சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பிலியந்தலைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பதிவு செய்யப்படாத, வேகப்பந்தயக் கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
பதிவு செய்யப்படாத இந்த கார், தனது நண்பருக்குச் சொந்தமானது என்று வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.
எனினும் அதற்குரிய எந்த ஆவணத்தையும் அவர் வழங்கவில்லை.
இது மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களால் பயன்படுத்தப்பட்ட வேகப் பந்தயக் கார்களில் ஒன்று எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் சிக்கின
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் உருவப்படங்கள் பொறித்த சுவர் 68,000 சுவர் மணிக்கூடுகளை சிறிலங்கா காவல்துறை இன்று கைப்பற்றியுள்ளது.
சபுகஸ்கந்தை, மாபிம பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டன.
சந்தேகத்துக்கிடமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலில், இவை கைப்பற்றப்பட்டன.
இந்தக் களஞ்சியசாலையை மாதமொன்றுக்கு 1.5 மில்லியன் ரூபா வாடகைக்கு துறைமுக அதிகாரசபைக்கு வழங்கியிருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து 3000 துப்பாக்கிகள் மீட்பு
காலித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து 3000 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
‘மாகாநுவர நவுகாவ’ என்ற பெயரில், சிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பலில், 12 கொள்கலன்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில், ரி-56 துப்பாக்கிகள் 84 அடங்குவதாகவும், ஏனையவை அரை தன்னியக்க மற்றும் தன்னியக்கத் துப்பாக்கிகள் என்றும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்
இதுதொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல் கோத்தாபய ராஜபக்சவினால், மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த பாலசூரியவும் பறந்தார்
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அபுதாபி இராஜியத்தை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார்.
இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான என்று கூறப்படுகின்றது.
கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்தே பொலிஸார் அங்கு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.