தேசிய அரசாங்கம் அமையப்பெற்று சரியான பாதையில் பயணிக்குமானால் அதில் இணைவது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆராயும். ஆனால் அமைச்சுப்பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த செயற்பாடுகளை கையாள்வதற்கு விரைவில் விசேட குழுவொன்று நியமிக்கப்ப டவேண்டுமென்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கில் அமைச்சர்களாகவும், அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவிவகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை புதிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு,
சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக தடுப்பில் உள்ளவர்களின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகணங்களில் ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், அரசாங்க அதிபர்களின் இட மாற்றம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு முதலைமைச்சர் மற்றும் அப்பிரதேசங்களில் உள்ள சிரேஷ் அரசியல் பிரதிநிதி ஆகியோரைக் கொண்ட இணைத்தலைமை நியமனம் உள்ளிட்ட விடங்கள் தொடர்பாகவும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நீடித்த இச்சந்திப்பில் அரசாங்கத்தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபேகோன் பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது,
இன்றையதினம்(நேற்று) புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அவர் தலைமையிலான அரசாங்கத்துடன் முதற் சந்திப்பில் நாம் கலந்து கொண்டிருந்தோம். இதன் போது பொதுமக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.
சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம்
குறிப்பாக கடந்த 30வருடங்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறமுடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் தேவைக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினர் இம்மக்களின் காணிகளை கையகப்படுத்தியுள்ளனர்.
உதராணமாக யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு, கிழக்குமாகாணத்தில் சம்பூர், வன்னிப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் பரவிப்பாஞ்சான், உள்ளிட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் கையளிக்கப்படாதிருக்கின்றன.
இதனால் அவர்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறமுடியாதநிலையில் முகாம்களில் அகதி வாழ்வை தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்காது முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என நாம் எடுத்துக் கூறினோம்.
அதன்போது யுத்தம் மற்றும் அசாதாரண நிலைமைகளால் இடம்பெயர்ந்துள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளிட்ட அனைவரும் அவர்களுடை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படுவதை கொள்கை ரீதியாக அரசாங்கத்தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன் அம்மக்கள் மீளவும் மீள்குடியேறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரை உள்வாங்கியதான விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக தடுப்பில் உள்ளவர்களின் விடுதலை
யுத்தத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கையில் சாதரணமானவர்கள் நீண்டகாலமாக தடுப்புக்களில் தடுத்து கைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசியல் நோக்கங்களுக்காகவும் , சந்தேகத்தின் பேரிலும் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சமூகத்துடன் இணைவதற்கு ஒரு சந்தர்ப்பமளிக்கும் வகையில் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் கடந்த காலத்தில் ஜே.பி.யின் இரண்டு கிளர்ச்சிகளின் போது கைது செய்யப்பட்டவர்கள் பிற்காலத்தில் பொதுமன்னிப்பளித்த வரலாறுகளும் இந்த நாட்டில் காணப்படுகின்றன என்பதையும் எடுத்துக் கூறினோம்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிருவாகம்
அதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கடமையாற்றிய அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாற்றப்படவேண்டும். சிவில் சமூகத்ததைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்படவேண்டும். மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் அனைத்து மாவட்டங்களில் பதவி வகிக்கும் சிங்கள அரசாங்க அதிபர்களும் இடமாற்றப்படவேண்டும்.
அத்துடன் கடந்த அரசாங்கத்தில் மக்களின் அன்றாட செயற்பாடுகளை கையாள்வதற்காக அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு சரியான முறையில் செயற்படாத அதிகாரிகளும் இடமாற்றப்படவேண்டும் என்றும் நாம் கோரினோம்.
ஒருங்கிணைப்புக்குழு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த முதலமைச்சரையும் அம்மாகாணங்களிலுள்ள மாவட்டங்களில் காணப்படும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரை இணைத்தலைவர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்றார்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வௌிவிவகாரச் செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறுகையில்,
நாம் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக தடுப்பில் உள்ளவர்களின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாண நிருவாகம், ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.
தேசிய அரசாங்கம்
அதேநேரம் குறித்த சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவ்விடயம் தொடர்பாக எமது நிலைப்பாட்டை அவர்களிடத்தில் தௌிவாக குறிப்பிட்டோம்.
அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டது என தீர்மானித்துள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கமொன்று அமையப்பெற்று அதன் செயற்பாடுகள் சரியான பதையில் பயணிக்குமானால் அதில் இணைவது தொடர்பில் நாம் உரிய நேரத்தில் ஆராயந்து பரிசீலனை மேற்கொள்வோம். இன்றைய நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடனடியாக இணைந்து கொள்ளும் நிலையில் இல்லை என எடுத்துக் கூறினோம்.
தமிழர் விரோதிகளை இணைக்க கூடாது
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்களாவும் அரசியல் பிரதிநிதிகளா கவும் பதவிகளை வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்தினோம்.
இனப்பிரச்சினை தீர்வு
மேலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள் வதற்கான எமது நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தியதுடன் தீர்வு நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இருதரப்பினரையும் உள்ளடக்கிய விசேட குழுவொன்றையும் அமைக்குமாறு நாம் கோரிக்கை விடுத்தோம் அதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடைந்துவருவது தொடர்பில் எடுத்துக்கூறி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். இந்த விடயம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்…..………………………………………………………………………………
//தமிழர் விரோதிகளை இணைக்க கூடாது//
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைச்சர்களாவும் அரசியல் பிரதிநிதிகளாகவும் பதவிகளை வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதை மிகவும் ஆணித்தனமாக வலியுறுத்தினோம்.
கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட இந்த கோரிக்கையின் அடிப்படை சாரம்சம் என்ன தெிரியுமா?
சுயநலவாதம்தான்.
தாங்கள் மட்டுமே வட- கிழக்கை ஆளவேண்டும் என்கின்ற சுயநலவாத கொள்கையாகும். சிங்களவர்கள் எல்லோரையும் அரவணைத்து, அனுசரித்து போகின்றார்கள்.
ஆனால்…. தமிழர்கள் மட்டும் தான் “நண்டு மாதிரி” எந்த தமிழனையும் மேலே போகவிடமாட்டான். சிங்களவர்கள் அல்லது வெள்ளைக்காரர்களுடன் தமிழர்கள் ஒத்துபோவார்கள். தமிழனோடு தான் தமிழன் ஒத்துபோகமாட்டான்.
மைத்திரிபால சேனாவும் முன்னைய தமிழர் விரேர்த அரசாங்கத்தில் தான் இருந்தவர். ரிசாத் பதியுதீனும் தமிழர் விரேத நடவடிக்கையில் ஈடுபட்டவர்தான்.
அதைவிட மிகமோசமான தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் சரத்பொன்சேகா என்பவர்.
தமிழர்களை அழித்த சரத்பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கவேண்டாம் என கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை முன்வைப்பார்களா?