். நடிகை ரஞ்சிதா என் மகளை பளார் என்று அறைந்தார்.

ஒன்றரை வருடமாக நான் என் மகளை பார்க்க சென்றால், தூரத்தில் நிற்க வைத்து காட்டுவார்கள். பேச விடமாட்டார்கள். அந்த ஆசிரமத்தில் நிறைய மர்மங்கள் உள்ளது. அங்கு நிறைய தவறுகள் நடக்கிறது.

என் கண் முன்பாகவே சிலையை ஒழுங்காக அலங்காரம் செய்யவில்லை என்று ஒரு சீடரை 10 பேர் சேர்ந்து அடித்ததை பார்த்தேன்.

அதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரமத்தில் புகார் செய்பவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்கள் தவறான செக்ஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை நித்தியானந்தாவே தயாரிப்பார். என் மகளை அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னபோது என்னை மிரட்டினார்.

என் மகள் தைரியமானவள். தவறுகளை தட்டிக்கேட்பவள். நான் எனது ஊரில் இருந்தபோது எனக்கு திடீரென போன் வந்தது. சங்கீதா மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார்கள். நான் பதறிப்போய் வந்தேன். வந்த இடத்தில் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

என் மகளின் உடலை தனியார் மருத்துவமனையில் சட்ட விரோதமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனது மகளின் உதடு மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது.

எனது மகள் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் போலி வீடியோவை தயாரித்து நித்தியானந்தா இணையதளங்களில் பரப்பிவிட்டுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திங்கள்கிழமை கர்நாடக உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளோம்.

நித்தியானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன். நித்தியானந்தா தவறான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதற்கான நிறைய ஆதாங்கள் என்னிடம் உள்ளது.

அதை நான் இப்போது சொன்னால் ஆசிரமத்தில் தங்கியிருக்கக் கூடிய எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு வரும். அதனால் இப்போது அதை நான் சொல்லவில்லை.

விரைவில் இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவேன் என்றார் ஜான்சி ராணி.

Share.
Leave A Reply