நாட்டில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூறாவளி தொடர்ந்து வலுவடைந்தே செல்கின்றது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்து ஜனாதிபதி யாக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்தனர்.
ஆனால் தேர்தலின் பின்னர் அதனைவிட மிகப்பெரிய மாற்றங்கள் தற்போது அரசியலில் ஏற்பட்டுவருகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தானாக முன்வந்து இந்த பதவியை வழங்கியுள்ளார்.
இதன்மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 120 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ஆராய்வதற்கு முன்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்ன செய்யப்போகின்றார் என்பதை பார்க்கவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்துவிட்டேன் என்பதனை உணர்ந்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பேன் என்று குறிப்பிட்டார்.
பின்னர் கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கூட்டத்தை நடத்திய மஹிந்த ராஜபக் ஷ இது தற்காலிக பின்னடைவு என்றும் மீண்டும் மக்கள் மத்தியில் வருவேன் என்றும் கூறினார்.
மேலும் அந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றுகையில் சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக் ஷவே இருப்பதாகவும் அதற்கு கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவில் 42 உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அதேநேரத்தில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவின் இல்லத்தில் கூட்டம் ஒன்றை நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவை கட்சியின் தலைவராக தெரிவு செய்துள்ளதாக அறிவித்தனர்.
அந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.நாவின்ன, பியசேன கமகே, சரத் அமுனுகம, ரெஜினோல்ட் குரே, அதாவுட செனவிரத்ன, ஜனக பண்டார தென்னகோன், விஜித் விஜிதமுனி சொய்சா, ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
அதனை மறுத்திருந்த சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா மஹிந்த ராஜபக் ஷவே தலைவர் என்று உறுதியாக கூறினார்.
எனினும் சுதந்திரக் கட்சியின் தலைமை குறித்த நெருக்கடிகள் நீடித்தே வந்தன. சுதந்திரக்கட்சியிலிருந்து தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக்கம் வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஒன்று புதன்கிழமை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் கட்சியின் தலை மைப் பதவியை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக் ஷ தயாரானார். இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப்போகின்றாரா? அல்லது தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகின்றாரா? என்பது விடையில்லாத கேள்விகளாக உள்ளன.
பெரும்பாலும் அரசியலில் இருந்து ஓய்வுபெறலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் கடந்த 44 வருடங்களாக செயற்பாட்டு அரசியலில் இருந்து வந்த மஹிந்த ராஜபக் ஷ ஓய்வாக இருப்பாரா என்பது எழுப்பப்படும கேள்வியாகும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அரசியலில் ஏற்பட்ட சூறாவளி நிலையானது பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அசைக்க முடியாது என பார்க்கப்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி அரசாங்கம் மக்களினால் வீழ்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில். எதிர்காலத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
தற்போது சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவுக்கு சென்றுள்ளமையினால் தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்புக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது இங்கு ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
இது குறித்து இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு வரைவிலக்கணம் ஒன்றை தருகின்றார். நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிறிசேன தற்போது எதிர்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலைமையானது நாட்டின் அரசியலில் ஒரு குழப்பகரமான தோற்றத்தையே காட்டுகின்றது. காரணம் தற்போது ஆளும் கட்சியாக இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ஆகியுள்ள மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் வந்துள்ளார்.
அப்படியானால் நாட்டின் ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவரின் பாத்திரத்தையும் வகிக்கப்போகின்றாரா? ஆனால் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு இது எந்தப் பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தாது. காரணம் 100 நாள் வேலைத்திட்டம் என்பது சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ளது.
ஆனால் 100 நாட்களின் பின்னர் நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கப்போகின்றது. ?
அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிடும். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை வாக்குகளினால் பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறு பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால் அந்தக் கட்சியிலிருந்தே பிரதமர் வருவார். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் சர்வகட்சி அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு அமைக்கப்பட்டாலும் பெரும்பான்மை ஆசனங்களை பெறும் கட்சிக்கே பிரதமர் பதவி கிடைக்கும்.
மறுபுறம் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும். அதாவது எதிர்க்கட்சியின் தலைவராக ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர் இருப்பார்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றின் ஆதரவுடனேயே ஜனாதிபதி மைத்திரிபால ஆட்சிக்கு வந்தார்.
இந்நிலையில் இந்தக் கட்சிகளை எதிர்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சிக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்வாரா?
அதனால் தான் இதனை குழப்பமான நிலை என்று கூறுகின்றேன். பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றால் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் பதவியை இழக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
எனவே தற்போது 100 நாள் வேலைத்திட்டம் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பின்னர் அரசியலில் எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று பார்க்கவேண்டியுள்ளது.
