தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சரியாக 30 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படும் தமிழக காவல்துறை, ராமஜெயத்தின் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. திருச்சி மாநகர காவல்துறை வசம் இருந்த இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறை வசம் போன பின்பும், எந்த முன்னேற்றமும் இல்லை.

Ramajayam250Ramajayam
இந்நிலையில், கடந்த மாதம் ராமஜெயத்தின் மனைவி லதா, உண்மைகளை வெளிக்கொண்டுவர, ‘வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்,  போலீஸாரின் காலதாமதத்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை இழந்துவிட்டோம்’  என வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு மட்டுமல்லாமல்  தமிழக அரசுக்கும் பெரும் தலைவலியாக உள்ள  இந்த வழக்கில் நடந்தது என்ன என தெரிந்துகொள்ள  தி.மு.க.வினர் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் பலரும் ஆர்வமாக உள்ள நிலையில்தான்  ராமஜெயம் கொலை வழக்கு குறித்த இந்த மினித்தொடர்…

அண்ணன் அமைச்சர்…  தம்பி எம்.டி!

KN-Nehru-2003KN-Nehru

திருச்சியில் இப்போதும் கே.என்.நேருவை அமைச்சர் என்றே அழைக்கிறார்கள். அவரது தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இத்தனை வருடங்கள் ஆகியும் அவரை பெயர் குறிப்பிட்டு யாரும் சொல்வது இல்லை. எம்.டி என்றே அழைக்கிறார்கள்.

திருச்சி தி.மு.க.வில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தி.மு.க. மாவட்டச் செயலாளராக விளங்குபவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இவரின் அரசியலுக்கு முதுகெலும்பாக, நிழலாக வலம் வந்தவர்தான்  ராமஜெயம்.

தி.மு.க. வரலாற்றில் பிரமாண்டமான மாநாடுகளை நடத்திக்காட்டியவர்  நேரு மட்டும்தான். கடைசியாக நடைபெற்ற தி.மு.க. மாநாட்டைத் தவிர, அத்தனையையும் அண்ணனுக்கு நிழலாக இருந்து திருச்சியில் தி.மு.க.வின் மூன்று மாநில மாநாடுகளை வெற்றி மாநாடாக நடத்தியதும்,  தி.மு.க.வுக்கு  சொந்தமாக கலைஞர் அறிவாலயம் கட்டி அனைவரையும் பிரமிக்க வைத்ததும் ராமஜெயம்தான்.

பெங்களூரில் எம்.பி.ஏ. முடித்த கையோடு, பிசினஸ் செய்ய ஆரம்பித்தார் ராமஜெயம்.  மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலங்களில் போர்வெல் போடும் கான்ட்ராக்ட், ஆந்திராவில் சுரங்கத் தொழில், இந்தோனேஷி​யாவில் நிலக்கரி குவாரி, புதுக்கோட்டை எல்லையில் கிரானைட் குவாரி, ஜனனி குரூப் ஆஃப் கம்பெனிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்ட தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்து மிகப்பெரிய தொழில் அதிபராக விளங்கினார்.

நேரு 1989ல் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக அமர்ந்ததும், தனது வெளிமாநிலப் பிசினஸ் விஷயங்களில் இருந்து ஒதுங்கிய ராமஜெயம், திருச்சியில் நிரந்தரமாகத் தங்கி பிசினஸ்களை கவனித்து வந்தார்.

அண்ணனுக்கு ஒத்தாசையாக அரசியலுக்கு வந்தாலும், தனது அண்ணன் நேருவைப்போல் தீவிர அரசியலில் நேரடியாக இறங்காமல், அவருக்கு பக்கபலமாக அரசியல் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். அதனால், பல நிறுவனங்களுக்கு எம்.டி.யாக செயல்பட்ட ராமஜெயத்தை ‘எம்.டி’ என்றே திருச்சிவாசிகள் அழைத்தார்கள்.

இப்படி கே.என்.நேருவுக்கு நிழலாக இருந்ததால், நேரடி அரசியலில் களம் இறங்காமல் நிழல் அரசியலில் திருச்சியில் கொடிகட்டி பறந்தார். இது எந்தளவுக்கு என்று உதாரணம் சொன்னால், பளிச்சென்று புரியும்.

jaya-compian-2005

டந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிக்கு பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிரசாரத்தின்போது தி.மு.க.வையோ, அதன் அமைச்சர்களையோ விமர்சிக்காமல், ராமஜெயத்தை பற்றியும் அவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அதிக நேரம் பேசினார்.

பதிலடியாக ராமஜெயம், ‘ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா ஜெயிக்கவே முடியாது’ என சவால்விட்டு  ஸ்ரீரங்கத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்தனுக்காக தேர்தல் வேலை செய்தார். அந்தளவுக்கு திருச்சியின் அதிகார மையமாக விளங்கினார் ராமஜெயம்.

கடந்த ஸ்ரீரங்கம் தேர்தலில் அதிகாரப்போர் நடத்திய ஜெயலிதாவும், ராமஜெயமும் இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய முடியாத நிலை. ஜெயலலிதா பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ளதால் பிரசாரத்திற்கு போக முடியாமல் முடங்கி கிடக்க, மறுபுறம், ராமஜெயம் மீண்டு வரமுடியாத வகையில் கொலை செய்யப்பட்டு விட்டதுதான் வேதனை.

ராமஜெயத்தைப் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான விவரங்கள் அடுத்து வரும் நாட்களில் பார்ப்போம்…

 

Share.
Leave A Reply