94 ஐபோன் கையடக்கத் தொலைபேசிகளை உடலில் பட்டி மூலம் கட்டி மறைத்து வைத்து கடத்திய நபரொருவர் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கும் ஹொங்கொங்கிற்குமிடையிலான புதிய துறைமுகத்தில் வைத்தே மேற்படி கடத்தலில் ஈடுபட்டவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
ஹொங்கொங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் 7 வருட சிறைத் தண்டனையையும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பண விதிப்பையும் எதிர்கொண்டுள்ளார்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட அனைத்து ஐபோன்களும் சீனாவில் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த கையடக்கத் தொலைபேசிகள் உலக நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் அவற்றை உள்நாட்டில் கொள்வனவு செய்வது சவால்மிக்கதாகவுள்ளது.
16 ஜிபி ஐபோன் 6 கையடக்கத் தொலைபேசியின் விலை 577 ஸ்ரேலிங் பவுணாகும். இது சீனாவின் சராசரி வருடாந்த ஊதியத்தில் 18 சதவீதமாகும்.
அதன் காரணமாக சீனாவுக்கு வெளியில் புதிய அல்லது இரண்டாம் தர கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்து அவற்றை கடத்தி வந்து விற்பது இலாபம் தரக்கூடிய வர்த்தகமாக உள்ளது.