இது இவ்வாறு இருக்க தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின்படி ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும்.
இம்மாதம் 19 ஆம் திகதி – பாராளுமன்ற அமர்வை கூட்டுதல்
20 ஆம் திகதி – நிலையியல் கட்டளைச் சட்டத்தை திருத்தி கண்காணிப்பு தெரிவுக்குழுக்களுக்கு அமைச்சர்கள் அல்லாத எம்.பி. க்களை நியமித்து கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கும் வகையில் தலைவர்களை நியமித்தல்
21 ஆம் திகதி – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக அமைச்சரவையின் ஊடாக பாராளுமன்றம் மற்றும் சம்மந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் உட்பட்ட அரசியலமைப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல்,
18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துசெய்தல், சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு , பொலிஸ் ஆணைக்குழு அரச சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான ஆணைக்குழு, மனித உரிமைக்கான ஆணைக்குழு ஆகியவை உள்ளிட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து முடியுமானவரை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தல்.
28 ஆம் திகதி – விருப்பு வாக்கு முறைமையை முழுமையாக ஒழித்து அனைத்து தேர்தல் தொகுதிக்கும் எம்.பி. ஒருவர் கிடைக்கும் வகையில் தொகுதி முறைமை மற்றும் பிரதேசநிதித்துவ முறை உள்ளிட்ட கலப்பு முறைமையை கொண்ட தேர்தல் முறைக்கு செல்வதற்கு சர்வகட்சி குழுவை நியமித்தல்
29 ஆம் திகதி – அவசர நிவாரணங்களைக்கொண்டு மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப விசேட செயற்பாடுகளின் ஊடான இடைக்கால வரவு – செலவுத்திட்டம் ஒன்றை முன்வைத்தல்
30 ஆம் திகதி – அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைத்து சம்பளத்தை அதிகரித்தல்
2015 பெப்ரவரி
02 ஆம் திகதி – மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒழுக்கக் கோவையை சட்டமாக நிறைவேற்றுதல்
04 ஆம் திகதி – ஜனநாயகம் நல்லாட்சி மக்கள் இறைமை என்பவற்றை மீண்டும் நிலைநாட்டும் இலங்கையின் புதிய சுதந்திர தினம்
05 ஆம் திகதி – கடந்தகாலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் குறித்து ஆராய விசேட நடுவர்கள் சபை நியமிக்கப்படும்
06 ஆம் திகதி – தேசிய மருந்துக் கொள்கையை அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
18 ஆம் திகதி – சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் நியமனங்களை வழங்கல்
19 ஆம் திகதி – தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை முன்வைத்தல்
20 ஆம் திகதி – தகவல் அறியும் சட்டமூலத்தை முன்வைத்தல்
2015 மார்ச்
02 ஆம் திகதி – புதிய தேர்தல் முறை குறித்து குழுவின் யோசனைகளை பெற்று அதற்கேற்றவாறு சட்டதிட்டங்களை தீட்டுதல்
17 ஆம் திகதி – புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுதல்
18 ஆம் திகதி – தேசிய மருந்துக் கொள்கையை நிறைவேற்றுதல்
19ஆம் திகதி – தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றுதல்
20 ஆம் திகதி – தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுதல்
23 ஆம் திகதி – அரசியலமைப்பு சபையை நிறுவி சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட வேறு நியமனங்களையும் வழங்கல்.
ஏப்ரல் மாதம்
20 ஆம் திகதி – நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக அமைச்சரவை ஊடாக பாராளுமன்றத்துடன் தொடர்புடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்புக் கட்டமைப்பை நிறுவுதல்
23 ஆம் திகதி – பாராளுமன்றத்தை கலைத்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துதல் என்பனவே இந்த 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாராளுமன்றத்தை தேர்தலுக்குப் பின்னர் அதிக ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதமர் பதவியும் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதி பிரதமர் பதவியும் வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையைக்கொண்ட சர்வகட்சி அரசாங்கம் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்தலின் பின்னர் அனைத்துக் கட்சிக ளும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டின் தேசியப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டால் அது சிறந்த விடயமாகவே அமையும்.
எனினும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் எவ்வாறான நிலை உருவாகும் என்பதனை தேர்தலின் பின்னரே நாம் அவதானிக்கலாம். ஆனால் தற்போது நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் மாற்றங்களை பார்க்கும்போது அரசியலில் எவ்வாறான மாற்றங்களும் ஏற்படலாம் என்பதே யதார்த்தமாகும்.
–ரொபட் அன்டனி–