மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும் சாட்சியங்களும் கிடைத்திருப்பதால் அவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சுச் செயலாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
15 மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் 20 பேர் தொடர்பில் போதிய ஆவணங்கள் கிட்டியிருப்பதாக சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திடமிருந்து 6000 மில்லியன் ரூபா மோசடி , போக்குவரத்து அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்பட்ட 200 மில்லியன் ரூபா மோசடி, சஜின்வாஸ் குணவர்தனவினால் கட்டப்பட்ட பொரளையில் 6 மாடிகளைக் கொண்ட வீடு அத்துடன், அவரால் வெளிநாட்டுப் பணம் 200 மில்லியன் மோசடி போன்ற பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
20 பேரதும் ஆவணங்களை தனித்தனியே தயாரித்துவருவதோடு அவர்களோடு இணைந்து செயற்பட்ட அமைச்சுச் செயலாளர்களும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், கேகாலை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இந்த அமைச்சர்களுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்து வழக்குத் தொடரவிருப்பதாகவும் ஜயசுந்தர தெரிவித்தார்.
மகிந்த ஆட்சியின் ஊழல், மோசடியை விசாரிக்க தனியான குழு அமைக்க முடிவு
17-01-2014
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை தேடியறிய விசேட பொறிமுறையொன்றை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அதற்காக தனியான குழுவொன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தீர்மானித்திருப்பதாகவும் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் சுஜீவ சேரசிங்க தெரிவித்தார்.
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பிரதான அம்சமாக அடுத்த ஒருவாரகாலத்துக்குள் ஊழல், மோசடிகள் தொடர்பான முழு அளவிலான அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்காக விசேட குழுவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஊழல், மோசடிகளை தேடியறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குப் புறம்பானதாக செயற்படும்.
100 நாள் வேலைத் திட்டத்தில் அடுத்துவரும் நாட்கள் எமக்கு முக்கியமானவையாக அமையும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை வெற்றி கொள்ளத் திட்டமிட்டுச் செயற்பட்டுவருகின்றோம்.
கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் தமிழீழம் உருவாக மீண்டும் வழிவகுக்கும்
17-01-2014
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் உருவாக வழி வகுக்குமென முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்திரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சி தலைமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் செல்வாக்கு கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.
இதுபோன்ற செயற்பாடு தேர்தலின் பின்னர் நிகழும் என நாம் முன்னரே எதிர்வுகூறியிருந்தோம். அது இன்று நிதர்சனம் ஆகியுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வளப்படுத்தும் செயற்பாடுகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுவ ருகிறது.
வடக்கு மாகாணத்தில் ஆட்சி ஆதிகாரத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டால் வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து தமிழீழத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபடும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமுமில்லை.